தமிழ்நாடு காவல்துறையில் பணியாற்றும் பெண் காவலர்கள் மற்றும் உயர் அதிகாரிகளை பற்றி தனியார் யூட்டிப் சேனலில் அவதூறு பேசியதாக சவுக்குசங்கர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு அவரை தேனியில் வைத்து காவல்துறையினர் கைது செய்தனர். தொடர்ந்து அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு கோவை மத்திய சிறை அடைக்கப்பட்டார். மேலும் அவர் குண்டர் சட்டத்தில் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடதக்கது.


அதேசமயம் திருச்சி மாவட்டம் முசிறி டி.எஸ்.பி யாஸ்மின் கொடுத்த புகாரில் கடந்த வாரம் சவுக்கு சங்கர் திருச்சி நீதிமன்றத்தில் ஆஜரானர். இந்த வழக்கை தீவிரமாக விசாரணை செய்த நீதிமன்ற நடுவர் ஜெயபிரதா ஒருநாள் போலீஸ் கஸ்டடிக்கு உத்தரவிட்டார். சவுக்கு சங்கரை திருச்சி ராம்ஜி நகரில் வைத்து விடிய விடிய போலீஸார் விசாரணை மேற்க்கொண்டனர். அதன் பின் மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.


இந்நிலையில் சவுக்கு சங்கருக்கு நீதிமன்ற காவல் வழங்கி உத்தரவு பிறப்பிக்கபட்டது. இதனை தொடர்ந்து சவுக்கு சங்கர் எனக்கு கோவை சிறை வேண்டாம், திருச்சி மத்திய சிறை ஒதுக்குங்கள் என்று கோரிக்கை வைத்தார். இதுக்குறித்து பரிசீலனை செய்யபடும் எனறு நீதிமன்ற நடுவர் கூறினார். பின்பு கோவைக்கு சிறைக்கு சவுக்கு சங்கர் போலீஸ் பாதுகாப்புடன் அனுப்பி வைக்கபட்டார். 




ரெட் பிக்ஸ் ஆசிரியர் பெலிக்ஸ் ஜெரால்டு திருச்சி நீதிமன்றத்தில் ஆஜர்


மேலும், இந்த நிகழ்ச்சியை நேர்காணலை ஒளிபரப்பு செய்த redpix ஆசிரியர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரின் தனிப்படை ஆய்வாளர் வீரமணி தலைமையிலான காவல்துறையினர் டெல்லியில் கடந்த 10ஆம் தேதி இரவு பெலிக்ஸ் ஜெரால்டை கைது செய்தனர். தொடர்ந்து அவரை 13ஆம் தேதி திருச்சி சுப்ரமணியபுரத்தில் உள்ள சைபர் கிரைம் அலுவலகத்திற்கு கொண்டு வரப்பட்டு விசாரணை மேற்கொண்டனர்.


இதனை தொடர்ந்து பெலிக்ஸ் ஜெரால்டை திருச்சி கூடுதல் மகிளா நீதிமன்ற நீதிபதி ஜெயப்பிரதா முன்பு அஜர்படுத்தப்பட்டார். தொடர்ந்து (27.05.2024) வரை நீதிமன்ற காவலுக்கு உத்தரவிட்டார். இந்நிலையில் நேற்று முந்தினம் பெலிக்ஸ் ஜெரால்டை விசாரணை நடத்த காவல்துறையினர் திருச்சி கூடுதல் மகிளா நீதிமன்ற நீதிபதி ஜெயப்பிரதா முன்னிலையில் மனு தாக்கல் செய்யப்பட்டது. காவல்துறை தரப்பில் 7 நாள் கஸ்டடி கேட்கப்பட்ட நிலையில், நீதிபதி ஒரு நாள் போலீஸ் கஸ்டடியில் எடுத்து விசாரிக்க அனுமதி அளித்தார்.


ஒரு நாள் விசாரணை முடிந்த பின்னர் நேற்று முந்தினம் மதியம் திருச்சி அரசு மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை செய்த பின்னர் திருச்சி கூடுதல் மகிளா நீதிமன்றத்தில் நீதிபதி ஜெயப்பிரதா முன்னிலையில் காவல்துறையினர் ஆஜர்படுத்தினர். நீதிபதியிடம் காவல்துறை விசாரணையில் இருந்த பொழுது விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்ததாக இரு தரப்பினரும் தெரிவித்தனர். இதனையடுத்து ஏற்கனவே 27-ம் தேதி வரை விதிக்கப்பட்ட நீதிமன்ற காவலின்படி அவர் திருச்சி மத்திய சிறைக்கு கொண்டு செல்லப்பட்டார்.




பெலிக்ஸ் ஜெரால்டு நிபந்தனை ஜாமீன் - திருச்சி மகிளா நீதிமன்றம் உத்தரவு


இந்நிலையில், நேற்று (மே 22) ரெட் பிக்ஸ் ஆசிரியர் பெலிக்ஸ் ஜெரால்டு ஜாமீன் மனு மீதான விசாரணை, திருச்சி மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்றது. பெலிக்ஸ் தரப்பு வழக்கறிஞர் கென்னடி ஆஜராகி வாதங்களை முன் வைத்து, பெலிக்ஸ் ஜெரால்டுக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.


முசிறி டிஎஸ்பி யாஸ்மின் கொடுத்த புகாரின் பேரில், திருச்சி சைபர் கிரைம் குற்றவியல் காவல் நிலையத்தில் தொடரப்பட்ட வழக்கில், திருச்சி கூடுதல் மகிளா நீதிமன்றம் பெலிக்ஸ் ஜெரால்டுக்கு நிபந்தனைகளுடன் ஜாமீன் வழங்கி உள்ளது. மேலும், பெலிக்ஸ் ஜெரால்டு 6 மாதங்களுக்கு திருச்சி சைபர் கிரைம் காவல் நிலையத்தில் கையெழுத்திட வேண்டும்.


ஏற்கனவே, கோவையில் ஒரு வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருப்பதால், அந்த வழக்கிற்கு ஜாமீன் கிடைக்கும் வரை பெலிக்ஸ் ஜெரால்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டு இருப்பார். கோயம்புத்தூரில் பதியப்பட்ட வழக்கில் மட்டும் கைதாகி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது