தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் 70-வது பிறந்தநாள் கொண்டாட்டமாக திருச்சி மாவட்ட தி.மு.க. சார்பில் `எங்கள் முதல்வர் எங்கள் பெருமை' என்ற தலைப்பில் மு.க.ஸ்டாலின் வாழ்க்கை வரலாற்று புகைப்பட கண்காட்சி திருச்சி புனித ஜோசப் கல்லூரி வளாகத்தில் கடந்த 23-ந் தேதி தொடங்கியது. இக்கண்காட்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் சிறு வயது முதல் தற்போது வரையிலான அரிய புகைப்படங்களும், மிசா காலத்தில் சிறையில் அவர் அனுபவித்த சித்ரவதையை விளக்கும் வகையில் சிலையும், அவர் சைக்கிள் ஓட்டுவது போன்ற சிலையும் தத்ரூபமாக வைக்கப்பட்டிருந்தது. இந்த கண்காட்சி நேற்றுடன் நிறைவடைந்தது. நிறைவுநாளான நேற்று தி.மு.க. இளைஞர் அணி செயலாளரும், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் பார்வையிட்டார். அதன் பின்னர் வருகை புத்தகத்தில் அவர் கையெழுத்திட்டார். அதனை தொடர்ந்து நிருபர்களுக்கு உதயநிதி ஸ்டாலின் பேட்டியளித்த போது கூறியது...
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்க்கை வரலாற்று புகைப்பட கண்காட்சியை சென்னையில் நடைபெற்றபோது ஒரு முறை பார்த்திருந்தேன். அதன்பின் தற்போது திருச்சியில் நடைபெறும் கண்காட்சியை பார்வையிட்டேன். ஒவ்வொரு முறையும் இந்த புகைப்பட கண்காட்சியை பார்க்கும்போது எனக்கு ஒருவித அனுபவம் ஏற்படுகிறது. உழைப்பு என்றால் மு.க.ஸ்டாலின் என கலைஞரால் பாராட்டப்பட்டவர். அதற்கு சான்றாக இந்த புகைப்பட கண்காட்சி விளங்கியிருக்கிறது. கடந்த 9 நாட்களில் கண்காட்சியை 1 லட்சத்திற்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் பார்வையிட்டுள்ளனர். என்னுடைய துறையின் சார்பில் சட்டசபையில் 31 அறிவிப்புகளை வெளியிட்டுள்ளேன். இதில் ஒரு சில அறிவிப்புகளுக்கான பணிகள் தொடங்கி உள்ளது. விரைவில் மற்ற பணிகளும் தொடங்கப்பட உள்ளது. அடுத்த ஆண்டுக்குள் எவ்வளவு பணிகள் நிறைவடைந்துள்ளது என்பதை தெரிவிக்கிறோம். அனைத்து ஊராட்சிகளிலும் விளையாட்டை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது. சட்டசபை தற்போது தான் முடிவடைந்துள்ளது. இனி தான் ஒவ்வொரு அறிவிப்புகளாக நிறைவேற்றப்படும்.
மேலும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம், வருமானவரித்துறை சோதனையை நடத்தும் மத்திய பா.ஜ.க. அரசுக்கும், மிசாவை கொண்டு வந்த காங்கிரஸ் அரசுக்கும் வித்தியாசம் இருக்கிறதா? என பத்திரிகையாளர்கள் கேட்டபோது, இதற்கு வித்தியாசம் பெரிதாக இல்லை. எந்த சவாலாக இருந்தாலும் அதனை சந்திக்க நாங்கள் தயாராக இருக்கிறோம் என பதில் அளித்தார். மேலும் அமைச்சரவை மாற்றத்தில் உங்களுக்கு துணை முதலமைச்சர் பதவி வழங்கப்பட இருப்பதாக சமூக வலைத்தளங்களில் தகவல் பரவுகிறதே? என ஒரு செய்தியாளர் கேள்வி கேட்டபோது, யார் சொன்னார்கள். அந்த சமூக வலைத்தளமே நீங்கள் தான், என்றார். அப்போது அவருடன் அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, செஞ்சி மஸ்தான், திருச்சி மத்திய மாவட்ட தி.மு.க. செயலாளர் வைரமணி, திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகன் உள்பட நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.