திருச்சி மாவட்டம் , சிறுகனூர் அருகே உள்ள எம்.ஆர். பாளையம் சாய்பாபா கோவில் அருகே வசித்து வந்தவர் சண்முகசுந்தரம் (வயது 60).இவர், தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்கத்தில் நிர்வாகியாக இருந்தார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அந்த சங்கத்தில் இருந்து விலகி தமிழ்நாடு விவசாயிகள் இயக்க மாநில செயலாளராக இருந்து வந்தார். சண்முகசுந்தரத்துக்கு பரமேஸ்வரி என்ற மனைவி இருந்தார். இவர்களது மகன் நித்தியானந்தன் (30). எலக்ட்ரீசியன் வேலை பார்த்து வரும் இவர் திருமணம் ஆகி தனியாக வசித்து வருகிறார். இந்நிலையில் கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு பரமேஸ்வரி இறந்து விட்டார். இதனையடுத்து சண்முகசுந்தரம் சிறுகனூர் அருகே உள்ள வங்காரத்தைச் சேர்ந்த வளர்மதி (45) என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு குழந்தைகள் இல்லை. கடந்த 4 நாட்களுக்கு முன்பு சண்முகசுந்தரத்திற்கும், வளர்மதிக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதனையடுத்து வளர்மதி வங்காரத்தில் உள்ள பெற்றோர் வீட்டுக்கு சென்றுவிட்டார். மேலும் கணவர் மீது லால்குடி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சண்முகசுந்தரம் மட்டும் வீட்டில் இருந்தார்.
நேற்று முன்தினம் இரவு அவர் சாப்பிட்டுவிட்டு வழக்கம்போல் வீ்ட்டில் படுத்து தூங்கிக் கொண்டிருந்தார். இதற்கிடையில் அதிகாலையில் சிலர் வீட்டின் கதவை தட்டி உள்ளனர். இதைத்தொடர்ந்து தூங்கி எழுந்த சண்முகசுந்தரம் கையில் டார்ச் லைட்டை எடுத்துக்கொண்டு கதவை திறந்து வெளியே வந்தார். அப்போது, அங்கு நின்று இருந்த மர்ம நபர்கள் அரிவாளால் சண்முகசுந்தரத்தை தலை, கழுத்து, வயிறு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வெட்டினர். இதில் அவர் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். பின்னர் மர்மநபர்கள் அங்கு இருந்து தப்பி ஓடிவிட்டனர்.
மேலும் இது குறித்து தகவல் அறிந்த லால்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு அஜய்தங்கம், சிறுகனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுமதி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். பின்னர் சண்முகசுந்தரத்தின் உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து திருச்சியில் இருந்து போலீஸ் மோப்பநாய் வரவழைக்கப்பட்டது. அது சம்பவ இடத்தில் இருந்து சிறிது தூரம் வரை ஓடிச்சென்றது. ஆனால் யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. தொடர்ந்து இதுகுறித்து சிறுகனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் கொலையாளிகளை பிடிப்பதற்காக திருச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுஜித்குமார் மேற்பார்வையில், 3 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் எம்.ஆர்.பாளையம் அருகே இருக்கும் பஞ்சமி நிலத்தை உளுந்தூர்பேட்டையை சேர்ந்த ஒருவர் வாங்கி உள்ளதாகவும், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து மதுரை ஐகோர்ட்டு கிளையில் சண்முகசுந்தரம் வழக்கு தொடர்ந்து தடை உத்தரவு வாங்கி உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதன் காரணமாக அந்த இடத்தை வாங்கிய நபர்களுக்கும், சண்முகசுந்தரத்திற்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்ததாக தெரிகிறது. இந்நிலையில் மனைவி, மகன் யாரும் வீட்டில் இல்லாமல் தனியாக வசித்து வருவதை தெரிந்துகொண்ட மர்ம நபர்கள் இந்த கொலை சம்பவத்தை நடத்தி இருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர். தொடர்ந்து இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கொலையாளிகள் விரைவில் பிடிபடுவார்கள் என்று போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.