திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்திற்கு மிக அருகில் இருக்கும் அழகான குடில் செட்டப்புடன் இருக்கும் 'பாட்ஷா பிரியாணி' உணவகம் பற்றிதான் இப்போது நாம் பார்க்கப் போகிறோம்.பிரியாணி பெரும்பாலான மக்களால் விரும்பத்தக்க ஒரு உணவாக இருந்து வருகிறது. அத்தகைய நிலையில் அந்த பிரியாணியை வகைவகையாக மட்டன் பிரியாணி, சிக்கன் பிரியாணி, மீன் பிரியாணி, கடை பிரியாணி, இறால் பிரியாணி என்று 12 வகை பிரியாணியோடு வழங்கி வரும் ஒரு அற்புதமான கடைதான் பாட்சா பிரியாணி. இந்த உணவகத்தில் பிரியாணி வகைகள் மட்டுமல்லாமல் பாட்சா ஸ்பெஷல் சிக்கன், காடை ப்ரை என்று விதவிதமான உணவு வகைகளும் கிடைக்கின்றன.
திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் மிக அருகில் ஒரு கார்டன் செட்டப்பில் அமைந்திருக்கின்றது இந்த 'பாட்ஷா பிரியாணி' உணவகம். பரபரப்பாக இயங்கி வரும் பேருந்து நிலையத்திற்கு அருகிலேயே அமைந்துள்ளதன் காரணமாக தொடர்ந்து வாடிக்கையாளர்கள் வந்தவண்ணமே இருக்கின்றார்கள். அந்த அளவுக்கு பரபரப்பாக இயங்கி வரும் இந்த உணவகத்தின் உள்ளே சென்றதும் குடில் குடிலாக அமைக்கப்பட்டிருந்தது. மேலும் அங்குள்ள ஒவ்வொரு குடிலுக்கும் சேரர், சோழர், பாண்டியர், பல்லவர், அன்னை தெரசா என்று பெயர் சூட்டப்பட்டு அற்புதமாக காட்சி அளித்தது.
இங்கு கிடைக்கும் அத்தனை பிரியாணியும் அமோகமான சுவையாக இருக்கும் என்று அங்கு வரும் வாடிக்கையாளர்கள் கூறுகின்றனர். மேலும், அம்மியில் அரைத்து செய்யப்படும் 'பாட்சா ஸ்பெஷல் சிக்கன்' வேற லெவல் டேஸ்ட்டில் இருக்கும் என்று அங்கு செல்லும் வாடிக்கையாளர்கள் கூறுகின்றனர். இது மட்டும் அல்லாமல் இன்னும் ஏராளமான அசைவ உணவு வகைகள் இந்த பாட்ஷா பிரியாணி உணவகத்தில் கிடைக்கின்றன. ஒவ்வொரு வகையும் ஒவ்வொரு சுவையில் இருக்கும் என்றும் வாடிக்கையாளர்கள் கூறி வருகின்றனர். 25 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வரும் இந்த பாட்ஷா பிரியாணியின் உரிமையாளர் முகமது அபுபக்கர் சித்திக்கிடம் இந்த கடையைப் பற்றி கேட்டபோது, தனது பூர்வீகம் கும்பகோணம் அருகேயுள்ள சோழன் மாளிகை என்றும் வேலை காரணமாக திருச்சிக்கு வந்ததாக தெரிவித்தார்.
பின்னர் இங்கேயே செட்டில் ஆகிவிட்டதாகவும் முதலில் ஒரு தள்ளுவண்டி கடையில் பிரியாணியை விற்பனை செய்ய ஆரம்பித்ததாகவும் தெரிவித்தார். கல்லூரி மாணவர்கள்தான் தங்களது முதல் வாடிக்கையாளர்களாக இருந்ததாகவும், பின்னர் சிறிது சிறிதாக தள்ளுவண்டி கடையை விரிவுபடுத்தி இப்போது பெரிய கடையாக மாறி இருக்கின்றது என்றும் அவர் தெரிவித்தார். முதலில் அவரும் அவருடைய சகோதரரும் தான் இந்த கடையை ஆரம்பித்ததாகவும் இப்போது 15 பேர் தங்களிடம் வேலை செய்வதாகவும் தெரிவித்தார்.இங்கு கிடைக்கும் உணவு வகைகளை பற்றி கேட்டபோது, அசைவ பிரியாணி மற்றும் சைவ பிரியாணி என்று 12 வகையிலான பிரியாணி இங்கு கிடைக்கின்றது என்றும், அவற்றை எல்லாம் சுத்தமாகவும் அதிக காரம் இல்லாமலும் தயாரிப்பதாக தெரிவித்தார்.
வீட்டில் செய்யும் மசாலாவை தான் இங்கு உபயோகப்படுத்துவதாகவும் அவர் தெரிவித்தார். இதன் காரணமாக குழந்தைகளும் கூட தங்கள் கடையின் பிரியாணியை எந்தவித அச்சமும் இல்லாமல் சாப்பிடலாம் என்றும் தெரிவித்தார். மேலும் இந்த குடில் செட்டப் தமிழ் மேல், மற்றும் தமிழ்நாட்டின் மேல் தனக்கு இருக்கும் ஆர்வத்தின் காரணமாக தான் உருவாக்கப்பட்டுள்ளது என்றும் சித்திக் தெரிவித்தார். மேலும் இங்கு வரும் வாடிக்கையாளர்கள் அசைவ பிரியாணி சாப்பிட வேண்டும் என்றாலே இங்கு வந்து விடுவதாகவும் இந்த சுவை போன்று எங்குமே கிடைக்காது என்றும் மிகவும் மகிழ்ச்சியுடன் தெரிவிக்கின்றனர்.
அதுமட்டுமல்லாமல், பேருந்து நிலையத்தின் மிக அருகிலேயே இருப்பதன் காரணமாக எப்போது ஊருக்குச் செல்லும்போதும் அல்லது ஊரில் இருந்து வந்தாலும் கூட இங்கே சாப்பிட்டுவிட்டு பின்னர் தான் செல்வோம் என்றும் பல வாடிக்கையாளர்கள் தெரிவிக்கின்றனர். மொத்தத்தில் பிரியாணி பிரியர்களுக்கு மட்டும் அல்லாமல், அசைவ உணவு பிரியர்களுக்கும் இந்த 'பாட்ஷா பிரியாணி' ஒரு பெரிய விருந்தாக அமையும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.