மணப்பாறை அருகே தனியார் நிலத்தில் அனுமதியின்றி மணல் அள்ளிய  திமுக பிரமுகருக்கு  சொந்தமான    வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. 

 

மணப்பாறை அருகே தனியார் நிலத்தில் அனுமதியின்றி மணல் அள்ளிய  திமுக பிரமுகருக்கு  சொந்தமான வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மணல் கடத்தலில் ஈடுபட்ட வாகனங்களை விடுவித்ததாக மணப்பாறை இன்ஸ்பெக்டர் அன்பழகனை சஸ்பெண்ட் செய்து திருச்சி சரக டி.ஐ.ஜி. ராதிகா உத்தரவிட்டுள்ளார்.

 

திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே உள்ள முத்தப்புடையான்பட்டியில்  ஒரு தனியாருக்கு சொந்தமான பட்டா நிலத்தில் அரசு அனுமதியின்றி மணல் அள்ளப்படுவதாக தொடர்ந்து வந்த தகவலை அடுத்து  திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாள் தலைமையில்  தனிப்படை அமைத்து  நடத்திய அதிரடி சோதனையில் புகார் உண்மை என உறுதி செய்யப்பட்டது. மேலும்  சம்பந்தப்பட்ட நிலத்தில் மணல் அள்ளிய ஒரு ஜேசிபி மற்றும் இரண்டு டிப்பர் லாரிகளை பறிமுதல் செய்ததுடன் மூன்று வாகனங்களின் ஓட்டுனர்களையும் பிடித்து மணப்பாறை காவல்நிலையத்தில் தனிப்படையினர் ஒப்படைத்தனர். மேலும் விசாரனை மேற்க்கொண்ட போது  பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் திமுக பிரமுகருக்கு சொந்தமானவை (திமுக மணப்பாறை கிழக்கு ஒன்றிய பொருப்பாளர் ஆரோக்கியசாமி) என தெரியவந்தது. பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை  மணப்பாறை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நிறுத்தப்பட்டு இருந்து. அடுத்த சில மணி நேரங்களில் அரசியல் அழுத்தம் காரணமாக  மணப்பாறை காவல்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் விடுவிக்கப்பட்டன.

 

இந்நிலையில் இதுகுறித்து காவல்துறை உயர் அதிகாரிகளின் கவனத்திற்கு  சென்ற நிலையில் ஆளும் கட்சியினராக இருந்தாலும் நடவடிக்கை எடுத்தே ஆகவேண்டும் என அறிவுறித்தியதாக கூறப்படுகிறது. இதனையடுத்து நடவடிக்கை எடுக்காமல் விடுவிக்கப்பட்ட வாகனங்களை தேடிச் சென்று மணப்பாறை காவல்துறையினர் அந்த வண்டிகளை மீண்டும் பறிமுதல் செய்து அதன் ஓட்டுனர்கள் மீது வழக்கு பதிவு செய்தனர்.  தவறு செய்வது யாராக இருந்தாலும் அவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என காவல்துறை அதிகாரி தெரிவித்தனர். மேலும்  மணப்பாறையில் திமுக பிரமுகருக்கு சொந்தமான வாகனங்கள் அனுமதியின்றி மணல் அள்ளிய போது பறிமுதல் செய்யப்பட்டு அவர்களின் மீது சட்ட ரீதியான நடவடிக்கைகள் எடுத்து உரிய தண்டனை அளிக்கப்படும் என காவல்துறையினர் தெரிவித்தனர்.



இதனை தொடர்ந்து நேற்று இந்த தகவல் திமுக தலைமை கழகத்திற்கு சென்றது. உடனே திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் ஆரோக்கியசாமியை தற்காலிகமாக கட்சியில் இருந்து நீக்க அதிகாரப்பூர்வமாக தெரிவித்தார். மேலும் மணப்பாறை அருகே முத்தப்புடையான்பட்டியில் மணல் கடத்தலில் ஈடுபட்ட வாகனங்களை விடுவித்ததாக மணப்பாறை இன்ஸ்பெக்டர் அன்பழகனை சஸ்பெண்ட் செய்து திருச்சி சரக டி.ஐ.ஜி. ராதிகா உத்தரவிட்டுள்ளார். ஆரோக்கியசாமியை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.