திருச்சி மாநகர காவல் துறை எல்லைகள் பிரிக்கப்பட்ட பிறகு சரக காவல்துறை உதவி ஆணையர்களை நியமனம் செய்து டிஜிபி சைலேந்திரபாபு நேற்று  உத்தரவிட்டுள்ளார். திருச்சி மாநகர காவல்துறை எல்லை வடக்கு, தெற்கு என்று 2ஆக செயல்படும் என்று ஆகஸ்ட் 28ஆம் தேதி தமிழக உள்துறை செயலாளர் அலுவலகம் உத்தரவிட்டது. பிரிக்கப்பட்ட எல்லைகள் குறித்த விவரங்கள் செப்டம்பர் மாதம் 8ஆம் தேதி வெளியிடப்பட்டது. இந்த உத்தரவின்படி சென்னையில் உள்ளது போலவே குற்றப்பிரிவுக்கு என்று தனியாக உதவி ஆணையர்கள் இல்லாமல், சட்ட ஒழுங்கு உதவி ஆணையர்கள் குற்றப்பிரிவுகளையும் சேர்த்து கவனிப்பார்கள். எல்லை பிரிக்கப்பட்ட நிலையில் யார், யார் எந்தெந்த சுரங்கத்தில் பணியாற்றுவார்கள் என்று டிஜிபி சைலேந்திரபாபு நேற்று நியமனம் செய்து உத்தரவிட்டார். இதன்படி மாநகரில் வடக்கு பிரிவு காவல்துறை துணை ஆணையராக சக்திவேல் நியமிக்கப்பட்டுள்ளார். இவரது கட்டுப்பாட்டில் தில்லைநகர் சரக உதவி ஆணையராக ராஜு நியமிக்கப்பட்டுள்ளார். இவர் தில்லை நகர், உறையூர், அரசு மருத்துவமனை, காவல் எல்லைகளை கண்காணிப்பார்.




காந்தி மார்க்கெட் சரக உதவி ஆணையராக சுந்தரமூர்த்தி நியமிக்கப்பட்டுள்ளார். இவரது கட்டுப்பாட்டில் காந்தி மார்க்கெட், பாலக்கரை, கோட்டை மகளிர் காவல்துறை, வடக்கு போக்குவரத்து பிரிவு எல்லைகள் இருக்கும். ஸ்ரீரங்கம் சரக உதவி ஆணையராக சுப்பிரமணியன் நியமிக்கப்பட்டுள்ளார். இவரது கட்டுப்பாட்டில் ஸ்ரீரங்கம் ,கோட்டை, ஸ்ரீரங்கம் மகளிர் காவல்துறை எல்லைகள் இருக்கும். வடக்கு போக்குவரத்து உதவி ஆணையராக ஜோசப்நிக்சன் நியமிக்கப்பட்டுள்ளார். இவரது கட்டுப்பாட்டில் ஸ்ரீரங்கம், கோட்டை, உறையூர் ,பாலக்கரை, போக்குவரத்து பிரிவுகள் இருக்கும். மாநகர குற்ற பிரிவு உதவி ஆணையர் சின்னசாமி, மாநகர குற்றப்பிரிவு உதவி ஆணையர் பாஸ்கர் ஆகியோர் வடக்கு துணை காவல்துறை ஆணையர் கட்டுப்பாட்டில் இயங்குவார்கள். மாநகர காவல்துறை தெற்கு பிரிவு துணை ஆணையராக முத்தரசு நியமிக்கப்பட்டுள்ளார். இவரது கட்டுப்பாட்டில் கே.கே. நகர், சரக உதவி ஆணையராக பாஸ்கர் நியமிக்கப்பட்டுள்ளார். கே.கே.நகர், ஏர்போர்ட், தெற்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு காவல் எல்லைகள் இருக்கும்.




கண்டோன்மெண்ட் சரக உதவி ஆணையராக அஜய் தங்கம் நியமிக்கப்பட்டுள்ளார். கன்டோன்மென்ட், கோர்ட், எடமலைப்பட்டி புதூர், கன்டோன்மென்ட் மகளிர் காவல், காவல் கட்டுப்பாட்டு அறை மாநகர குற்றப்பிரிவு ஆகியவை இவரது எல்லைக்குள் இருக்கும். பொன்மலை சரக உதவி ஆணையராக காமராஜ் நியமிக்கப்பட்டுள்ளார். இவரது கட்டுப்பாட்டில் பொன்மலை, அரியமங்கலம், பொன்மலை மகளிர் காவல் எல்லைகள் வரும். மேலும்  தெற்கு போக்குவரத்து உதவி ஆணையராக முருகேசன் நியமிக்கப்பட்டுள்ளார். இவரது கட்டுப்பாட்டில் கண்டோன்மென்ட், அரியமங்கலம், போக்குவரத்து பிரிவுகள் இருக்கும். மேலும் தெற்கு பிரிவு துணை ஆணையர் கட்டுப்பாட்டில் ஆயுத படை உதவி ஆணையர் ரவிச்சந்திரன், மாநகர நில அபகரிப்பு தடுப்பு பிரிவு உதவி ஆணையர் காமராஜ், மனித உரிமைகள் பிரிவு உதவி ஆணையர் ராஜசேகர், வெடிகுண்டு கண்டறியும் பிரிவு உதவி ஆணையர் செந்தில்குமார், மாநகர மதுவிலக்கு அமலாக்க பிரிவு ஆகியவை உதவி கமிஷனர்கள் செயல்படுவார்கள் என்று நேற்று பிறப்பிக்கப்பட்ட உத்தரவில் கூறப்பட்டுள்ளது. இப்போது எல்லைகள் மாற்று நியமனம் செய்யப்பட்ட உதவி ஆணையர்கள் அனைவரும் ஓரிரு நாட்களில் அந்தந்த சுரங்கத்திற்கு பதவியேற்றுக் கொள்வார்கள் என்று காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தனர்.