திருச்சியில் உள்ள மொட்டை மாடியில் இயங்கி வரும் நினைவூட்டும் இட்லி கடையைப் பற்றி தான் இங்கே நாம் பார்க்கப் போகிறோம். திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து 11 கிலோமீட்டர் தொலைவிலுள்ள திருவெறும்பூரில் உள்ள கடைதான் இது. கடை என்று சொல்வதைவிட வீடு என்று சொல்லலாம். ஏனென்றால், வீட்டின் மொட்டை மாடியில் தான் இந்த உணவகம் இயங்கி வருகிறது. நான்கு மணி நேரத்தில் கிட்டத்தட்ட 300 பேர் வரை இங்கு சாப்பிட வருகின்றனர். இது இரவு நேரத்தில் மட்டுமே இயங்கக் கூடியது. மாலை  6.30 மணி முதல் இரவு 9 மணிவரை இயங்கக்கூடிய இந்த இட்லி கடைக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர்.


ஏனென்றால் இதன் ருசி அவ்வளவு அருமையாக உள்ளது. வீட்டின் கீழ்பகுதியில், உரிமையாளர் வசிக்கின்றார். மேலே உள்ள வீட்டை அப்படியே இட்லி கடையாக மாற்றியுள்ளார். மொட்டை மாடியை சாப்பிடும் இடமாகவும், வீட்டின் ஒவ்வொரு அறையையும், தனித்தனியாக சட்னி தயார் செய்வதற்கு என்று, பார்சல் தயார் செய்வதற்கு என்று, பிரித்து நடத்தி வருகின்றனர்.




இங்கு ஒரு இட்லி 5 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. அதுமட்டுமல்லாமல், தோசை, சப்பாத்தி, ஆப்பம் என்று அனைத்துமே மிகவும் மலிவான விலையில் கிடைக்கின்றன. இட்லி ஆர்டர் செய்துவிட்டு காத்திருந்தால், சிறிது நேரத்தில் ஆவி பறக்கும் இட்லி கூடவே 22 வகையான சட்னிகளும் கிடைக்கின்றன. அதில் குறிப்பாக, கத்தரிக்காய் ,கேரட், சட்னி, பொட்டுக்கடலை சட்னி, தக்காளி, பூண்டு, தேங்காய், புதினா, கொத்தமல்லி என்று வெவ்வேறு வகையான சட்னிகள் வெவ்வேறு விதமான சுவையில் கிடைக்கின்றன. அதுமட்டுமல்லாமல் சிறியவர்கள், முதியவர்களுக்கு என்று நாட்டுச்சர்க்கரை, இட்லி பொடி, நல்லெண்ணெய் ஆகியவையும் கிடைக்கின்றன. 22 வகையான சட்னிகள் மட்டுமல்லாமல் கூடவே குருமா, சாம்பார் என்று நம்முடைய தேவைகளுக்கு ஏற்ப  இங்கு கிடைக்கின்றன.




இந்த கடையை பற்றி உரிமையாளர் முகமது சரீஸ் கூறியபோது, இது கடை என்று கூறுவதை விட இது எங்கள் வீடு என்று கூறலாம். இங்கு வந்து சாப்பிடுபவர்கள் ஒருமுறை சாப்பிட்டு போனாலும் அதை நினைவில் வைத்துக்கொள்வதற்காகவே 'நினைவூட்டும் இட்லி கடை’ என்று பெயர் வைத்தோம் என்று கூறுகிறார். மேலும், 60 வயது வரை திருச்சி பெல் நிறுவனத்தில் பணி புரிந்ததாகவும் ஓய்வு காலத்தில் என்ன செய்வது என்று யோசித்தபோது தான் இதுபோன்ற கடையை தொடங்கலாம் என்று தோன்றியதாகவும் அவர் கூறுகிறார்.


மேலும் சாதாரணமான உணவகமாக இருக்கக்கூடாது  என்பதற்காகவே வீட்டிலேயே இது போன்ற அமைப்பை ஏற்படுத்தி இருக்கிறோம் என்று அவர் தெரிவித்தார். முதலில் ஐந்து ரூபாய் இட்லி ஐந்து வகையான சட்னி என்றுதான் தொடங்கினோம். பின்னர் இட்லிக்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து ஒருவரை வேலைக்கு அமர்த்தி , பின்னர் அது 12 பேர் ஆக அதிகரித்து ஐந்து வகை சட்னி 22 சட்னி ஆக தற்போது வளர்ந்து நிற்கிறது என்று அவர் மகிழ்ச்சியுடன் தெரிவித்தார். ஆரம்பத்தில் இட்லியை மட்டுமே செய்து கொடுத்து கொண்டிருந்ததாகவும், வாடிக்கையாளர்கள் தோசை, சப்பாத்தி என்று கேட்கத் தொடங்கியதன் காரணமாகவே, அவர்கள் விருப்பத்திற்கு ஏற்ற மாதிரி தோசை, சப்பாத்தி, ஆப்பம் வரை தற்போது செய்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.


மேலும் 'மொட்டைமாடி கான்செப்ட்' பற்றி கேட்டதற்கு, பொதுவாகவே நாங்கள் குடும்பமாக அடிக்கடி மொட்டை மாடியில் உட்கார்ந்துதான் சாப்பிடுவோம். அப்போது கிடைக்கும் சந்தோஷமே வேற மாதிரி இருக்கும். அதனால்தான், அதை நம் கடைக்கு வரும் வாடிக்கையாளர்கள் அனுபவிக்க வேண்டும் என்று நினைத்தேன். அதனால்தான் சாப்பிடும் இடத்தை, மொட்டை மாடியில் வைத்து விட்டோம். மேலும், விலை குறைவாக இருப்பதற்கு காரணமும் மக்கள்தான் இந்த கடை லாபத்துக்காக இல்லாமல் எங்களை தேடி வரும் மக்களுடைய திருப்திக்காக நடத்துவதாகவும் தற்போது தனக்கு  ஆத்ம திருப்தியாக இருப்பதாகவும் தெரிவித்தார். 




மேலும் இதைப் பற்றி அங்கு வந்த வாடிக்கையாளரிடம் கேட்ட போது, வெளியில் உணவகத்தில் சாப்பிடுவது என்றாலே  சுத்தமாக இருக்குமா, ஆரோக்கியமானதாக இருக்குமா? என்ற ஒருவிதமான பயம் இருக்கும். ஆனால், இங்கு வந்தால் அந்த பயம் அனைத்தும் நீங்கிவிடும். அதுவும் வெறும் 5 ரூபாய் இட்லிக்கு 22 வகை சட்னி யார் கொடுப்பார்கள்? மேலும், இந்த சட்னிகள் அனைத்துமே தனித்தனி டேஸ்டில் சூப்பராக இருக்கும் என்று கூறுகிறார். மேலும், தனது குழந்தைகள் வீட்டில் இட்லி என்றாலே, சாப்பிடவே மாட்டார்கள். இங்க வந்தா போதும் தனக்கு வேண்டும் அளவுக்கு சாப்பிடுவார்கள். இதனால் மனதிற்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும் என்று வாடிக்கையாளர் தெரிவித்தார். 'இட்லி ஒரு உன்னத உணவு' நோயாளிகளுக்கும் கூட இட்லியை தான் பரிந்துரைப்பர். அத்தகைய இட்லியை இதுபோன்ற 22 சட்னியுடன் கொடுக்கும் இந்த நினைவூட்டும் இட்லி கடையை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை நினைவில் வைத்து இருப்பார் என்பதில் சந்தேகமே இல்லை.