தீபாவளி பண்டிகை என்றாலே தமிழ்நாட்டில் வெகு விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம். அதே சமயம் புத்தாடைகள் உடுத்துவது, பட்டாசுகள் வெடிப்பது என பொதுமக்கள் மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடுவார்கள். 


ஆகையால் பல்வேறு இடங்களில் தற்காலிக பட்டாசு கடைகள் அமைத்து விதவிதமான பட்டாசுகள் விற்பனை செய்யப்படுவதும் வழக்கம். அந்த வகையில் தற்காலிக பட்டாசு கடைகள் அமைப்பதற்கான கட்டுப்பாடுகளை காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்படும். 


தமிழகம் முழுவதும் அடுத்த மாதம் 31 ஆம் தேதி தீபாவளி பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில் தற்காலிக பட்டாசு கடைகள் அமைப்பதற்கான விதிமுறைகள் குறித்து மாநகர காவல் ஆணையர் காமினி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்தது..


திருச்சி மாநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் தற்காலிக பட்டாசு கடைக்கு உரிமம் பெற விண்ணப்பிப்பவர்கள், வெடிப்பொருள் விதிகள்-2008-ன்படி வெளியிடப்பட்டுள்ள படிவம் எண்.AE-5-யினை பூர்த்தி செய்து கீழ்கண்ட ஆவணங்களுடன் திருச்சி மாநகர காவல் அலுவலகத்தில் வரும் வரும் (17.09.2024) அன்று மாலை 5:30 மணிக்குள் சமர்பிக்க வேண்டும். 




மேலும், விண்ணப்ப மனு, ரூ.2/-க்கான நீதிமன்ற அஞ்சல் வில்லையுடன் முழுமையாக பூர்த்தி செய்யப்பட்ட படிவம் AE 5. விண்ணப்பதாரின் பாஸ்போர்ட் புகைப்படம் - 2 (தனியாக இணைக்கப்பட வேண்டும்). உத்தேசிக்கப்பட்ட கடையின் வரைபடம் (இரண்டு வழிகளில் இருக்க வேண்டும்). வரைபடத்தில் கடையின் முகவரி முழுமையாக குறிப்பிடப்பட வேண்டும்.


மேலும், மனுதாரரின் கையொப்பமிட்டு இருக்க வேண்டும். பட்டாசு கடை அமையவுள்ள இடம் சொந்த கட்டிடமாகயிருப்பின் அல்லது காலியிடமாக இருப்பின் (2024 - 2025)-ஆம் ஆண்டிற்குரிய முதலாம் அரையாண்டு வரை அதாவது (30.09.2024) வரை செலுத்தப்பட்ட சொத்து வரி ரசீது கண்டிப்பாக் இருக்க் வேண்டும். 


பட்டாசு கடை அமையவுள்ள இடம் வாடகை கட்டிடமாகயிருப்பின் அல்லது காலியிடமாக இருப்பின் 2024-2025-ஆம் ஆண்டிற்குரிய முதலாம் அரையாண்டு வரை அதாவது (30.09.2024) வரை செலுத்தப்பட்ட சொத்து வரி ரசீது, உரிமையாளரின் சம்மதக் கடிதம் மற்றும் உரிமையாளருடன் ஏற்படுத்திக் கொண்ட வாடகை ஒப்பந்தப்பத்திரம்.(ரூ.20/- மதிப்புள்ள முத்திரைத்தாளில்) தற்காலிக பட்டாசுக்கடை வைப்பதற்கான உரிய வணிக உரிமம் பெற திருச்சி மாநகராட்சிக்கு கட்டணம் செலுத்திய அசல் இரசீது.




விதிமுறைகளை மீறும் பட்டாசு கடைகள் மீது கடுமையான நடவடிக்கை


மேலும் உரிமக் கட்டணம் ரூ.500 ஆண்லைனில் செலுத்தியதற்கான அசல் ரசீது. மாநகராட்சி, பொதுப்பணித்துறை மற்ற துறை கட்டிடமாக இருப்பின் அத்துறை சார்ந்த அலுவலரின் மறுப்பின்மை கடிதம் இருக்க வேண்டும். 


விண்ணப்பதாரின் குடும்ப அட்டை (அ) ஆதார் அட்டை நகல்கள். அசல் விண்ணப்பத்துடன் அனைத்து ஆவணங்களுடன் 4 நகல்கள் இணைக்கப்பட வேண்டும். (17.09.2024) அன்று மாலை 5:30 மணிக்குள் பெறப்படும் முழுமையான விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலிக்கப்பட்டும்.


குறிப்பாக சம்மந்தப்பட்ட இடங்களை பார்வையிட்டு, விசாரணைக்கு பின் காவல்துறை கண்ணோக்கில் திருப்தியடையும் பட்சத்தில் மட்டும் உரிமம் வழங்கப்படும்.


மேற்கண்ட தேதிக்கு பின்னர் விண்ணப்பம் சமர்பிக்க காலக்கெடு நீட்டிப்பு செய்யப்படமாட்டாது. குறித்த காலக்கெடுவுக்குள் முழுமையாக பெறப்படாத விண்ணப்பங்கள் எவ்வித முன்னறிவிப்பின்றி தள்ளுபடி செய்யப்படும் எனத் தெரிவித்துள்ளார். 


மேலும் அறிவுறுத்தலின்படி தற்காலிக பட்டாசு கடைகள் அமைக்க வேண்டும். இல்லை என்றால் விதிமுறைகளை மீறி பட்டாசு கடைகள் அமைக்கப்பட்டால் சட்டரீதியான கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என திருச்சி மாநகர காவல் துறை ஆணையர் காமினி எச்சரிக்கை விடுத்துள்ளார்.