திருச்சி மாவட்டத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் அதிரடியான நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறார்கள். குறிப்பாக கடந்த சில மாதங்களாக அரசு துறைகளில் பணிபுரியும் அதிகாரிகள் சிலர் லஞ்சம் பெறுவதாக தொடர்ந்து பொதுமக்களிடம் இருந்து புகார்கள் வந்த வண்ணம் உள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர். அதன்படி தொடர் நடவடிக்கையில் லஞ்ச ஒழிப்புதுறை அதிகாரிகள் ஈடுபட்டு வருகிறார்கள்.

Continues below advertisement

லஞ்சம் கேட்ட சர்வேயர்:

இந்நிலையில்  திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர்வட்டம் கல்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் துரைராஜ் மகன் ரமேஷ் குமார் (வயது 51). இவர் திருவானைக்காவல் பகுதியில் செல்போன் உதிரி பாகங்கள் கடை சொந்தமாக நடத்தி வருகிறார். இவருக்கு கல்பாளையம் கிராமத்தில் சொந்தமாக வீடு உள்ளது. ரமேஷ் குமார் தனது தொழிலுக்கு பணம் தேவைப்பட்டதால் தனக்கு சொந்தமான வீட்டின் பேரில் வங்கியில் கடன் கோரியுள்ளார்.

தான் கடன் பெறுவதற்கு தனது வீட்டுமனையை உட்பிரிவு செய்து பட்டா பெற்று வருமாறு வங்கியில் கேட்டதன் பேரில் ரமேஷ் குமார் தனது வீட்டினை உட்பிரிவு செய்து தனிப்ப ட்டா வேண்டி கடந்த ஜூலை மாதம் 7-ந் தேதி அன்று    விண்ணப்பித்துள்ளார். தான் விண்ணப்பித்து ஒரு மாதத்திற்கு மேலாகியும் எந்த தகவலும் கிடைக்கப் பெறாததால் ரமேஷ் குமார் மணச்சநல்லூர் தாலுகா அலுவலகத்தில் உள்ள சர்வே பிரிவுக்கு  கடந்த மாதம் 28-ந் தேதி அன்று கல்பாளையம் பிர்கா சர்வேயர் கருப்பையா (வயது 48) என்பவரை சந்தித்து, தனது விண்ணப்பத்தின் பேரில் உட்பிரிவு செய்து வழங்க வேண்டுமாறு கேட்டுள்ளார்.

Continues below advertisement

கையும் களவுமாக:

மேலும் அதற்கு பிர்கா சர்வேயர் கருப்பையா ஒரு வாரம் கழித்து தன்னை வந்து சந்திக்குமாறு கூறியுள்ளார். அதன் பேரில் ரமேஷ் குமார் பிர்கா சர்வேயர் கருப்பையாவை சந்தித்து தனது வேலையை முடித்துக் கொடுக்குமாறு கூறியுள்ளார். அதற்கு சர்வேயர் கருப்பையா தனக்கு 6000 ரூபாய் லஞ்சமாக கொடுத்தால் சப் டிவிஷன் வேலையை முடித்து தருவதாக கூறியுள்ளார்.

லஞ்சம் கொடுக்க விரும்பாத ரமேஷ் குமார் திருச்சி லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி மணிகண்டனிடம் அளித்த புகாரின் பேரில் லஞ்ச ஒழிப்புத்துறையினரின் ஆலோசனையின் பேரில் கருப்பையாவை சமயபுரம் பைபாஸ் சாலையில் சந்தித்து ரமேஷ்குமார் ரூ.5 ஆயிரத்தை கொடுக்கும் போது அங்கு மறைந்திருந்த டிஎஸ்பி மணிகண்டன் தலைமையிலான ஆய்வாளர்கள் சக்திவேல், பாலமுருகன், சேவியர் ராணி ஆகியோர்கள் கொண்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் கருப்பையாவை கையும் களவுமாக பிடித்து கைது செய்து மணச்சநல்லூர் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். 

இதனை தொடர்ந்து லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் கூறும் போது, அரசு துறையில் பணிபுரியும் அதிகாரிகள், அலுவலர்கள் அனைவரும் பொதுமக்களுக்கு தேவையான பணிகளை முறையாகவும், நேர்மையாகவும் செய்ய வேண்டும். அதற்கு மாறாக மக்களிடம் லஞ்சம் வாங்கினால் சட்டரீதியான கடுமையான நடவடிக்கை எடுக்கபடும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளனர். மேலும் பொதுமக்களும் எதற்கும் பயப்படாமல் அரசு அதிகாரிகள் லஞ்சம் கேட்டால் உடனடியாக புகார் தெரிக்கவும் என கேட்டுக்கொண்டுள்ளனர்.