திருச்சி நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திருச்சி தி.மு.க தெற்கு மாவட்டத்தில் மாநகராட்சிக்கு உட்பட்ட மலைக்கோட்டை, மார்க்கெட், பொன்மலை, ஏர்போர்ட் ஆகிய வார்டுகளில் போட்டியிடும் தி.மு.க வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்தார் தெற்கு மாவட்டச்செயலாளர் அன்பில் மகேஷ்.  தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் தி.மு.க ஆட்சிக் கட்டிலில் அமர்ந்த பிறகு அரசு செய்த திட்டங்களைச் சொல்லி வாக்கு சேகரித்தார். "தேர்தலில் நாங்கள் வாக்கு கேட்க வேண்டியது எங்களது கடமை,  நாங்கள் அதனைச் சிறப்பாகச் செய்து கொண்டிருக்கிறோம்.


அதேபோல் பிப்.19-ம் தேதி நீங்கள் தி.மு.க-வில் வாக்களிப்பது உங்களது கடமை, மக்களாகிய நீங்கள் எங்களுக்கு வாக்களித்தால் மட்டுமே நல்லத் திட்டங்கள் உங்களை வந்துசேரும் என்றார். இதனை தொடர்ந்து கொரோனா விவகாரம் முதல் வெள்ளம் போன்ற பேரிடர் காலத்தில் முதல்வரின் ஆட்சியைப் பார்த்து எதிர்க்கட்சியினரே மிரண்டு போய் இருக்கிறார்கள். திருச்சி மாவட்டத்தில் 9 சட்டமன்றத் தொகுதிகளிலும் தி.மு.க வேட்பாளர்கள் வெற்றி பெற்றிருக்கிறார்கள். அதேபோல் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் 100 சதவிகிதம் வெற்றி பெறவேண்டும். எதிர்க்கட்சியைத் திட்டியோ அவர்கள் ஆட்சியில் செய்த ஊழல்களைச் சொல்லி வாக்கு கேட்க வேண்டிய அவசியமில்லை என்றார்.




மேலும் அ.தி.மு.க ஆட்சியில் அவர்கள் செய்த ஊழல்களைச் சுட்டிக்காட்டி வாக்கு சேகரிக்க வேண்டிய அவசியமில்லை நீட் தேர்வு என்கிற ஒன்று போதும். அ.தி.மு.கவினர் யாருக்கோ பயந்துகொண்டு அனைத்துக் கட்சி கூட்டத்தைப் புறக்கணித்து நம்முடைய பிள்ளைகளுக்குத் துரோகம் செய்கிறார்கள். உள்ளாட்சித் தேர்தலில் 100 சதவிகிதம் வெற்றி பெறுவோம் எனத் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார் அமைச்சர் அன்பில் மகேஷ். மேலும் தமிழகத்தில் நீட் தேர்வால் ஏராளமான பள்ளி மாணவ,மாணவிகளை இழந்திருக்கிறோம். நீட் தேர்வு தொடர்பாகக் கூட்டப்பட்ட அனைத்துக் கட்சி கூட்டத்தை மதவாத சக்திகளுக்குப் பயந்து கொண்டு அ.தி.மு.க புறக்கணித்திருப்பதாகத் தெரியவருகிறது.


இப்போதிலிருந்தே தெரிந்துகொள்ளுங்கள் யார் நீட் விவகாரத்தில் இரட்டை வேடம் போடுகிறார்கள் என்று என்றார். மேலும் இப்படிப்பட்ட எதிர்க்கட்சிக்கு மீண்டும் பாடம் புகட்டும் வகையில் உள்ளாட்சித் தேர்தலில் 100 சதவிகித வாக்குகளைப் பெற்று தி.மு.க-வினர் வெற்றி பெறவேண்டும். திருச்சியில் 100 சதவிகிதம் வெற்றி பெற்றுவிட்டோம் என்று முதல்வரிடம் நாம் தெரிவிக்கவேண்டும். நமக்கும் எந்தவித மனக்கசப்புகள் இருந்தாலும் அவற்றை புறம் தள்ளிவிட்டு வெற்றிக்காக மட்டுமே உழைக்கவேண்டும். நம்முடைய வெற்றி வேட்பாளர்களை முதல்வர் முன்னிறுத்த வேண்டும் என்று நிர்வாகிகளை உற்ச்சாகபடுத்தும் விதமாக அமைச்சர் அன்பில் மகேஷ் பேசினார்.




திருச்சி மாவட்டத்தை பொருத்தவரை அனைத்து வார்டுகளிலும் பெரும்பான்மையான வெற்றியை திமுக நிச்சயம் பெரும். ஏனென்றால் திமுக தமிழகத்தில் ஆட்சி அமைத்த பிறகு மக்களின் நலனை மட்டுமே கருத்தில் கொண்டு அனைத்து திட்டங்களையும் மக்களிடம் நேரடியாகவும், வெளிப்படையாகவும் செய்து வருகிறது. இதனால் மக்களின் ஆதரவு என்றுமே திமுகவிற்கு தான் உள்ளது. மேலும் தொடர்ந்து தமிழகம் வளர்ச்சிப் பாதையை நோக்கி செல்ல வேண்டும் என்பதில் தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் உறுதியாக உள்ளார். ஆகையால் சட்டமன்ற தேர்தலில் திருச்சியை தனது கோட்டையாக மாற்றிய திமுக ,மீண்டும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக கோட்டையாக மாற்ற வேண்டும் அதற்காக நாம் அனைவரும் ஒன்றிணைந்து களப்பணி ஆற்றுவோம் நமது வேட்பாளர், கூட்டணி வேட்பாளர் ஆகியோரை பெரும்பான்மையாக வெற்றி பெற செய்வோம்" என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்தார்.