தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம், அனைத்து மாநகராட்சிகள்,  நகராட்சிகள், பேரூராட்சிகளுக்கான  தேர்தல்கள் குறித்த அறிவிப்பை கடந்த 26-ஆம் தேதி வெளியிட்டது.  இதன்படி திருச்சி மாவட் டத்தில், திருச்சி மாநகராட்சி, மணப்பாறை,   துவாக்குடி, துறையூர்,  லால்குடி,  முசிறி ஆகிய 5 நகராட்சிகள், பாலகிருஷ்ணம்பட்டி, கல்லக்குடி, காட்டுப்புத்தூர்,  கூத்தைப்பார்,  மண்ணச்சநல்லூர், மேட்டுப்பாளையம், பொன்னம்பட்டி, புள்ளம்பாடி, பூவாளுர், ச.கண்ணனூர், சிறுகமணி, தொட்டியம், தாத்தையங்கார்பேட்டை, உப்பிலியபுரம் ஆகிய 14 பேரூராட்சிகளுக்கு தேர்தல் நடைபெறவுள்ளது. இதனை தொடர்ந்து கடந்த மாதம் 28 ஆம் தேதி  முதல் வேட்புமனு தாக்கல் தொடங்கி 4 ஆம் தேதியுடன் முடிந்தது. திருச்சி மாவட்டத்தை பொருத்தவரை நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்காக 20 தேர்தல் நடத்தும் அலுவலர்கள்,  53 உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். திருச்சி மாநகராட்சியில் 5 நகராட்சிகள் மற்றும் 14 பேரூராட்சிகள் என  401 வார்டுகளில் 1, 262 வாக்குசாவடி மையம் அமைக்கப்பட்டுள்ளது. திருச்சி மாவட்டத்தில் மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 10,58,674 பேர்கள் உள்ளனர். இதில் ஆண்கள் 512632 பேர்களும் , பெண்கள் 545867 பேர்களும், மூன்றாம் பாலினம் 175 பேர்களும் உள்ளனர்.




நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வருகிற 19ம் தேதியும் நடைபெற உள்ளது. இதனை தொடர்ந்து வேட்புமனு தாக்கல் செய்ய வேட்பாளர்கள் அதிக அளவில் ஆர்வமாக வேட்புமனு தாக்கல் செய்தனர்.  திருச்சி மாநகராட்சியில் 65 வார்டு உறுப்பினர் பதவிக்கு 718 பேர் வேட்பு மனு தாக்கல் செய்து இருந்தனர். இதில் 15 பேர்களின் மனுக்கள் நிராகரிப்பு , 114 பேர்கள் மனுவை திரும்ப பெற்றுக்கொண்டனர், 589 வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிடுகின்றனர்.  மேலும்  நகராட்சியில் 120 வார்டு பதவிகளுக்கு 679 பேர்கள் வேட்புமனு தாக்கல் செய்து இருந்தனர்.


இதில் 12 பேர்களின் மனுக்கள் நிராகரிப்பு , 119 பேர்கள் மனுக்களை திரும்ப பெற்றுக்கொண்டனர், 544 பேர்கள் போட்டியிடுகின்றனர். இதேபோல் பேரூராட்சியில் 216 வார்டு பதவிகளுக்கு  890 பேர் மனு தாக்கல் செய்து இருந்தனர். இதில்  5 பேர்கள் மனுக்கள் நிராகரிப்பு, 90 பேர்கள் மனுவை திரும்ப பெற்றுக்கொண்டனர், இதனால்   793 பேர்கள் போட்டியிடுகின்றனர்.  திருச்சி மாவட்டத்தில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில்  2,284 பேர்கள் மனுதாக்கல் செய்ததில் 32 மனுக்கள் நிராகரிப்பு ,323 பேர்கள் மனுக்கள் வாபஸ் பெற்றனர். மேலும்  திருச்சியில் தா.பேட்டை பேரூராட்சி வார்டு.8ல் திரு. வே.கருணாநிதி, த/பெ வேணு (தி.மு.க) , தொட்டியம் பேரூராட்சி வார்டு.13 ல் திருமதி கி. சத்யா  க/பெ  ராஜ்குமார் (தி.மு.க),  துறையூர் நகராட்சி 10ஆவது வார்டு திரு.ந.முரளி,  த/பெ. நடராஜன் (திமுக)  ஆகிய மூன்று பேர்களும் போட்டியின்றி ஏகமனதாக வெற்றி பெற்றார்கள் என மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் தெரிவித்தார். இதனால் 401 வார்டு பதவிகளில்  3 பேர்கள் வெற்றி பெற்றதால் மீதமுள்ள 398 வார்டு பதவிகளுக்கு 1926 பேர்கள் போட்டியிடுகிறார்கள் என்பது குறிப்பிடதக்கது. 




திருச்சி மாவட்டத்தை பொருத்தவரை அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. அதேபோன்று இதுவரை பதற்றமான வாக்குச்சாவடி என 157 வாக்குச்சாவடி மையங்கள் கண்டறியப்பட்டுள்ளது. அந்த மையங்களில் கூடுதல் கண்காணிப்பு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் தேர்தல் விதிமுறைகளை வேட்பாளர்கள் அனைவரும் முறையாக கடைபிடிக்க வேண்டும் விதிமுறைகளை மீறுவோர் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும். குறிப்பாக பிரச்சாரத்தின் போது பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகளை பயன்படுத்தக்கூடாது.


அப்படி பயன்படுத்தினால் அந்த வேட்பாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் சிவராசு  தெரிவித்துள்ளார். மேலும் தொடர்ந்து தேர்தல் பறக்கும் படையினர் ரோந்து பணியிலும் ,வாகன சோதனையிலும்  தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.  மேலும் திருச்சி மாவட்டத்தில் தேர்தல் விதிமுறைகளை மீறியதாக இதுவரை வழக்குகள் எதுவும்  பதிவாகவில்லை எனவும் தெரிவித்தார்.