அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் சன்னதி தெருவில் பாரத ஸ்டேட் வங்கி செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியில் ஜெயங்கொண்டம் மற்றும் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கணக்கு வைத்துள்ளனர். அவர்கள் சேமிப்பு கணக்கு மூலம் இந்த வங்கியில் பணம் செலுத்தியும், வைப்பு நிதியாகவும் முதலீடு செய்துள்ளனர். மேலும் பெரும்பாலான வாடிக்கையாளர்கள் தங்க நகைகளை வங்கியில் அடகு வைத்து பணம் பெற்றுள்ளனர். இதனால் இந்த வங்கியில் கோடிக்கணக்கான பணம் மற்றும் நகைகள் லாக்கரில் வைக்கப்பட்டுள்ளன. தினமும் இந்த வங்கிக்கு ஆயிரக்கணக்கான வாடிக்கையாளர்கள் வந்து செல்கின்றனர். இந்த நிலையில் நேற்று வழக்கம்போல் வங்கி பணிகள் முடிந்து மாலை 5 மணி அளவில் வங்கி ஊழியர்கள் வங்கியை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்று விட்டனர்.
இந்த நிலையில் நேற்று இரவு சுமார் 9.30 மணி அளவில் திடீரென மின்கசிவு காரணமாக தீப்பிடித்து வங்கியின் உள்ளிருந்து குபுகுபுவென கரும்புகை வெளியேறியது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் ஜெயங்கொண்டம் தீயணைப்பு துறையினருக்கும், போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு நிலைய அலுவலர் ராஜா தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் வங்கியின் ஜன்னல் கண்ணாடி உள்ளிட்டவற்றை உடைத்து தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆனால் தீ கட்டுக்குள் வராமல் மேலும் அதிகரிக்க ஆரம்பித்தது.
இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக எந்தவித அசம்பாவிதமும் நிகழாமல் இருக்க போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் ஜெயங்கொண்டம் நகராட்சி சார்பில் தண்ணீர் லாரிகள் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டு தீயை அணைக்க பயன்படுத்தப்பட்டன. தொடர்ந்து வங்கியின் உள்ளே இருந்த தீயணைப்பு கருவிகளில் இருந்து ரசாயன கசிவு ஏற்பட்டது. இதனால் சம்பவ இடத்தில் கூடியிருந்த பொதுமக்களை அப்புறப்படுத்தும் பணியில் போலீசார் ஈடுபட்டனர். வங்கியில் தீ கட்டுக்குள் வராததால் தொடர்ந்து நள்ளிரவு வரை தீயை அணைக்கும் பணி நடைபெற்றது.
இதுகுறித்து தகவல் அறிந்த வங்கி வாடிக்கையாளர்கள் தங்களின் நகை, பணம் என்ன ஆனதோ என்ற அச்சத்தில் சம்பவ இடத்திற்கு வரத்தொடங்கினர். அவர்களையும் போலீசார் அப்புறப்படுத்தினர். தீ விபத்து ஏற்பட்ட ஜெயங்கொண்டம் ஸ்டேட் வங்கியில் பல கோடி மதிப்பிலான பணமும், கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான தங்க நகைகளும் உள்ளன என கூறப்படுகிறது. அவை பாதுகாப்பாக உள்ளனவா, அவற்றின் கதி என்ன? என்பது முற்றிலும் தீயை அணைத்தபிறகே தெரியவரும் என்று வங்கி அதிகாரிகளும், போலீசாரும் தெரிவித்தனர். இந்த சம்பவம் ஜெயங்கொண்டம் மட்டுமின்றி சுற்றுவட்டார பகுதிகளிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்