திருச்சி மாவட்டம் திண்டுக்கல் சாலை அரிஸ்டோ ரவுண்டானாவில் இருந்து கேர் கல்லூரி வரை 7.6 கிலோ மீட்டர் தூரம் உள்ளது. இந்த சாலைப்பகுதியில் அதிக அளவில் வாகன போக்குவரத்து இருப்பதால் சீக்கிரமாகவே சாலைகள் பழுதடைந்து விடுகின்றன. குறிப்பாக கருமண்டபம், பிராட்டியூர் உள்ளிட்ட பகுதிகளில் சாலை மிகவும் குறுகலாக இருப்பதால் அடிக்கடி விபத்துக்கள் நடந்து வருவது வழக்கமாகி வருகிறது. சமீபத்தில் பெய்த மழையில் மேற்கண்ட சாலை பகுதிகள் முற்றிலும் உருக்குலைந்தன. பின்னர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகையால் ஆங்காங்கே சீரமைக்கப்பட்டன. தற்போது மேற்கண்ட சாலைப்பகுதியை விரிவாக்கம் செய்து பலப்படுத்த மாநில நெடுஞ்சாலைத்துறை சார்பில் 75  கோடி ரூபாய்க்கு டெண்டர் விடப்பட்டுள்ளது. இந்த பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளன. இதையடுத்து இந்த சாலைப்பகுதியை மேம்படுத்த கடந்த 2021 டிசம்பரில் சிறப்பு திட்டத்தை நெடுஞ்சாலைத்துறையினர் வடிவமைத்து அரசுக்கு பரிசீலனை செய்தனர். அந்த அடிப்படையில் சாலையை சீரமைக்க கடந்த 75 கோடிக்கு டெண்டர் விடப்பட்டது.




திருச்சி - திண்டுக்கல் நெடுஞ்சாலையில்  பிரதான சாலையாக உள்ளது. இந்த சாலையில் அடிக்கடி விபத்துக்கள் நடப்பதாகவும், பல்வேறு இடங்களில் சாலைகள் குண்டும் குழியுமாக இருப்பதால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்பட்டு வருகிறார்கள். மேலும் ஆங்காங்கே சாலைகளில் இருந்து புறப்படும் புழுதியால் பொது மக்கள் தினந்தோறும் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். குறிப்பாக மழைக்காலங்களில் இப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது வழக்கமாக உள்ளது. அதே நேரங்களில் சாலைகளில் அதிக அளவு தண்ணீர் தேங்கி நிற்பதால் தொடர்ந்து விபத்துக்கள் அதிகமாக நடக்கும் பகுதியாக நெடுஞ்சாலை உருமாறி உள்ளது.


இவற்றை சீரமைக்கவும் விரிவுபடுத்தவும் பொதுமக்கள் சார்பாக பல்வேறு முறை மனுக்கள் அளிக்கப்பட்டுள்ளது. தற்போது தான் இதற்கு ஒரு விடிவு காலம் கிடைத்துள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். மேலும் விரைவில் சாலையை சீரமைத்தால் விபத்துகள் நடப்பதை தவிர்க்க முடியும் பொது மக்களும் மகிழ்ச்சியாக வாழ முடியும் என அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.




மேலும் இதனை தொடர்ந்து  நெடுஞ்சாலைத் துறை அதிகாரி ஒருவர் கூறும்போது, அரிஸ்டோ கார்னர் முதல் கேர் கல்லூரி வரையிலான 7.6 கி.மீட்டர் தூரச்சாலை ரூ.75 கோடி செலவில் மேம்படுத்தப்பட உள்ளது. இதில் சாலை விரிவாக்கம், பாதசாரிகளுக்கு தனிப்பாதை, தெருவிளக்கு வசதிகள் கூட செய்யப்பட உள்ளது. மேலும் மழைக் காலங்களில் சாலையில் தண்ணீர் புகுவதை தடுக்க மழைநீர் தேங்கும் பகுதிகளை கண்டறிந்து பெரிய அளவிலான வடிகால் வசதியும் செய்யப்பட உள்ளது. டெண்டர் பணிகள் இந்த வாரத்திற்குள் பூர்த்தியாகும். திட்டப்பணிகளை ஏப்ரலில் தொடங்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. 16 மாதங்களில் பணிகள் நிறைவடையும். இதுபற்றி பிராட்டியூர் பகுதி மக்கள் கூறும்போது, மழைக்காலத்தில் பிராட்டியூர் பகுதியில் சாலையில் வெள்ளநீர் தேங்கி வாகன ஓட்டிகள் கடந்து செல்ல முடியாது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்க முடிவு  செய்துள்ள  நெடுஞ்சாலைத்துறையினருக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன் என்றார்