அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் உள்ள விசாலாட்சி நகரில் வசிக்கும் செல்வம்-ஜெகதீஸ்வரி தம்பதியின் மூத்தமகள் கீர்த்தனா (19), கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் முதல் உக்ரைன் நாட்டில் உள்ள உசோரத் தேசிய பல்கலைக்கழகத்தில் மருத்துவ படிப்பு படித்து வந்தார். இந்நிலையில் கடந்த சில நாட்களாக ரஷ்யா-உக்ரைன் இடையே போர் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதனால் உக்ரைனில் இருந்த இந்திய மாணவர்கள் நாடு திரும்பி வருகின்றனர். இதேபோல் உக்ரைனில் உள்ள தனது மகள் பத்திரமாக திரும்பி வர வேண்டும் என்று கீர்த்தனாவின் பெற்றோர் எதிர்பார்ப்புடன் காத்திருந்தனர். அதன்படி கீர்த்தனா நேற்று  வீட்டிற்கு திரும்பினார். அவருக்கு ஆரத்தி எடுத்து கட்டித்தழுவி பெற்றோர் மகிழ்ச்சியுடன் வரவேற்றது நெகிழ்ச்சியை ஏற்படுத்தும் விதமாக இருந்தது.

 

இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய மாணவி கீர்த்தனா, உக்ரைன் நாட்டில் நாங்கள் இருந்த உசோரத் பகுதியில் சுமார் 150க்கும் மேற்பட்ட தமிழ் மாணவர்கள் பயின்று வந்தோம். அங்கு போர் பதற்றம் தெரியவில்லை. இருப்பினும் போர் நடைபெறுவதை அறிந்து, அங்கிருந்து மாணவர்கள் சொந்த ஊருக்கு திரும்பும் முயற்சியில் ஈடுபட்டோம். இதையடுத்து நாங்கள் இருக்கும் இடத்தில் இருந்து புறப்பட்ட நிலையில், 2 நாட்களாக வாகனம் வரவில்லை. பின்னர் இந்திய தூதரகம் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த டாக்சி அங்கு வந்தது. அதன்மூலம் ஹங்கேரி என்ற இடத்தில் உள்ள விமான நிலையத்திற்கு வந்தோம் என்றார்.

 



 

இதனை தொடர்ந்து திருச்சி மாவட்டம் உப்பிலியபுரம் ஒன்றியத்தில் உள்ள டி.முருங்கப்பட்டியைச் சேர்ந்தவர் பிரகாஷ் & சரஸ்வதி தம்பதியினரின் இளைய மகன் சந்துரு (21). உக்ரைனில்
   சிக்கி தவித்த இவர் இன்று காலை பத்திரமாக சொந்த ஊர் வந்து சேர்ந்தார். உக்ரைன் நாட்டின் லீவிவ் நகரத்தில் உள்ள டேனிலோ ஹவிஸ்ட்கி லீவிவ் நேஷனல் மெடிக்கல் யுனிவர்சிட்டியில் மருத்துவப்படிப்பு 3 ஆம் ஆண்டு படித்து வருகிறார். ரஷ்யா உக்ரைன் போர் பதட்டம் காரணமாக உக்ரைனில் இருந்து வெளிநாட்டவர் அனைவரும் வெளியேறி வருகின்றனர். பிரகாஷ் தனது மகனை உக்ரைனில் இருந்து மீட்டுத்தருமாறு திருச்சி மாவட்ட அலுவலகத்தில் மனு அளித்திருந்த நிலையில், இந்திய தூதரகம் சந்துருவை மீட்டு வந்துள்ளது.

 

உக்ரைனில் இருந்து ஹங்கேரிக்கு ரெயில் மூலம் பயணம் செய்து, ஹங்கேரியில் உள்ள இந்திய தூதரகம் மூலம் புடாபெஸ் விமான நிலையத்தில் இருந்து இந்தியாவிற்கு புறப்பட்ட 8 வது விமானம் மூலம் டெல்லிக்கு வரவழைக்கப்பட்டுள்ளார். அங்கு இருந்து பெங்களூர் விமானநிலையம் வந்தடைந்தோம். மேலும் அங்கிருந்து கார் மூலம் எனது சொந்த ஊர்கு வந்தடைந்தேன் என்றார்.

 



 


இந்த பதற்றமான சூழ்நிலையில் மாணவர்கள் அனைவரும் மிகுந்த அச்சத்தில் இருந்தோம். மீண்டும் நாடு திரும்ப முடியுமா என சந்தேகத்தில் இருந்தநிலையில் எங்களை பாதுகாப்பாக மீட்க முயற்சி செய்த  மத்திய, மாநில அரசுகளுக்கும், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் பிரதமர் மோடி ஆகியோருக்கும் எனது குடும்பத்தின் சார்பாக நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்றனர். மேலும் உக்ரைன் நாட்டில் சிக்கி தவிக்கும் மற்றவர்களையும் உடனடியாக பாதுக்கபாக மீட்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.