பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள வயலப்பாடி கோவிந்தராஜ பட்டினம் செல்லும் சாலையில் தனியார் சுண்ணாம்புக்கல் சுரங்கம் உள்ளது. இந்த சுரங்கம் கடந்த சில ஆண்டுகளாக மூடப்பட்டிருந்தது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு இந்த சுண்ணாம்புக்கல் சுரங்கம் மீண்டும் செயல்படும் விதமாக சுரங்கத்தில் உள்ள தண்ணீரை சக்திவாய்ந்த மோட்டார் வைத்து வெளியேற்றி வருகின்றனர்.
இதையறிந்த கோவிந்தராஜ பட்டினம் கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் அந்த சுண்ணாம்புக்கல் சுரங்கத்திற்கு சென்று தண்ணீர் வெளியேற்றுவதை நேற்று முன்தினம் தடுத்து நிறுத்தினர். மேலும் சுரங்கத்தில் இருந்து தொடர்ந்து தண்ணீரை வெளியேற்றுவதால் சுற்றுப்பகுதியில் உள்ள ஆழ்குழாய் கிணறுகள் மற்றும் வயல்களில் உள்ள திறந்தவெளி கிணறுகளில் நீர்மட்டம் குறைய வாய்ப்புள்ளதாகவும், வயலப்பாடி, வீரமநல்லூர், காரைப்பாடி, ஓலைப்பாடி, கோவிந்தராஜபட்டினம் உள்ளிட்ட கிராமங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பு உள்ளதாகவும், சுரங்கத்தில் உள்ள தண்ணீரை வெளியேற்றக்கூடாது என்றும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதனை தொடர்ந்து பொதுமக்கள் நாங்கள் குடிநீர் இல்லாமல் தவித்து வருகிறோம், பல முறை மனுக்கள் கொடுத்து எந்தவிதமான நடவடிக்கைகளையும் அதிகாரிகள் இதுவரை எடுக்கவில்லை என குற்றம்சாட்டினர்.
மேலும் சுண்ணாம்புக்கல் சுரங்க நிர்வாகத்தினர் உரிய அனுமதி பெற்று தற்போது சுரங்கத்தை செயல்படுத்த உள்ளனர். எனவே பொதுமக்கள், மாவட்ட நிர்வாகத்திடம் உரிய வகையில் மனு கொடுத்து நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுக்குமாறு கேட்டுக் கொண்டதன் பேரில் பொதுமக்கள் கலைந்து சென்றனர். இந்த சாலை மறியல் போராட்டத்தால் அப்பகுதியில் 4 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆகையால் மக்கள் தங்களது பகுதியில் இருக்கும் கோரிக்கைகளை உரிய அதிகாரிகளிடம் மனு கொடுத்து அதன் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என கோரிக்கை முன்வைக்க வேண்டும். ஆனால் மக்கள் சாலை மறியல் போராட்டம், பொது அமதிக்கு குந்தகம் வைப்பது என தவறான செயல்களில் ஈடுபட கூடாது என காவல்துறையின் தெரிவித்தனர்.இந்நிலையில் மறியலில் ஈடுபட்டது தொடர்பாக மொத்தம் 21 பேர் மீது குன்னம் காவல்துறையினர் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.