திருச்சி மாவட்டத்தில் 13 மையங்களில் மருத்துவ படிப்பிற்கு மாணவர் சேர்க்கைக்கான நீட் நுழைவுத்தேர்வு நடைபெற்றது. இதையொட்டி மாணவ, மாணவிகள் காலை 9 மணியில் இருந்தே தேர்வு மையங்களுக்கு வரத்தொடங்கினர். ஹால் டிக்கெட் சோதனை செய்யப்பட்ட பின்னர் பகுதி வாரியாக மாணவ, மாணவிகள் தேர்வு அறைக்குள் செல்ல காலை 11 மணி முதல் மதியம் 1.30 மணி வரை அனுமதிக்கப்பட்டனர். இதைத்தொடர்ந்து மதியம் 2 மணி முதல் மாலை 5.20 மணி வரை தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வை எழுத 7 ஆயிரத்து 596 பேர் பதிவு செய்திருந்தனர். இதில் 7 ஆயிரம் பேர் நேற்று தேர்வு எழுதினர். 596 பேர் தேர்வு எழுத வரவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் தேர்வு எழுதிய மாணவ, மாணவிகளுக்கு பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. இதன்படி தேர்வறைக்குள் அனுமதிக்கப்படும் முன்பு மாணவ, மாணவிகள் அணிந்திருந்த சங்கிலி, காதணி, மோதிரம், கொலுசு, வளையல் போன்றவற்றை தங்களது பெற்றோர்களிடம் கழற்றி கொடுத்தனர். கைக்கெடிகாரம் அணிந்து செல்ல அனுமதி மறுக்கப்பட்டதால், அதனையும் கழற்றி கொடுத்தனர். பெரும்பாலான மாணவ, மாணவிகள் சாப்பிடாமல் வந்து தேர்வு எழுதினர். சிலர் தேர்வு எழுதும் மையத்தின் முன்பு அவசர அவசரமாக சாப்பிட்டு விட்டு தேர்வு எழுத சென்றனர்.
மேலும் மாணவ, மாணவிகள் பேனா கொண்டு வரவும் அனுமதிக்கப்படாததால், தேர்வு அறையிலேயே அவர்களுக்கு பேனா வழங்கப்பட்டது. மாணவர்கள் அரைக்கை சட்டை அணிந்து வந்திருந்தனர். அதில் பொத்தான் பெரிதாக இருக்கக்கூடாது என்ற விதிமுறையும் கடைபிடிக்கப்பட்டது. தேர்வு மையத்திற்குள் கால்குலேட்டர், செல்போன், கைப்பை, ஹெட்போன், பென்டிரைவ், கேமரா ஆகியவற்றை கொண்டு செல்ல அனுமதி மறுக்கப்பட்டது. குறைந்த உயரம் கொண்ட செருப்புகளை மட்டுமே அணிந்து வர அனுமதிக்கப்பட்டிருந்தது. இதற்கிடையே தேர்வு எழுத வந்திருந்த மாணவ, மாணவிகளின் பெற்றோர்கள் காலை முதல் மாலை வரை அந்தந்த மையங்களில் வெளியே அமர்ந்திருந்தனர். சிலர் வெயிலையும் பொருட்படுத்தாமல் காத்திருந்தனர். தேர்வு முடிந்தபின்னர் வந்த தங்கள் பிள்ளைகளை அவர்கள் அழைத்து சென்றனர். மேலும் நீட் தேர்வு நடைபெறும் இடங்களில் பெற்றோர்கள் அமர்வதற்கும், தேவையான அடிப்படை வசதிகள், குறிப்பாக குடிநீர் வசதிகள் செய்து தரவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்