திருச்சி மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக பணம் பிரச்சனை, முன்விரோதம், பழிக்குபழி வாங்குதல் என பல்வேறு காரணங்களுக்காக கொள்ளை, கொலை சம்பவங்கள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் திருச்சி மாநகர், அரியமங்கலம் அம்மாக்குளம் பாரதியார் தெரு பகுதியைச் சேர்ந்தவர் ரஹ்மத்துல்லாஹ் என்பவரது மகன் முகமது தெளபிக் ராஜா (23). இவர் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் அப்பகுதி கிளைச் செயலாளராக இருந்து வருகிறார்.இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த சிலருக்கு மாரியம்மன் கோயில் திருவிழாவில் இருந்து முன் விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு அவர் அப்பகுதியில் அமர்ந்திருந்த போது முன் விரோதம் காரணமாக அந்த கும்பல் முகமது தெளபிக் ராஜாவை ஆபாசமாக திப்பியும் அரிவாளால் வெட்டியும் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.இதில் பலத்த காயமடைந்த முகமது தெளபிக் ராஜாவை அக்கம் பக்கத்தினர் காப்பாற்றி திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இந்தத் தகவலை அறிந்த இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் நேற்று முன் தினம் இரவு திருச்சி அரசு மருத்துவமனையை முற்றுகையிட்டு பின்னர் மருத்துவமனை முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர்.




மேலும் இச்சம்பவம் குறித்து முகமது தெளபிக் ராஜா அரியமங்கலம் போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில் அரியமங்கலம் முல்லை தெருவை சேர்ந்த பாலசுப்பிரமணியன் மகன் நிஷாந்த் (எ) பன்னீர் செல்வம்(23), அம்மா குளம் கலைவாணர் தெருவை சேர்ந்த லட்சுமணன் மகன் ஆசைமுத்து (24), மலையடிவாரம் காந்திஜி தெருவை சேர்ந்த ஆறுமுகம் மகன் சந்தோஷ் குமார் ( 20 ). மேலும் அதே பகுதியை சேர்ந்த செல்வராஜ் மகன் பாலாஜி (20), உக்கடை மலையடிவாரம் அரியமங்கலத்தை சேர்ந்த ராமு மகன் ரெங்கா (எ) ரெங்கநாதன்(19), அரியமங்கலம் சிவகாமி அம்மையார் தெருவை சேர்ந்த செல்வத்தின் 17 வயது மகன் ஆகிய 7 பேரை அரியமங்கலம் போலீசார் கைது செய்ததோடு அவர்களை திருச்சி 6வது குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி 5 பேரை திருச்சி மத்திய சிறையிலும் ஒருவரை சிறுவர் சீர்திருத்த பள்ளியிலும் அடைத்தனர். மேலும் 2 பேர் தலைமறைவாக உள்ள நிலையில் அவர்களை காவல் துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.









ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண