திருச்சி மாவட்டம்,  லால்குடி அருகே மேல வாளாடியில் 2ம் தேதி அதிகாலை ரயில் தண்டவாளத்தில் லாரி டயர்களை மர்ம நபர்கள் வைத்து சென்ற விவகாரம் தொடர்பாக திருச்சி மண்டல ரயில்வே எஸ்.பி செந்தில் குமார் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், “திருச்சி ரயில்வே காவல் மாவட்டம் லால்குடி மேளவாளாடியில்  ரயில் தண்டவாளத்தில் 2 டயர்களை வைத்த கவிழ்க்க சதி செய்ததாக தகவல் பரவியது. இந்நிலையில் நாகர்கோவில் சென்னை எஸ்பிரஸ் அன்று சில நிமிடங்கள் நின்று சென்றது. திருச்சி ரயில்வே டி.எஸ்.பி தலைமையில் 3 தனிப்படை விசாரணை செய்தனர். இதனை தொடர்ந்து காவல்துறை மற்றும் ரயில்வே காவல்துறை அதிகாரிகள் இணைந்து தீவிர விசாரணையில் ஈடுபட்டனர். மேலும், ரயில்வே தண்டவாளத்தில் டயர்களை வைத்த இடத்தில் சுற்றி உள்ள பகுதிகளில் யார் யார் வந்து சென்றனர். சந்தேகம்படும்படி யாராவது வந்தார்களா என தனிபடைப் போலீசார் விசாரணை செய்தனர். மேலும் கடந்த சில நாட்களாக தலைமறைவாக உள்ளவர்கள் யார் என்பதையும் அவர்கள் ஆய்வு செய்தனர். இந்த வழக்கு தொடர்பாக கிட்டத்தட்ட 30க்கும் அதிகமான நபர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.




திருச்சி ரயில்வே டிஎஸ்பி பிரபாகரன் தலைமையில் அமைக்கப்பட்டிருந்த தனிப்படை போலீசார் நேற்று குற்றவாளிகளை அடையாளம் கண்டனர். இதில் மேலவாளாடியை சேர்ந்த  வெங்கடேசன், பிரபாகரன்,கார்த்திக் ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டனர். தொடர்ந்து குற்றவாளிகளிடம் நடத்தபட்ட விசாரணையில் மேலவாளடியில் சுரங்க பாதை  சரியான இடத்தில் கட்டவில்லை என்றும் முறையாக சாலை வசதி இல்லை என்றும் குற்றம்சாட்டி அரசின் கவனத்தை ஈர்க்க இவர்கள் 3 பேரும் டயரை வைத்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் இவர்கள் 3 பேர் மீது ரயில் கவிழ்ப்பு முயற்சி என்கிற  அடிப்படையில் ரயில்வே சட்டம்  IR 151 பிரிவில் வழக்கு பதிவு செய்யப்படும். ரயிலை கவிழ்க்க திட்டம் என்கிற அடிப்படையில் இவர்கள் 3 பேர் மீதும் கடுமையான தண்டனை,
நடவடிக்கை இருக்கும். ரயில் போக்குவரத்து என்பது வெகுஜன மக்கள் அதிகம் பயன்படுத்த கூடியது, எனவே இதுபோன்று  கெட்ட என்னத்துடன் செயல்பட்டால் அவர்கள் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும். குறிப்பாக சென்னை, திருச்சியில் கஞ்சா தடுப்பு வேட்டையில் இந்தாண்டு ஜனவரி1-ம் தேதி முதல் இதுவரை  764 கிலோ கஞ்சா பிடித்துள்ளோம், 116 நபர்கள் வரை கைது செய்துள்ளோம். ரயில்வே தண்டவாளங்களில் நிழலுக்காக அமர்ந்திருப்பது, ஆடு மாடுகள் மேய்ப்பது, அமர்ந்து குடிப்பது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடாது” என தெரிவித்தார்.