தமிழகத்திலேயே அதிக ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறும் மாவட்டமாக  புதுக்கோட்டை மாவட்டம் திகழ்ந்து வருகிறது. அந்த வகையில், 2024ஆம் ஆண்டிற்கான தமிழகத்தின் முதல் ஜல்லிக்கட்டு போட்டி புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை அருகே உள்ள தச்சங்குறிச்சி கிராமத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற விண்ணேற்பு அன்னை ஆலய புத்தாண்டு மற்றும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நேற்று காலை 8 மணி அளவில் வெகு விமரிசையாக நடைபெற்றது. இப்போட்டியை தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன், மாவட்ட ஆட்சியர் மெர்சி ரம்யா, சட்டமன்ற உறுப்பினர்கள் முத்துராஜா, புதுக்கோட்டை வடக்கு மாவட்ட திமுக செயலாளர் செல்லபாண்டியன் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.


முதலாவதாக, சட்டத்துறை அமைச்சர் ரகுபதி உறுதிமொழி வாசிக்க மாடுபிடி வீரர்கள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். இதனையடுத்து கோயில் காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. அதன்பின்னர் புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருச்சி, மதுரை, திண்டுக்கல், தேனி, சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து அழைத்து வரப்பட்ட 571 காளைகள் ஒன்றன்பின் ஒன்றாக களம் இறக்கப்பட்டது. 




இதனைக் களத்தில் இருந்த 250 மாடு பிடி வீரர்கள் சுழற்சி முறையில், களம் இறங்கி மாடுகளை அடக்கிய காட்சிகள் பார்வையாளர்களை வெகுவாக ஈர்த்தன. இந்த போட்டியில் வெற்றி பெற்ற மாடுபிடி வீரர்களுக்கும், காளைகளின் உரிமையாளர்களுக்கும் சைக்கிள், கட்டில், மிக்ஸி, குக்கர் உள்ளிட்ட பரிசுப் பொருட்களும், ரொக்கப் பரிசுகளும் விழாக்குழு சார்பில் வழங்கப்பட்டது.


இந்த போட்டியில் காளைகள் பாய்ந்தபோது, 50  பேர் வரை காயமடைந்தனர். இதில், படுகாயமடைந்த 8  பேர் சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த போட்டியில் புதுக்கோட்டை மாவட்டம், கைக்குறிச்சி கிராமத்தை சேர்ந்த தமிழ்செல்வத்தின் 'சாமி காளை' களத்தில் நின்று விளையாடி முதல் பரிசை தட்டிச் சென்றது. இதேபோல் தஞ்சாவூர் மாவட்டம், இராயமுண்டான்பட்டி கிராமத்தைச் சேர்ந்த அறிவழகன் மகன் 'சுகேந்த்' என்ற மாடுபிடி வீரர் 12 காளைகளை அடக்கி முதலிடத்தை பிடித்தார். அவர்கள் இருவருக்கும் 2 பல்சர் பைக்குகள் பரிசாக வழங்கப்பட்டது.




ஜல்லிக்கட்டு போட்டியில் களத்தில் காளைகள் சீறிப்பாயும்போது, அவற்றின் வேகத்திற்கு இணையாக வீரர்களும் சிறப்பாக இந்தக் காட்சி பார்ப்பவர்களின் கண்களை மிகவும் கவரும் வகையில் இருந்தது. தென் மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பொதுமக்கள் ஜல்லிக்கட்டு போட்டியை காண்பதற்கு குவிந்தனர். இதனால் அப்பகுதியில் எந்தவிதமான அசம்பாவித சம்பவம் ஏற்படாமல் இருப்பதற்கு காவல்துறையினர் முழு பாதுகாப்பில் ஈடுபட்டனர். 


குறிப்பாக, குறிப்பிட்ட கால நேரத்திற்குள் ஜல்லிக்கட்டு போட்டி நிறைவு பெற்ற நிலையில், வாடிவாசல் வழியாக அவிழ்த்து விடாத காளைகளை அழைத்து வந்தவர்கள் காளைகளை அவிழ்க்க சொல்லி கூச்சலிட்டனர். அவர்களை விழா கமிட்டியினர் சமாதானம் செய்ய முற்பட்ட நிலையில் அவர்கள் காளைகளை பொது வழியில் அவிழ்த்து விடப்பட்டதால் சிறிது நேரம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.