திருச்சி மாநகராட்சி மொத்தம் 167.23 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்டுள்ளது. இதில் பொதுமக்களின் தேவைகளை அறிந்து மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநகராட்சி மன்ற பொறுப்பாளர்கள் அதிகாரிகள் மூலம் பல்வேறு திட்டங்கள் தயாரிக்கப்பட்டு அரசு நிதி பெற்று நிறைவேற்றப்பட்டு வருகிறது. கடந்த அதிமுக ஆட்சியின் போது மாநகராட்சி பகுதிகளில் பாதாள சாக்கடை குழாய் பதிக்கும் பணிகள் நடந்தது. மந்தகதியில் நடந்து வந்த பணியால் பொதுமக்கள் பெரிதும் பாதிப்பிற்குள்ளாகினர். இதில் திமுக அரசு அமைந்தவுடன் நடத்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலில் பெரும்பான்மையான இடங்களில் திமுக வெற்றி பெற்று மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சிகளில் மக்கள் பணியாற்றி வருகின்றனர். இதில் திருச்சி மாநகராட்சியில் மந்த கதியில் நடந்து வந்த பாதாள சாக்கடை திட்டப்பணிகள் மற்றும் புதிய குடிநீர் குழாய் பதிக்கும் பணிகள் தற்போது முழுவீச்சாக நடந்து வருகிறது.




மேலும், மாநகரில் பிளாஸ்டிக் பயன்பாட்டை முற்றிலும் ஒழிக்கும் வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு, பிளாஸ்டிக் பயன்பாட்டை தடுக்கும் வகையில் கடைகளில் தீவிர சோதனை நடத்தி அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. மேலும் பாதாள சாக்கடை பணிகள் முடிந்த பகுதிகளில் புதிய தார் சாலைகள் போடப்பட்டு வருகிறது. இந்த பணிகளை மாநகர மேயர் அன்பழகன், மாநகராட்சி கமிஷனர் வைத்திநாதன் மற்றும் அதிகாரிகள் பார்வையிட்டு ஆய்வு நடத்தி வருகின்றனர். மேலும், மாநகராட்சி பகுதிகளில் நடந்து வரும் பொதுமக்களுக்கான திட்டப்பணிகளில் பொதுமக்களுக்கு எவ்வித இடையூறுமின்றியும் வாகன போக்குவரத்திற்கு இடையூறு இன்றி நடத்தி முடிக்க வேண்டும் என மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் ஒப்பந்தக்காரர்களுக்கு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து பாதாள சாக்கடை குழாய் பதிக்கும் பணிகள் மற்றும் குடிநீருக்கு புதிய குழாய் பதிக்கும் பணி நடந்து வந்த நிலையில் பணிகள் முடிந்த பகுதிகளில் உடனுக்குடன் சாலைகள் அமைக்கப்பட்டு வருகிறது. இதனால் தற்போது ஒருசில பகுதிகளை தவிர மற்றும் பகுதிகளில் சாலைகள் அமைக்கப்பட்டதால் பொதுமக்கள் நிம்மதியடைந்துள்ளனர்.




இதனை தொடர்ந்து  மாநகராட்சி ஆணையர் வைத்திநாதன் தெரிவித்தது.. அம்ருத் திட்டத்தின்படி பாதாள சாக்கடைக்காக குழாய் பதிக்கும் பணிகள் மாநகராட்சி பகுதிகளில் சுமார் 638 கிமீ அளவிற்கு நடந்து வருகிறது. இதில் பணிகள் முடிந்த 409 கி.மீ பகுதிகளில் 90 கி.மீ அளவிற்கு தார் சாலைகள் அமைக்கும் பணிகள் நடந்து முடிந்துள்ளது. மேலும் 180 கி.மீ அளவிற்கு தார்சாலைகள் அமைக்கும் பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது. அதுபோல் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பாதாள சாக்கடைக்காக குழாய் பதிக்கும் பணிகள் 210 கி.மீ அளவிற்கு நடக்கிறது. இதில் 70 கிமீ அளவிற்கு பணிகள் நடந்து முடிந்து, தற்போது தார் சாலைகள் அமைக்கும் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதில் 40 கி.மீ அளவிற்கு பணிகள் நடந்து முடிந்துள்ளது. அதுபோல் குடிநீர் குழாய் பதிக்கும் பணிகள் 103 கிமீ அளவிற்கு நடந்து வருகிறது. இதில் 72 கி.மீ அளவிற்கு பணிகள் நடந்து முடிந்துள்ளது. இந்த பகுதிகளில் ஒரு மாதத்திற்குள் பணிகள் முடிக்கப்பட்டு சாலைகள் போடப்படும் என தெரிவித்தார். மேலும் மழைகாலம் என்பதால் பணிகள் நடைபெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது என்றார்.