திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் வட்டம், கும்பக்குடி, அரசங்குடி, கிளியூர், கடியா குறிச்சி, திருச்செந்துறை, கோமாகுடி உள்ளிட்ட 22 கிராமங்களும், அதேபோன்று திருச்சி மாநகராட்சி பகுதிக்கு உட்பட்ட புத்தூர்,தென்னூர் ஆகிய பகுதிகளில் உள்ள 25,500 ஏக்கர் நிலம் வக்பு வாரியத்திற்கு சொந்தமான நிலம் எனவும் இந்தப் பகுதியில் பத்திரப்பதிவு கூடாது என பத்திர பதிவு துறைக்கு என வக்பு வாரியம் தெரிவித்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். தமிழகத்தில் உள்ள அனைத்து சார்பதிவாளர் அலுவலகங்களுக்கும் வக்பு வாரியம் சார்பில், அதன் தலைமை நிர்வாக அலுவலர் ரபியுல்லா கடந்த மாதம் 18ம் தேதி ஒரு கடிதம் எழுதினார். அதில் வக்பு வாரியத்திற்கு சொந்தமான நிலங்கள் மற்றும் சொத்துகளின் விவரங்களை பட்டியலிட்டு, அந்த சொத்துக்களை வாங்கவோ விற்கவோ அனுமதிக்கக் கூடாது என்று கேட்டுக் கொண்டார். திருச்சி மாவட்டத்தில் உள்ள, 12 துணை சார்பதிவாளர் அலுவலகத்திற்கு இந்த கடிதம் வந்துள்ளது.




மேலும், திருவெறும்பூர் சார்பதிவாளர் அலுவலகத்திற்கு உட்பட்ட கும்பக்குடி, அரசகுடி, கே.சாத்தனூர் துணைப்பதிவாளர் அலுவலகத்திற்கு உட்பட்ட சூரியூர், குண்டூர் மற்றும் திருச்சி இணைப் பதிவாளர் அலுவலகத்திற்கு உட்பட்ட திருச்செந்துறை ஆகிய கிராமங்கள் வக்பு வாரியத்தின் சொத்துகளாக குறிப்பிடப்பட்டிருக்கின்றன. இதனால், திருச்சி மாவட்டத்தில், 6 கிராமங்களில் வசிக்கும் மக்கள், சொத்துக்கள் வாங்கவோ, விற்கவோ முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் இதனால் திருச்சி மாவட்டத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 




இந்நிலையில் திருச்சி மாவட்டம் ஜீயபுரத்தையடுத்த திருச்செந்துறை, சந்திரசேகர சுவாமி கோவிலில் சுவாமி தரிசனம் செய்த பா.ஜ.க. மூத்த தலைவர் எச். ராஜா செய்தியாளர்களை சந்தித்தபோது அவர் கூறியது..  இந்த கிராமத்தில் வசிக்கும் இந்துக்கள் சொத்துக்களை கொள்ளையடிக்கும் முயற்சியில் வக்பு வாரிய தலைமை செயல் அலுவலர் ஈடுபட்டுள்ளார். இங்கு நடப்பதுதிமுக ஆட்சியா? அல்லது மாலிக்காபூர் ஆட்சியா? என்ற சந்தேகம் எழுகிறது. இந்து சமய அறநிலைத்துறைக்கு சொந்தமான கோவில்கள் கோயில் நிலங்கள் குறித்து சட்டமன்றத்தில் இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேகர் பாபு ஒரு நீண்ட பட்டியலை வாசித்தார். அந்த பட்டியலின் அடிப்படையில் இந்து கோவில்களுக்கு சொந்தமான சொத்து விவரங்களை முழுமையாக சேகரித்து , சம்பந்தப்பட்ட சார் பதிவாளர் அலுவலகத்தில் அனுப்பி வைக்க வேண்டும். இந்த நிலங்கள் அனைத்தும் இந்து சமய அறலைக்கு சொந்தமான நிலங்கள் என தகவல் பலகையில் ஒட்டி வைத்திருக்க வேண்டும். 15 தினங்களுக்குள் சேகர் பாபு இதனை செய்ய வேண்டும். இல்லை என்றால் உணர்வுள்ள இந்துக்கள் ஒன்று கூடி தொடர் போராட்டங்களை முன்னெடுப்பார்கள். ஆண்டாண்டு காலமாய் இந்து கிராமங்களில் வசித்து வரும் இந்துக்களை வெளியேற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ள வக்பு போர்டு சிஇஓ ரபியுல்லாவை சஸ்பெண்ட் செய்வதுடன் கைது செய்ய வேண்டும் என தெரிவித்தார். 




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண