புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் ஒன்றியம் வேங்கைவயல் கிராமத்தில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மர்ம ஆசாமிகள் அசுத்தம் கலந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். மாற்றப்பட்டது. 100-க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தியும் இதுவரை குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை. இந்தநிலையில் தமிழக வாழ்வுரிமை கட்சியை சேர்ந்த மாநில இளைஞர் அணி செயலாளர் முருகானந்தம், புதுச்சேரி மாநில இளைஞர் அணி தலைவர் அருள்ஒளி, சேலம் மாவட்ட மாணவர் அணியை சேர்ந்த கவியரசன், சிவகங்கை நகர செயலாளர் அஜித் செல்வராஜ் ஆகியோர் நேற்று சம்மட்டியுடன் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மீது ஏறி நின்று முழக்கமிட்டதுடன் சம்மட்டியால் தண்ணீர் தொட்டியை உடைக்க முயன்றனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த மாவட்ட போலீஸ் துணை சூப்பிரண்டு ராகவி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் உடன்பாடு ஏற்படவில்லை. அப்போது அவர்கள் கூறுகையில், குடிநீர் தொட்டியில் அசுத்தம் செய்த குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும். அசுத்தம் கலந்த மேல்நிலை நீர்த்ேதக்க தொட்டியை உடனடியாக அகற்ற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் நின்றுகொண்டு கோஷங்கள் எழுப்பினர். மேலும், மாவட்ட கலெக்டர் சம்பவ இடத்திற்கு வந்து உறுதி அளித்தால் மட்டுமே நாங்கள் கீழே இறங்குவோம் என்று கூறினர்.
இதையடுத்து போலீசார் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தியதால் 4 பேரும் கீழே இறங்கினர். பின்னர் 4 பேரையும் வெள்ளனூர் போலீசார் கைது செய்து நிலையம் அழைத்து சென்றனர். பின்னர் திருக்கோகர்ணம் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையில் அந்த பகுதியில் வசிக்கும் மாற்று சமூகத்தை சேர்ந்த பொதுமக்கள், வெளியூர் ஆட்களை அழைத்து வந்து ஒரு சிலர் இது போன்ற போராட்டங்களில் ஈடுபட வைப்பதாகவும், குற்றவாளிகள் அடையாளம் தெரிந்தும் போலீசார் அவர்களை கைது செய்யாமல் எங்களை குற்றவாளிகள் போல் சித்தரித்து வருவதாகவும் கூறி திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி இதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி உண்மையான குற்றவாளிகளை விரைந்து கைது செய்வார்கள் என்று கூறினர். இதில், சமாதானம் அடைந்த அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவம் காரணமாக அப்பகுதியில் அசம்பாவிதம் நடைபெறாமல் இருக்க போலீசார் குவிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்