தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் போதை மருந்துகளின் பயன்பாடும் அதற்கு அடிமையாகிறவர்கள் தொகையும், அதிகமாகி வருவதை நினைக்கும்போது, எனக்கு கவலையும் வருத்தமும் அதிகமாகிறது. இதனை தொடர்ந்து தமிழகத்தில் போதைப்பொருள் பயன்பாட்டை முற்றிலும் ஒழிக்க காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டு இருந்தார்.


அதில், இதனை தடுக்க வேண்டுமானால் இரண்டு விதமான முறைகளில் நாம் சென்றாக வேண்டும். முதல் வழி, போதை மருந்து நடமாட்டத்தைக் கட்டுப்படுத்துவது. அதனை விற்பனை செய்பவர்களைக் கைது செய்வது. மேலும்  போதை மருந்துகளைப் பயன்படுத்த வேண்டாம் என்றும், அதனால் ஏற்படும் பாதிப்புகளை உணர்த்துவதும் இரண்டாவது வழி ஆகும். குறிப்பாக கஞ்சா விளைவிப்பதை முற்றிலுமாக தடுத்தாக வேண்டும், மலையடிவாரங்களைக் கண்காணித்தாக வேண்டும், அண்டை மாநிலங்களில் இருந்து கடத்தி வருவதை தடுத்தாக வேண்டும், எல்லை மாவட்டங்களில் சோதனைச் சாவடிகளை அதிகப்படுத்த வேண்டும், கடலோர மாவட்டங்களில் நிச்சயமாக கண்காணிப்பை அதிகப்படுத்த வேண்டும், காவல் துறையினரின் ரோந்து அதிகரிக்க வேண்டும், அனைத்துத் துறைகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும், போதைப் பொருள்கள் அதிகம் விற்பனையாகும் இடங்களை நிரந்தரமாக கண்காணிக்க வேண்டும், பள்ளி, கல்வி நிறுவனங்களுக்கு அருகில் விற்கப்படுவதை தடுக்க வேண்டும் என்றார். 




மேலும் தமிழகத்தில் போதைப்பழக்கத்திற்க்கு அதிகமாக இளைஞர்கள், பள்ளி, மாணவர்கள் அடிமையாகிறார்கள் என்ற தகவல் மிகுந்த வேதனை அளிப்பதாக தெரிவித்தார். ஆகையால் பெற்றோர்கள், ஆசிரியர்களின் பங்கு மிகமிக முக்கியமானது! பாதி நேரம் பெற்றோருடனும், பாதி நேரம் ஆசிரியர்களுடனும்தான் படிக்கும் காலத்தில் பிள்ளைகள் இருக்கிறார்கள். எனவே அவர்களை நல்வழிப்படுத்த வேண்டிய பொறுப்பு பெற்றோர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் இருக்கிறது. தங்கள் பிள்ளைகளோடு பெற்றோர்கள் அதிக நேரத்தை செலவு செய்ய வேண்டும். என்றார்.


இதனை தொடர்ந்து  அனைத்து மாவட்டத்திலும் போதைப்பொருள் விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்த வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார். அதனப்டி திருச்சி மாவட்டத்தில் கடந்த 4 நாட்களாக போதைப்பொருள் பற்றிய விழிப்புணர்வை மனித சங்கலி, பேரணி, மாரத்தான் போட்டி என பள்ளி, கல்லூரி மாணவர்களை கொண்டு  மாவட்ட நிர்வாகம் ஏற்படுத்தி வருகிறது. 




திருச்சி மாவட்டத்தில் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் பயன்பாட்டை தடுக்க போலீசார் தீவிர ரோந்து பணியை மேற்கொண்டு வருகிறார்கள்.


இந்தநிலையில் திருச்சி ராம்ஜிநகர் பகுதியில் கஞ்சா விற்பனை நடப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து ஜீயபுரம் போலீஸ் துணை சூப்பிரண்டு பரவாசுதேவன் தலைமையில், இன்ஸ்பெக்டர் வீரமணி, சப்-இன்ஸ்பெக்டர் சரவணகுமார் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட போலீசார் நேற்று காலை ராம்ஜிநகர் பகுதியில் அதிரடி சோதனை நடத்தினார்கள். அப்போது அந்த பகுதியில் உள்ள ஒரு வீட்டின் பின்புறமுள்ள குளத்தில் தண்ணீர் இல்லாத இடத்தில் முட்புதர்களுக்கு இடையே கஞ்சா மூட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது. போலீசார் அங்கு இருந்த 4 கிலோ கஞ்சா மற்றும் 100 கிலோ கஞ்சா கழிவுகள் ஆகியவற்றை கைப்பற்றினர்.


இது தொடர்பாக நியூகாட்டூரை சேர்ந்த சரிதா (வயது 37), அவருடைய மகள் சிவானி (20), மில்காலனியை சேர்ந்த துளசி (68) ஆகிய 3 பெண்களை கைது செய்தனர். மேலும் அவர்கள் எங்கிருந்து கஞ்சாவை வாங்கி வந்தார்கள். இதில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா? என தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவத்தால் நேற்று அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.