திருச்சியில் தனியார் விடுதியில் வேளாண் உட்கட்டமைப்பு நிதி கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் தமிழக உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கலந்து கொண்டார். இந்தக் கருத்தரங்கில் பேசிய அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், முதல் நாளில் முதலமைச்சர் ஆக்கியவரை, மறுநாளில் தூக்கி எறியக்கூடிய மனப்பக்குவம் உள்ளவர் தமிழகத்தில் முதல்வராக இருந்திருக்கிறார் என எடப்பாடி பழனிசாமியை சாடிப் பேசியுள்ளார். அப்போது பேசிய அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், வேளாண் உட்கட்டமைப்பு நிதி திட்டத்தின் கீழ் 12 ஆண்டிற்கு தமிழ்நாட்டிற்கு 5,990 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துவதன் மூலம் 15 முதல் 20 சதவீதம் வரை அறுவடைக்கு பின் ஏற்படும் இழப்புகளை குறைக்க முடியும், இத்திட்டத்தின் மூலம் தொடக்க வேளாண்மை கடன் சங்கங்கள், உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள், தொழில் முனைவோர்கள் ஆகியோர் பயன்பெறலாம் எனத் தெரிவித்துள்ளார். 




மேலும் பேசிய அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வேளாண் துறையை விமர்சித்து அறிக்கை வெளியிட்டதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பேசியுள்ளார். அமைச்சர் பன்னீர்செல்வம் பேசுகையில், 'கட்சியை தக்க வைப்பதற்காக எடப்பாடி பழனிசாமி வேளாண் துறையின் செயல்பாடுகள் குறித்து, நாகரிகமற்ற வார்த்தைகளை பயன்படுத்தி பொய்யான வெற்று அறிக்கைகளை வெளியிட்டு வருகிறார். மேலும் நல்ல விதைகளை பயன்படுத்தி அதிக மகசூலை ஈட்டுங்கள் என நாங்கள் விவசாயிகளுக்கு தெரிவித்து வருகிறோம். அதற்காக புதிய ரக விதைகளை உற்பத்தி செய்யும் பணி வேளாண் விஞ்ஞானிகள் மூலம் நடைபெற்று வருகிறது. இதற்கான காலதாமதம் இயற்கையானது. ஆனால் கடந்த 10 ஆண்டுகால அ.தி.மு.க ஆட்சியில் விவசாயிகளுக்கு பயன் அளிக்கும் புதிய ரக விதைகளும் கண்டுபிடிக்கப்படவில்லை. அதற்கான முயற்சியிலும் அவர்கள் ஈடுபடவில்லை. கடந்த ஆட்சியின் போது நோய் தாக்கமில்லா, விவசாயிகளுக்கு பயன் தரக்கூடிய விதைகளை உற்பத்தி செய்ய தவறிவிட்டார்கள். ஆனால் தோட்டக்கலைத் துறையில் உரத்தை விற்பதாக நேற்றைய தினம் அறிக்கை விட்டு இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.




தமிழகத்தில் திமுக ஆட்சி அமைத்த பிறகு நடப்பாண்டு 5 லட்சத்து 90 ஆயிரம் ஏக்கர் குறுவை சாகுபடி செய்துள்ளோம். மேலும் விவசாயிகளுக்கு என்ன என்ன தேவை என்பதை நன்கு அறிந்து நமது தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் பல்வேறு திட்டங்களை முன்னெடுத்து செய்து வருகிறார். குறிப்பாக விவசாயிகளின் உற்றதோழனாக இந்த அரசு செயல்பட்டு வருகிறது என தெரிவித்தார். மேலும் முதல் நாளில் முதலமைச்சர் ஆக்கியவரை, மறுநாளில் தூக்கி எறியக்கூடிய மனப்பக்குவம் உள்ளவர் தமிழகத்தில் முதல்வராக இருந்திருக்கிறார் எனத் தெரிவித்துள்ளார். திருச்சி தனியார் விடுதியில் நடைபெற்ற வேளாண் உட்கட்டமைப்பு நிதி கருத்தரங்கத்தில் வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் நேரு, பள்ளிகல்விதுறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார், மற்றும் வேளாண்துறை அதிகாரிகள், விவசாயிகள் என பலர் கலந்துக்கொண்டனர். 




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண