புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை தாலுகா, இராஜகிரி-குளவாய்பட்டியில் அமைந்து அருள்பாலிக்கும் மதியசாமி, கூத்தாண்டவம்மன், பிடாரி அம்மன் ஆகிய கோயில்களின் பங்குனி திருவிழாவை முன்னிட்டு ஆண்டுதோறும் ஜல்லிக்கட்டு நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டிற்கான ஜல்லிக்கட்டு விழா நேற்று நடைபெற்றது. இதனை முன்னிட்டு அங்குள்ள கூத்தாண்டவம்மன் கோவில் அருகே அமைக்கப்பட்டிருந்த ஜல்லிக்கட்டு திடலில் நேற்று அதிகாலை முதலே விராலிமலை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருச்சி, கீரனூர், இலுப்பூர், திருவெறும்பூர், மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து 727 ஜல்லிக்கட்டு காளைகள் அழைத்து வரப்பட்டிருந்தன. அதேபோல ஜல்லிக்கட்டில் கலந்து கொள்வதற்காக பதிவு செய்திருந்த மாடுபிடி வீரர் மருத்துவ பரிசோதனைக்கு பிறகு 218 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டது. அவர்கள் 5 குழுக்களாக பிரிக்கப்பட்டு ஜல்லிக்கட்டில் கலந்து கொள்ள அனுமதிக்கப்பட்டனர். 

 



 

இதைத்தொடர்ந்து காலை 8.30 மணியளவில் மாடுபிடி வீரர்கள் ஜல்லிக்கட்டு நடைபெறும் திடலில் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். இதையடுத்து காலை 8.45 மணியளவில் புதுக்கோட்டை மாவட்ட வருவாய் அலுவலர் சாந்தி, முன்னாள் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் எம்.எல்.ஏ., ஒன்றிய கவுன்சிலர் சத்தியசீலன் ஆகியோர் கொடியசைத்து ஜல்லிக்கட்டை தொடங்கி வைத்தனர். பின்னர் வாடிவாசலில் இருந்து கோவில் காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. அதை மாடுபிடி வீரர்கள் யாரும் பிடிக்கவில்லை. பின்னர் வாடிவாசலில் தயார் நிலையில் நின்றிருந்த ஜல்லிக்கட்டு காளைகள் ஒன்றன்பின் ஒன்றாக அவிழ்த்து விடப்பட்டன. அப்போது சீறிப்பாய்ந்து வந்த காளைகளை மாடுபிடி வீரர்கள் போட்டி போட்டு அடக்கினர். இதில், பல காளைகள் வீரர்களிடம் பிடிபடாமல் அவர்களை தூக்கி வீசியும், காலால் மிதித்தும் சீறிப்பாய்ந்து சென்றன.

ஜல்லிக்கட்டில் காளைகளை அடக்கிய மாடுபிடி வீரர்களுக்கும், வீரர்களிடம் பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் கட்டில், பீரோ, குளிர் சாதன பெட்டி, சலவை எந்திரம், குக்கர், மிக்சி, மின்விசிறி, எவர்சில்வர் பாத்திரங்கள், ரொக்கப்பரிசு உள்ளிட்ட ஏராளமான பரிசு பொருட்கள் வழங்கப்பட்டது.

 



 

ஜல்லிக்கட்டில் காளைகள் முட்டியதில் மாடுபிடி வீரர்கள், பார்வையாளர்கள், மாட்டின் உரிமையாளர்கள் உள்பட 35 பேர் காயமடைந்தனர். அவர்களுக்கு அங்கு தயார்நிலையில் இருந்த மருத்துவ குழுவினர் சிகிச்சை அளித்தனர். இதில், காளைகளின் உரிமையாளர்கள் ராஜகிரி பிரகாஷ்(வயது 32), இலுப்பூர் தாலுகா வவ்வாநேரி விஜய் (19), திருச்சி அன்பரசன்(22), ஆவூர் அருகே உள்ள செங்களாக்குடி ஆறுமுகம் (38) ஆகிய 4 பேர் மேல் சிகிச்சைக்காக விராலிமலை அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர். ஜல்லிக்கட்டை இலுப்பூர் வருவாய் கோட்டாட்சியர் குழந்தைசாமி, விராலிமலை தாசில்தார் சரவணன், இராஜகிரி ஊராட்சிமன்ற தலைவர் சக்திவேல், ஊராட்சி துணைத்தலைவர் செந்தமிழ் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசியல் கட்சி பிரமுகர்கள், விராலிமலை சுற்று வட்டார மற்றும் வெளியூர்களிலிருந்து வந்திருந்த ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள், பொதுமக்கள் கண்டுகளித்தனர். காலை 8.45 மணிக்கு தொடங்கிய ஜல்லிக்கட்டு மாலை 4 மணி வரை நடைபெற்றது. இலுப்பூர் துணை காவல்துறை சூப்பிரண்டு அருள்மொழிஅரசு தலைமையில், விராலிமலை காவல்துறை இன்ஸ்பெக்டர் பத்மா உள்பட ஏராளமான காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.