திருச்சியை அடுத்த திருவெறும்பூர் அருகே உள்ள கூத்தைப்பாரில் நேற்று ஜல்லிக்கட்டு நடைபெற்றது. ஜல்லிக்கட்டை திருச்சி வருவாய் கோட்டாட்சியர் தவச்செல்வம் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். திருவெறும்பூர் தாசில்தார் ரமேஷ், முன்னாள் எம்.எல்.ஏ. சேகரன், பேரூராட்சி தலைவர் செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஜல்லிக்கட்டையொட்டி திருச்சி, புதுக்கோட்டை, தஞ்சை, கரூர், மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் சுமார் 835 காளைகள் கொண்டு வரப்பட்டன. அந்த காளைகளை திருச்சி கால்நடை துறை இணை இயக்குனர் மருதராஜ் தலைமையிலான மருத்துவ குழுவினர் பரிசோதனை செய்தனர். இதில் 4 காளைகள் நிராகரிக்கப்பட்டு, 831 காளைகள் களம்கண்டன. 262 மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டனர். ஜல்லிக்கட்டு தொடங்கியவுடன் முதலில் முனியாண்டவர் கோவில் மாடு அவிழ்த்து விடப்பட்டது. பின்னர் வாடிவாசலில் இருந்து ஒவ்வொரு காளையாக அவிழ்த்து விடப்பட்டன. வாடிவாசலில் இருந்து சீறிப்பாய்ந்த காளைகளை வீரர்கள் போட்டி போட்டு அடக்க முயன்றனர். சில காளைகள் களத்தில் நின்று விளையாடின. சில காளைகள் வீரர்களை பந்தாடின. இருப்பினும் திமிலை பிடித்து காளைகளை வீரர்கள் அடக்கினர். இதில் காளைகளை அடக்கிய வீரர்களுக்கும், பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் பாத்திரங்கள் உள்ளிட்டவை பரிசாக வழங்கப்பட்டது. மேலும் 16 காளைகளை அடக்கிய அதே ஊரைச் சேர்ந்த மனோஜ்குமாருக்கு முதல் பரிசாக குளிர்சாதன பெட்டி, 12 மாடுகளை அடக்கிய பழங்கனாங்குடியை சேர்ந்த ஹரிக்கு துணி துவைக்கும் எந்திரம், தலா 10 மாடுகளை அடக்கிய நவல்பட்டை சேர்ந்த கலை, கீழக்கண்டார்கோட்டையை சேர்ந்த கிருபாகரன் ஆகியோரில் ஒருவருக்கு ஏர்கூலரும், மற்றொருவருக்கு ரொக்கப்பரிசும் வழங்கப்பட்டது.
இதனை தொடர்ந்து காலை 7.50 மணியளவில் தொடங்கிய ஜல்லிக்கட்டு மாலை 4.30 மணிக்கு நிறைவடைந்தது. ஜல்லிக்கட்டில் மாடுகள் முட்டியதில் சோமரசம்பேட்டை போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பெரியசாமி, காட்டூரை சேர்ந்த சூர்யா(20), புதுகுடியை சேர்ந்த ராஜசேகரன் (19), மஞ்சத்திடலை சேர்ந்த மகேஸ்வரன்(18) மற்றும் கீழக்குறிச்சி வசந்தநகரை சேர்ந்த விலங்குகள் நல அலுவலர் ராமகிருஷ்ணன் (36) உள்பட சுமார் 30 பேர் காயமடைந்தனர். இவர்களில் மாடுபிடி வீரர்கள் 9 பேர், மாட்டின் உரிமையாளர்கள் 13 பேர், விழா கமிட்டியை சேர்ந்த ஒருவர் மற்றும் பூலாங்குடியை சேர்ந்த மஞ்சுளா(55) உள்பட பார்வையாளர்கள் 4 பேரும் அடங்குவார்கள். இதில் வாடிவாசலுக்கு கொண்டு செல்லப்படும் காளைகளின் டோக்கனை பரிசோதனை செய்யும் இடத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பெரியசாமி பணியில் இருந்தபோது, அங்கு அழைத்து வரப்பட்ட காளை ஒன்று அவரை முட்டியது குறிப்பிடத்தக்கது. காயமடைந்தவர்களுக்கு, திருவெறும்பூர் வட்டார மருத்துவ அலுவலர் பாலாஜி தலைமையிலான மருத்துவ குழுவினர் சிகிச்சை அளித்தனர். முன்னதாக இந்த மருத்துவ குழுவினர் மாடுபிடி வீரர்களை பரிசோதித்து ஜல்லிக்கட்டில் பங்கேற்க அனுமதித்தது குறிப்பிடத்தக்கது. காயமடைந்தவர்களில் மாடுபிடி வீரர்கள் சூர்யா, ராமகிருஷ்ணன் உள்பட 3 பேர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.ஜல்லிக்கட்டையொட்டி திருச்சி கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு குத்தாலிங்கம் தலைமையில் திருவெறும்பூர் துணை சூப்பிரண்டு அறிவழகன் மற்றும் 353 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு ய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்