புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் அருகே பெரிய குரும்பபட்டி காயாம்பு அய்யனார், பாப்பாத்தி அம்மன், கருப்பண்ணசாமி கோயில் ஜல்லிக்கட்டு ஆண்டு தோறும் நடத்தப்படுவது வழக்கம். இந்த நிலையில் நேற்று ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டது. முன்னதாக காயாம்பு அய்யனார், பாப்பாத்தி அம்மன் கருப்பண்ணசாமி சுவாமிகளுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன.
காளைகளுக்கும், வீரர்களுக்கும் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. ஜல்லிக்கட்டை வருவாய் கோட்டாட்சியர் குழந்தைசாமி தொடங்கி வைத்தார். பின்னர் கோவில் காளைகள் வாடிவாசலிலிருந்து அவிழ்க்கப்பட்டது. இதைத்தொடர்ந்து புதுக்கோட்டை, திருச்சி, தஞ்சாவூர், கரூர், அரியலூர், பெரம்பலூர், திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்து வந்திருந்த காளைகள் அனுமதிக்கப்பட்டு வாடிவாசலிலிருந்து சீறிப்பாய்ந்தன.
காளைகளை அடக்க 200 மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டனர். வாடிவாசலில் இருந்து சீறிபாய்ந்த காளைகள் களத்தில் நின்று தன்னை அடக்க வந்த வீரர்களை மிரட்டி கெத்து காட்டின.
மேலும் காளைகளை போட்டிப்போட்டு அடக்கி வீரம் காட்டிய வீரர்களை காளைகள் முட்டி தள்ளியது. ஜல்லிக்கட்டு நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது டோக்கன் பெற்று வரிசையில் பல மணி நேரம் காத்திருந்த காளைகளை ஒதுக்கி விட்டு திடீரென சிலர் குறுக்குவழியில் காளைகளை வாடிவாசலுக்கு அழைத்து சென்றனர். இதனால் திடீர் சலசலப்பும் வாக்குவாதமும் ஏற்பட்டது. பின்னர் தடுப்பு வேலிகளை கழட்டி வீசி சிலர் காளைகளை வாடி வாசலுக்கு அழைத்து சென்றனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
பிரச்சினையை காவல்துறையினர் கட்டுக்குள் கொண்டு வரமுடியவில்லை. இதையடுத்து வருவாய் கோட்டாட்சியர் குழந்தைசாமி ஜல்லிக்கட்டு நிறுத்தப்படுவதாக அறிவித்தார். ஆனால் ஜல்லிக்கட்டை நிறுத்த உத்தரவு பிறப்பித்த பின்னரும் அனுமதியின்றி ஜல்லிக்கட்டு தொடர்ந்தது.
இதனை தொடர்ந்து விறுவிறுபாக நடைபெற்ற ஜல்லிக்கட்டில் மாடுபிடி வீரர்கள், பார்வையாளர்கள் என சுமார் 30 பேர் காயமடைந்தனர். இதில் புதுக்கோட்டை கிருஷ்ணகாந்த் (வயது 17), ராக்கத்தான்பட்டி ராஜா (16), குண்டூர் குட்டி (24), எழுவம்பட்டியை துரைசாமி (43), ஆச்சநாயக்கன்பட்டி ராஜகோபால் (31), ராசாம்பட்டி ராஜேந்திரன் (37), நாகமங்கலம் கோபால் (22) ஆகிய 7 பேர் மேல்சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசுமருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இலுப்பூர் துணை சூப்பிரண்டு அருள்மொழிஅரசு தலைமையில் 300க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். பின்பு ஜல்லிக்கட்டில் காளைகளை அடக்கிய வீரர்களுக்கும், பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும், சிறந்த காளைகளுக்கும் வெள்ளி நாணயம், கட்டில், சில்வர் பாத்திரங்கள், அயன்பாக்ஸ், குக்கர் உள்ளிட்ட பரிசு பொருட்கள் வழங்கப்பட்டன. ஜல்லிக்கட்டை திரளான ரசிகர்கள் கண்டுகளித்தனர். இதற்கான ஏற்பாடுகளை அரசு கூறிய விதிமுறைகளுக்கு உட்பட்டு விழாக்குழுவினர்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.