புதுக்கோட்டை மாவட்டம்  ஆலங்குடி அருகே ஒத்தக்கடை அரசடிபட்டி நால் ரோட்டில் உள்ள மயில் வாகனசாமி கோவில் பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு முதலாம் ஆண்டு ஜல்லிக்கட்டு நேற்று நடைபெற்றது. இதில் புதுக்கோட்டை, திருச்சி, தஞ்சாவூர் உள்பட பக்கத்து மாவட்டங்களில் இருந்து காளைகளை அதன் உரிமையாளர்கள் அழைத்து வந்திருந்தனர். மொத்தம் 600 காளைகள் பங்கேற்றன. காளைகளை அடக்க மாடுபிடி வீரர்கள் 300 பேர் களம் கண்டனர்.  ஜல்லிக்கட்டு தொடங்கும் முன்பு மாடுபிடி வீரர்கள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். ஜல்லிக்கட்டை இந்திய விலங்குகள் நல வாரிய தலைவர் எஸ்.கே. மிட்டல், திருவரங்குளம் ஊராட்சி ஒன்றிய தலைவர் வள்ளியம்மை தங்கமணி, உள்ளாட்சி பிரதிநிதி சுமதி ஆகியோர் தொடங்கி வைத்தனர். முதலில் கோவில் காளைகள் 2 மட்டும் அவிழ்த்து விடப்பட்டன. இதனை மாடுபிடி வீரர்கள் யாரும் பிடிக்கவில்லை. இதனைதொடர்ந்து மற்ற காளைகள் ஒன்றன் பின் ஒன்றாக அவிழ்த்து விடப்பட்டன. வாடிவாசலில் இருந்து காளைகள் சீறிப்பாய்ந்தப்படி சென்றது. இதனை மாடுபிடி வீரர்கள் போட்டிப்போட்டு அடக்கினர். இதில் சில காளைகள் களத்தில் நின்று விளையாட்டு காட்டின. இதன் அருகே மாடுபிடி வீரர்கள் செல்ல பயந்து தடுப்பு கம்பிகள் மேல் ஏறி நின்றதை காணமுடிந்தது. காளைகள் அவிழ்த்து விடப்படும் போது அதன் உரிமையாளர் மற்றும் காளையின் பெயரை விழாக்குழுவினர் ஒலிபெருக்கியில் அறிவித்தப்படி இருந்தனர். 

 



 

இதேபோல மாடுபிடி வீரர்களும் விடா முயற்சியுடன் காளைகளின் திமிலை பிடித்து அடக்கினர். மாடுகள் சீறினாலும் துணிந்து சில வீரர்கள் களம் கண்டனர். அப்போது மாடுபிடி வீரர்களை விழாக்குழுவினர், பார்வையாளர்கள் பாராட்டினர். ஜல்லிக்கட்டை காண சுற்றியுள்ள கிராமத்தில் இருந்தும், வெளி மாவட்டங்களில் இருந்தும் பார்வையாளர்கள் அதிகம் பேர் வந்திருந்தனர். இதனால் பார்வையாளர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. வீட்டின் மாடிகள், மரங்கள், லாரிகளில் மேல் ஏறி நின்றும் ஜல்லிக்கட்டை ரசித்தனர். மேலும் கைத்தட்டி ஆரவாரம் செய்தனர். காளையை அழைத்து வந்திருந்த சிறுமி ஒருவர் வாடிவாசலில் இருந்து தான் அழைத்து வந்திருந்த காளை வந்த போது துண்டை தலைக்கு மேல் கையால் சுற்றி, சுற்றி அசைத்து சைகை காண்பித்தது அங்கிருந்த அனைவரையும் கவர்ந்தது.  காளைகளை அடக்கியதில் மாடு பிடி வீரர்கள் 37 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்களுக்கு அங்கேயே சிகிச்சை அளிக்க வசதி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. மேல் சிகிச்சைக்காக ஒருவர் மட்டும் புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுமதிக்கப்பட்டார்.

 



 

இதனை தொடர்ந்து காளைகளை அடக்கிய மாடுபிடி வீரர்களுக்கும், வீரர்களிடம் பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் வெள்ளி நாணயம், மின் விசிறி, மிக்சி, கட்டில், டைனிங் டேபிள், சைக்கிள் மற்றும் ரொக்க பரிசுகளும் வழங்கப்பட்டன. ஆலங்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு வடிவேல் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தன. தீயணைப்பு துறையினரும் தயார் நிலையில் இருந்தனர். ஜல்லிக்கட்டிற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்திருந்தனர். குறிப்பாக ஜல்லிக்கட்டில் அவிழ்த்து விடப்பட்ட காளை ஒன்று அருகில் உள்ள கிணற்றில் பாய்ந்து விழுந்தது. அதனை பொதுமக்கள் மற்றும் தீயணைப்பு துறையினர் மீட்கும் பணியில் ஈடுபட்டனர். பொக்லைன் எந்திரம் மூலம் மண் தோண்டப்பட்டு காளையின் கழுத்தில் கயிறு கட்டி கிணற்றின் மேலே இழுத்தனர். இதில் காளை உயிருடன் மீட்கப்பட்டது.