இந்திய தேர்தல் ஆணையத்தால் பாராளுமன்ற தேர்தல், 2024 அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, தேர்தல் நடத்தை விதிகள் தொடர்பாக திருச்சி மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் அவர்களின் தலைமையில் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினருக்கு கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் இந்திய தேர்தல் ஆணைத்தால் தமிழகத்திற்கு தேர்தல் தொடர்பான விபரங்கள் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார், அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினருக்கு தெரிவிக்கப்பட்டது.
திருச்சி மாவட்டத்தில் தேர்தல் குழு அமைப்பு
மேலும் திருச்சி மாவட்டத்தில், தேர்தல் நடத்தை விதிகளை கண்காணித்திடும் பொருட்டு, 81 பறக்கும் படைகள். 81 நிலையான கண்காணிப்புக்குழுக்கள், 9 வீடியோ நிலையான கண்காணிப்பு குழுக்கள், வேட்பாளர்களால் தேர்தலுக்காக செலவிடப்படும் தொகையினை கண்காணித்திட 9 செலவு கண்காணிப்பு குழு, 9 வீடியோ கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.
மேலும் தேர்தல் நடத்தை விதிமீறல்கள் தொடர்பான புகார்களை 1800 599 5669 என்ற கட்டணமில்லா தொலைபேசியில் தெரிவிக்கலாம். மேலும் புகார்களை 6384001585 என்ற வாட்ஸ் ஆப் எண்ணிற்கும் புகார்களை தெரிவிக்கலாம். புகார்கள் அனைத்திற்கும் 24 மணி நேரத்திற்குள் தீர்வுகள் மேற்கொள்ளப்படும் என்றார்.
திருச்சி மாவட்ட எஸ்பி வருண்குமார் தலைமையில் தேர்தல் பாதுக்காப்பு பணி..
பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு திருச்சி மாவட்டத்தில் 2 ஆயிரத்து 118 போலீசார் தேர்தல் பணிக்காக நியமிக்கப்பட்டுள்ளதாக எஸ்பி வருண்குமார் தெரிவித்துள்ளார். இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பு அலுவலக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது.. நடைபெற இருக்கும் பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு திருச்சி மாவட்டத்தில் தேர்தல் பணிக்காக ஒரு எஸ்பி தலைமையில் 3 ஏஎஸ்பி-க்கள், 8 டிஎஸ்பி-க்கள், 36 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள், 263 எஸ்ஐ-கள், ஆயிரத்து 424 போலீசார் மற்றும் 383 ஊர்க்காவல் படையினர் என மொத்தம் 2 ஆயிரத்து 118 பேர் ஈடுபடுத்தப்பட உள்ளனர். மேலும் திருச்சி மாவட்ட எஸ்பி அலுவலக தேர்தல் கட்டுப்பாட்டு அறையானது, ஒரு டிஎஸ்பி, ஒரு போலீஸ் இன்ஸ்பெக்டர், 4 எஸ்ஐ-கள் மற்றும் 8 போலீசாருடன் இயங்கி வருகிறது. இதுமட்டுமின்றி விருப்பமுள்ள போலீசார் அல்லாத தேசிய மாணவர் படை, தேசிய நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள், முன்னாள் ராணுவத்தினர் மற்றும் ஓய்வு பெற்ற போலீஸ் மற்றும் போலீசார் ஆகியோர் தேர்தல் பாதுகாப்பு பணிக்காக ஈடுபடுத்தப்பட உள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.