திருச்சியில் இருதரப்பினரிடையே மோதல் - காவல்துறை ரோந்து வாகனத்தை தாக்கிய 12 பேர் கைது

’’சட்டம் ஒழுங்கிற்கு பாதிப்பு ஏற்படும் பகுதிகளுக்கு விரைந்து செல்லும் வகையில் தயார் நிலையில் வஜ்ரா வாகனத்தை  காவல்துறையினர் முசிறியில் நிறுத்தி உள்ளனர்’’

Continues below advertisement

திருச்சி மாவட்டத்தை பொறுத்தவரை தீபாவளி பண்டிகையன்று எந்த விதமான ஒரு அசம்பாவித சம்பவம் ஏற்படாமல் இருப்பதற்காக திருச்சி மாநகர காவல்துறை ஆணையர் கார்த்திகேயன், திருச்சி மாவட்ட  முழுவதும் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட வேண்டும். மேலும் நெடுஞ்சாலை பகுதியில் தொடர்ந்து ரோந்து பணியில் இருக்க வேண்டும் என உத்தரவிட்டு இருந்தார். இதன்படி காவல்துறையினர் அதிக அளவில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு இருந்தனர். இந்த நிலையில் திருச்சி அருகே கொளக்குடி கிராமத்தில் பட்டாசு வெடிப்பது தொடர்பாக இரு தரப்பினரிடையே தகராறு ஏற்பட்டது. முதலில் வாய்த்தகராறு ஏற்பட்டு பின்பு கைகலப்பில் முடிந்தது இதனை தொடர்ந்து நெடுஞ்சாலையில் பாதுகாப்பு பணியில் இருந்த காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். சட்டத்திற்கு புறம்பாகவும் சட்ட ஒழுங்கிற்கு எதிராக யாரும் செயல்பட வேண்டாம் அமைதியாக அனைவரும் இருக்கவும் என பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருந்த காவல் துறையினரின் ரோந்து வாகன கண்ணாடி திடீரென்று உடைக்கப்பட்டதால் அப்பகுதி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Continues below advertisement


இச்சம்பவம் தொடர்பாக 12 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். இப்பகுதியில் ஏற்கெனவே ஒரு சமுதாயத்தை சேர்ந்தவர்கள் அவர்களது சமுதாயத்தை சார்ந்த சங்கத்தின் பெயர் பலகையை வைத்துள்ளனர். இது தொடர்பாக ஏற்கனவே இருதரப்பினர் இடையே பிரச்னை ஏற்பட்டு இருந்தது. இந்நிலையில் தீபாவளி அன்று பட்டாசு வெடிப்பது தொடர்பாக  ஏற்பட்ட மோதலில் இருவர் காயமடைந்தனர். மேலும் காவல்துறை ரோந்து வாகனத்தின் கண்ணாடி உடைக்கப்பட்டதால் திருச்சி மாவட்ட எஸ்.பி. மூர்த்தி மேற்பார்வையில் முசிறி டி.எஸ்.பி அருள்மணி தலைமையில் காவல்துறையினர் குவிக்கப்பட்டனர்.


அப்போது தாக்குதல் நடத்தியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஒரு தரப்பினர் மணமேடு-பவித்திரம் செல்லும் சாலையில் கொளக்குடி கிராமத்தில் மறியல் செய்தனர். இதன் பேரில் காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததை அடுத்து பொது மக்கள் கலைந்து சென்றனர். இருப்பினும் கொளக்குடி கிராமத்தில் அசம்பாவிதம் ஏற்படாமல் இருக்க இரவு, பகலாக பாதுகாப்பு பணியில் காவல்துறையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தகராறு மற்றும் காவல்துறையினர் வாகன கண்ணாடி உடைக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் 12 பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். மேலும் பாதுகாப்பு காரணங்களுக்கு சட்டம் ஒழுங்கிற்கு பாதிப்பு ஏற்படும் பகுதிகளுக்கு விரைந்து செல்லும் வகையில் தயார் நிலையில் வஜ்ரா வாகனத்தை  காவல்துறையினர் முசிறியில் நிறுத்தி உள்ளனர். இதனால் கொளக்குடி கிராமம் பரபரப்புடன் காணப்படுகிறது.தொடர்ந்து இதுபோன்ற சட்ட ஒழுங்கிற்கு புறம்பாக யார் செயலில் ஈடுபட்டாலும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை உயர் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்

Continues below advertisement