திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே பொன்மலைப்பட்டி பொன்னேரிபுரத்தை சேர்ந்த பெலிக்ஸ் தாம்சன்ராஜ் (25) என்பவர் கடந்த ஞாயிற்று கிழமை லோடு ஆட்டோவில் சென்று கொண்டிருந்த போது வழிமறித்த மர்ம கும்பல் அவரை சரமாரியாக வெட்டியது. முகம் சிதைந்தும், கைவிரல்கள் துண்டிக்கப்பட்ட நிலையில் பெலிக்ஸ் தாம்சன்ராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்த திருவெறும்பூர் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில், திருச்சி பொன்மலைப்பட்டி கடைவீதியில் கடந்த செப்டம்பர் மாதம் சின்ராஜ் என்பவர் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். அந்த கொலை வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் அலெக்ஸ் என்பவரின் தம்பி தான் பெலிக்ஸ் தாம்சன்ராஜ் என்பது தெரிய வந்துள்ளது. மேலும் சின்ராஜ் கொலையுண்டு இறுதி சடங்கின் போது அடிக்கப்பட்ட அஞ்சலி போஸ்டரில் விரைவில் என்ற வாசகம் சூசகமாக இடம்பெற்றிருந்தது.




அதை அடிப்படையாக கொண்டு திருவெறும்பூர் காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டனர். திருச்சி மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் சுஜீத்குமார் உத்தரவின் பேரில்,கொலையாளிகளை பிடிக்க திருவெறும்பூர் துணை காவல் கண்காணிப்பாளர் சுரேஷ் குமார் மேற்பார்வையில், இன்ஸ்பெக்டர்கள் துரைராஜ், ஞானவேலன், வெற்றிவேல் ஆகியோர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது. தொடர் விசாரணையில் கிடைக்கப்பெற்ற தடயங்கள், தகவல்கள் அடிப்படையில் பெலிக்ஸ்தாம்சன் ராஜுவை கொலை செய்தது சின்ராசுவின் அண்ணன்கள் என்பது உறுதி செய்யப்பட்டது. இதனைத்தொடர்ந்து பொன்மலைப்பட்டி அருகே உள்ள காட்டுப் பகுதிகள் கொலையாளிகள் பதுங்கியிருப்பதாக தனிப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதனடிப்படையில் அங்கு கொலையாளிகளை சுற்றிவளைத்த 5 பேரை கைது செய்தனர்.மேலும் இதில் தொடர்புடைய மற்ற 5 பேரும் சங்கிலியாண்டபுரம் பகுதியில் உள்ள காட்டுப் பகுதியில் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து அங்கு சென்று அவர்களையும் கைது செய்தனர்.




இதில் சின்ராஜிவின் அண்ணன்கள் சக்திவேல், ரமேஷ், மற்றும் கூட்டாளிகளான மனோஜ் குமார், சுபாஷ் , பிரகாஷ்ராஜ், கிஷோர், ஜோஸ்வா பீட்டர், மனோஜ் சிவராம், டார்வின் ஆன்ட்றோ உள்ளிட்ட 10 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்து கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் அவர்களிடம் இருந்து கொலைக்கு பயன்படுத்தப்பட்ட வீச்சருவாள் இரண்டு, இரண்டு கத்திகள், இரும்பு ராடு, டூவீலர் ஒன்று ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.


தம்பியின் கொலைக்கு பழிக்குப்பழியாக இந்த கொலை சம்பவம் அரங்கேறியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர். இந்த கொலை வழக்கில் 24 மணி நேரத்தில் குற்றவாளிகளை கைது செய்து நடவடிக்கை எடுத்த தனிப்படை போலீசாரை திருச்சி மாவட்ட எஸ்பி சுஜித்குமார் பாராட்டினார். திருவெறும்பூர் காவல் நிலைய எல்லை பகுதியில் தொடர்ந்து பல்வேறு குற்றசம்பவங்களும்கொலை குற்றங்களும் அரங்கேறிவரக் கூடிய நிலையில் மீண்டும் பழிக்குப் பழியாக மற்றொரு சம்பவம் அரங்கேறுவதற்கு முன்பு அந்தப் பகுதியில் காவல்துறையினர் ரோந்து பணியை அதிகப்படுத்த வேண்டும். மேலும், அங்கு புறக்காவல் நிலையம் ஒன்று அமைக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கையாக உள்ளது.