நைஜிரியாவிலிருந்து சென்னை வந்த ஒருவருக்கும் அவர் குடும்பத்தை சேர்ந்த 6 பேருக்கும் ஒமிக்ரான் பாதிப்பு இருக்குமோ என்கிற சந்தேகத்தின் அடிப்படையில் அவர்கள் மாதிரிகள் பெங்களூருக்கு அனுப்பப்பட்டுள்ளதாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார். திருச்சி அரசு மருத்துவமனையில் கோவிட் நுரையீரல் மறுவாழ்வு மையம் மற்றும் புற்றுநோய் உள்நோய் மையம் ஆகியவற்றை நகராட்சி நிர்வாக துறை கே.என்.நேரு, மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்ரமணியன்,பள்ளி கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியர் திறந்து வைத்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்ரமணியன் கூறியது, திருச்சி மாவட்டம், மணப்பாறையில் 2.5 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கபட்ட 142.5 மெட்ரிக் டக் ஆக்ஸிஜன் சேமிப்பு கலன்  திறக்கப்பட்டுள்ளது. இது திருச்சி, தஞ்சை உள்ளிட்ட மாவட்டங்களுக்கும், தென் மாவட்டங்களுக்கும் பெரிய வசதியானதாக இருக்கும். தி.மு.க அரசு பொறுப்பேற்ற போது தமிழ்நாட்டில் 220 மெட்ரிக் டன் மட்டும் கையிருப்பு இருந்தது. தமிழக முதலமைச்சர் எடுத்த சீரிய நடவடிக்கையால் 1000 மெட்ரிக் டன்னிற்கும் அதிகமான அளவில் உயர்ந்துள்ளது.




மேலும் தமிழ்நாட்டில் தற்போது அரசிடம் 25,660 ஆக்சிஜன் உருளைகள், 70 பி.எம் கேர் நிதியில் இருந்து கட்டப்பட்ட ஆக்ஸிஜன் ஆலைகள், 94 தனியார் பங்களிப்போடு கூடிய ஆக்சிஜன் ஆலைகள், 241 ஆக்சிஜன் ஆலைகள் அரசின் சார்பில் நிறுவப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே வேறு எந்த மாநிலத்திலும் இந்த அளவிற்கு ஆக்ஸிஜன் ஆலைகள் இல்லை. அரசு மருத்துவமமைகளில் அனுமதிக்கப்படும் 50 வயது மேற்பட்டோருக்கு புற்றுநோய் பரிசோதனை கட்டாயம் மேற்கொள்ளப்பட உள்ளது. அதற்கான வசதிகள் தொடங்கப்பட்டுள்ளது. மாவட்ட அரசு மருத்துவமனைகளில் உள் நோயாளிகளாக அனுமதிக்கப்படும் அனைவருக்கும் இந்த பரிசோதனை கட்டாயமாக மேற்கொள்ளப்பட உள்ளது. திருச்சி மகாத்மா காந்தி அரசு மருத்துவமனையில் அந்த வசதியை இன்று தொடங்கி உள்ளோம். அதே போல நீண்ட நாட்கள் படிக்கையில் படுத்திருப்பவர்களுக்கு bedsore எனப்படும் படுக்கை புண்  நோயால் பாதிக்கப்படுவார்கள். அதற்காக அரசு மருத்துவமனைகளில் 10 பிரத்யேக படுக்கை வசதிகள் அமைக்கப்பட உள்ளது.




குறிப்பாக தமிழ்நாட்டில் 69 அரசு மருத்துவமனைகளில் 79 ஆர்.டி.பி.சி.ஆர் பரிசோதனை செய்ய வசதிகள் உள்ளது. அதன் மூலம் நாளொன்றுக்கு 1,88,500 பரிசோதனை மேற்கொண்டு வருகிறோம். தற்போது கூடுதலாக 20 RTPCR சோதனை மையங்கள் அமைத்துள்ளோம். இரண்டு நாட்களுக்கு பின் நைஜிரியாவில் இருந்து தோஹா வழியாக சென்னை வந்த 47 வயது மதிக்க தக்க ஒருவருக்கும்  அவர் குடும்பத்தை சேர்ந்த 6 பேருக்கும் S-ஜீன் மாறுபாடு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.இதனால் அவர்களுக்கு ஒமிக்ரான் பாதிப்பாக இருக்குமோ என்கிற சந்தேகம் எழுந்துள்ளது. அதனால் அவர்களின் மாதிரிகள் பெங்களூருக்கு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. அவர்கள் அனைவரும் சென்னை கிங்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள் அவர்களின் பரிசோனை முடிவுகள் இன்று மாலையோ அல்லது நாளையோ தெரிய வரும் என்றார். மேலும் இந்த நிகழ்ச்சியில் சுகாதார துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், சட்டமன்ற உறுப்பினர்கள் செளந்திரபாண்டியன் ஸ்டாலின் குமார், பழனியாண்டி, அப்துல் சமது, திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு, அரசு மருத்துவமனை முதல்வர் வனிதா உள்ளிட்ட அதிகாரிகள், மருத்துவர்கள் உடனிருந்தனர்.