தி.மு.கவின் வாக்குறுதியின் படி பெண்களுக்கு இலவச பேருந்து பயணத்தை வழங்கும் உத்தரவை கையெழுத்திட்டிருக்கிறார் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். இதற்கு ஆதரவு குரல்களும், எதிர்ப்பு குரல்களும் சமூக வலைத்தளங்களில் எதிரொலித்து வருகிறது. இதற்கிடையே, அரசின் இந்த அறிவிப்பால் போக்குவரத்துக் கழகத்துக்கு ஏற்கெனவே பாதிப்பு இருக்கையில் அதைக் கூட்டிவிடாதா? என்பதே விமர்சன கணைகளை தொடுக்கும் பலரின் கேள்வி. 



கடந்த ஆட்சியில் ஏற்பட்ட கடும் இழப்பிலிருந்து போக்குவரத்துக் கழகங்களை மீட்பதே கடினமான பணியாக இருக்குமே. இந்த சமயத்தில் இந்தத் திட்டம் உகந்ததுதானா என துறை சார்ந்த சிலரே கேள்வியை முன்வைக்கிறார்கள். அவர்கள் சுட்டிக்காட்டும் காரணங்களும் நியாயமானவை. ஆனால் பெண்களுக்கு பஸ் இலவசம் - ”செலவு அல்ல, முதலீடு!” என்கிறார் கட்டுரையாளர்.


” மாநிலம் முழுவதும் 8 அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் வேலைசெய்பவர்கள் 1.3 லட்சம் பேர். இருபத்தைந்து முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக போக்குவரத்துக் கழகத்தில் வேலைசெய்து, ஓய்வுபெறும்போது அவர்களுக்குச் சேரவேண்டிய பணிக்கொடை, வருங்கால வைப்பு நிதி, பிற சேமிப்பு நிதி ஆகியன முழுமையாகத் தரப்பட்டுவந்தது. கடந்த பல ஆண்டுகளாகவே மூன்று ஆண்டுகளிலிருந்து 5 ஆண்டுகள்வரை காத்திருந்து அதைப் பெற்றவர்கள் உண்டு. இது போக்குவரத்துக்கழகமோ அரசாங்கமோ அவர்களுக்கு தரும் உதவித்தொகையோ வேறு கொடையோ அல்ல. பெரும்பகுதி, அவர்களின் சம்பளத்திலும் சேமிப்பிலும் பிடிக்கப்பட்ட பணமே. 40 சதவீதத்துக்கும் மேல் நகரமயமாகிவிட்ட தமிழ்நாட்டில் ஓய்வுகாலத்தில் சொந்த வீடோ, பிள்ளைகளுக்கு திருமணமோ வேறு குடும்பக் கடமைகளோ காத்திருக்க, வரவேண்டிய பல லட்ச ரூபாய் வராமல் இழுத்தடிக்கப்பட்டால் என்ன ஆகும்? 



இன்னொரு பக்கம், ஓய்வுபெற்றவர்களுக்கு கிடைக்கும் சில ஆயிரம் சொற்ப ஓய்வூதியமும் பல மாதங்களாகத் தரப்படாமல் இருந்தது. பல முறை பலகட்ட போராட்டங்கள் நடத்திதான், 60/ 70 வயதினர் அவர்களுக்கான மாதாந்திர செலவு தொகையையும் பெறமுடிகிறது. இதுவரை அப்படித்தான் இனி எப்படியோ? இப்படி பலவகையில் ஊழியர்களின் பணம் 8 ஆயிரம் கோடி ரூபாயை எடுத்து, போக்குவரத்துக் கழக நிர்வாகங்கள் எடுத்ததுதான் பிரச்னை. பல ஆயிரம் கோடி ரூபாய் இழப்பில் ஓடும் போக்குவரத்துக் கழகங்களுக்கு 1,200 கோடி ரூபாய் மேலும் ஒரு சுமைதானே? அரசு ஈடுகட்டும் என முதலமைச்சர் சொல்கிறார். மாணவர்களுக்கான இலவசப் பயணத்துக்கும் இப்படித்தான் சொன்னார்கள். ஆனால், நீதிமன்றம்வரை சென்றுதான் சில முறை அந்தப் பணத்தையும் பெறமுடிந்தது. இந்த சிக்கல் இல்லாமல் அரசாங்கம் சமூக நலத் திட்டத்தைச் செயல்படுத்தினால் சரி.” என்பது போக்குவரத்துக் கழக ஊழியர் தரப்பில் வைக்கப்படும் ஒரு வாதம். 



2019 ஏப்ரல் முதல் கடந்த ஆண்டு மார்ச் வரை ஓய்வுபெற்றவர்கள் 6,227 பேர். இவர்களுக்கான ஓய்வூதியப் பலன், சேமிப்புப் பணம் மட்டும் 1,625 கோடி ரூபாய். இதை வழங்கக்கோரி கடைசியாக கடந்த பிப்ரவரியில் ஊழியர்கள் வேலைநிறுத்தம் செய்தனர். 2 நாட்கள் மாநிலம் முழுவதும் கடுமையான பாதிப்பு ஏற்பட்டது. பிப்ரவரி 26 முதல் தேர்தல் நடத்தை விதிகள் வந்துவிடவே, மு.க.ஸ்டாலின் முதலிய பல கட்சிகளின் தலைவர்களும் வேண்டுகோள் வைத்ததை ஏற்று, போராட்டம் தள்ளிவைக்கப்பட்டது, குறிப்பிடத்தக்கது. இது திமுகவின் தொழிற்சங்கமும் நடத்திய போராட்டம் என்பதையும் கருதி, இந்தப் பிரச்னைக்கான தீர்வு காணப்படும் என நம்பலாம். 


பெண்களின் அரசியல் பங்களிப்பு என்பது வாக்களிப்பது மட்டுமல்ல; எல்லா மட்டங்களிலும் அதிகாரப் பகிர்வும் கொள்கை உருவாக்கத்திலும் முடிவுகள் எடுப்பதிலும் இணையான பங்கேற்பும் வேண்டும்; அதில், பெண்கள் தங்கள் ஆற்றலை வளர்த்துக்கொள்வதற்கான உரிமையும் தன் பங்களிப்பு தன்னைப்பற்றி தானே முடிவெடுப்பதும் முக்கியமானது என்கிறது, திட்டக்குழுவின் மனிதவள ஆய்வு ஒன்று.      


வேலைக்குச் செல்லும் பெண்கள் அதிகமுள்ள ஏழு மாநிலங்களில், தமிழ்நாடும் ஒன்று. தென்மாநிலங்களில் ஆந்திரா-47%, தெலங்கானா- 42.7%, தமிழ்நாடு 39.3%, கேரளம்-23.7%, கர்நாடகம்-33.3% எனும் அளவில் பணிக்குச் செல்லும் பெண்களின் நிலைமை காணப்படுகிறது. 2011 மக்கள்தொகைக் கணக்கெடுப்பில், இந்திய அளவில் பணியாளர்களாக உள்ள பெண்களின் எண்ணிக்கை, 25.6சதவீதத்தில் இருந்து 25.5 சதவீதமாகக் குறைந்துவிட்டது. ஆனால், தமிழ்நாட்டிலோ 31.5 சதவீதத்திலிருந்து சற்றே கூடுதலாக 31.8 சதவீதம் எனும் அளவுக்கு அதிகரித்தது. பெண் பணியாளர்களைப் பொறுத்தவரை, 90 சதவீதப் பணியாளர் பெண்கள் முறைசாரா பணிகளில் அதாவது விவசாயம். வீட்டு வேலை, தெரு வியாபாரம். சிறுசிறு வேலைகள், கைத்தொழில் ஆகியவற்றில்தான் ஈடுபடுகின்றனர் என்கிறது, திட்டக்குழுவின் மனிதவள அறிக்கை.  


இவர்களுக்கு மட்டுமல்லாமல், குடும்பத்துக்கு தலைமைதாங்கும் பெண்களுக்கும் போக்குவரத்து என்பது அவசியத் தேவையாகவும், முக்கியமான செலவாகவும் உள்ளது. பெண் தலைமைக் குடும்பங்கள் எண்ணிக்கையில் கேரளம், கர்நாடகத்துக்கு அடுத்து தமிழ்நாடு மூன்றாவது இடத்தில் இருக்கிறது. தமிழ்நாட்டில் 25.9 லட்சம் பெண் தலைமைக் குடும்பங்கள் உள்ளன. அதாவது, 26.1 % என்கிறது, மக்கள்தொகைக் கணக்குப் பதிவு. இது வெறும் எண்ணிக்கை கணக்கு என மட்டும் பார்ப்பது, மிக மேலோட்டமான தட்டையான பார்வை.  


இவர்களில், கணவரை இழந்தவர்கள், மணமுறிவு, தனித்து வாழ்பவர்கள், கைவிடப்பட்டவர்கள் கணிசமானவர்கள்.  
குடும்பத் தலைமை ஆண்கள் வேலைக்காக வெளியூருக்கோ மாநிலத்துக்கோ நாட்டுக்கோ சென்றதால், குடும்பத்தை கவனித்துக்கொள்வோரும் உண்டு. வேலையிழப்பால், இயலாமையால், நோய்வாய்ப்பட்டதால், கௌரவத்துக்கேற்ற வேலை கிடைக்கவில்லை போன்ற காரணங்களால், குடும்பத்தைக் காப்பாற்றும் பெண்கள் ஏராளம். ஆண் பிள்ளைகளுக்கு பொறுப்பும் பக்குவமும் இல்லாமலும் மணமான மகன்கள் தனிக்குடும்பமாக வசிக்கப் போய்விடுவதாலும் சோதனைகளை எதிர்கொண்டு, குடும்பத்தை நடத்தும் பெண்களும் கணிசமாக உள்ளனர் எனப் பட்டியலிடுகிறது, அரசாங்கமே அமைத்த திட்டக்குழுவின் ஆய்வறிக்கை ஒன்று.  


40 லட்சம் தனித்து வாழும் பெண்கள் இன்னொரு அதிகாரபூர்வமற்ற விவரமும் ஒதுக்கித் தள்ளமுடியாத ஒன்று. மாநிலத்தில் முதிர்கன்னிகள் உள்பட தனித்து வாழும் பெண்கள் மட்டும் 40 லட்சம் பேர் என்கிறது, பெண்கள் தொடர்பான தன்னார்வ அமைப்பு ஒன்று. 2018-19-ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட மத்திய அரசின் புள்ளிவிவரப்படி, கணக்கில்வந்த உழைப்பு சக்தி அறிக்கையின்படி, இந்திய அளவில் பெண்களின் பங்கு 10%; இதுவே, தமிழ்நாட்டில் 30%. இங்கும், ஊர்ப்பகுதிகளில் 35%;நகர்ப் பகுதிகளில் 24%. இதிலும், இந்திய அளவில் முறையே 20 சதவீதம், 16 சதவீதம் எனும் அளவிலேயே இருக்கிறது.  


பெண்களுக்குச் சொத்துரிமை, 33 சதவீத இட ஒதுக்கீடு எனத் தொடரும் தமிழ்நாட்டின் சமூகநீதிப் பயணப் பாதையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசாங்கத்தின் இந்த முடிவு, மேலும் ஒரு முக்கிய மைல் கல்லாக நிச்சயம் இருக்கும்.