தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமைச் செயலருக்கு உத்தரவிட்டதன் அடிப்படையில் தமிழ்நாட்டின் ஒருங்கிணைந்த கொரோனா கட்டளை மையம் (Unified command centre) தற்போது உருவாக்கப்பட்டிருக்கிறது. இந்த கட்டளை மையம் கொரோனா ’வார் ரூம்’ ஆகச் செயல்படும். தாரேஸ் அகமது ஐ.ஏ.எஸ். இந்த மையத்தின் வழிகாட்டுதல் இயக்குநராகவும், நந்தகுமார் ஐ.ஏ.எஸ். இதன் செயலராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
கொரோனா இரண்டாம் அலை தீவிரமடைந்ததை அடுத்து மத்திய அரசு கடந்த ஏப்ரல் மாதத் தொடக்கத்தில் நோயாளிகளுக்கான படுக்கை வசதி மற்றும் ஆக்சிஜன் தேவையை உறுதிசெய்ய மாநிலங்கள் எங்கும் "வார் ரூம்" கொண்டு வரும்படி அறிவுறுத்தியது. இதன் அடிப்படையில் கேரளா, கர்நாடகா என ஒவ்வொரு மாநிலங்களில் மாவட்டங்கள் மற்றும் முக்கிய நகரங்களில் கொரோனா வார் ரூம் அமைக்கப்பட்டது. தமிழ்நாட்டிலும் கொரோனா கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுச் செயல்பட்டு வந்தது.
இதற்கிடையே தமிழ்நாட்டில் புதிதாகப் பொறுப்பேற்றிருக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு கொரோனா பேரிடர் மேலாண்மைக்காக ஒருங்கிணைந்த கட்டளை மையம் அமைக்க தலைமைச் செயலருக்கு உத்தரவிட்டிருந்தது. அதனடிப்படையில் தற்போது இந்த ஒருங்கிணைந்த கட்டளை அறை தலைமைச் செயலகத்தில் உருவாக்கப்பட்டிருக்கிறது. இதுவே கொரோனா வார் ரூமாகவும் செயல்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஒருங்கிணைந்த கட்டளை அறை அல்லது "வார் ரூம்" எப்படி இயங்கும்?
- ஒருங்கிணைந்த கட்டளை மையம் கொரோனா நெருக்கடியை நிர்வகிக்க உதவும் ஒரு குறுக்கு செயல்பாட்டு (cross functional) தலைமை மையமாக இருக்கும், கொரோனா காலத்தில் படுக்கை மற்றும் ஆக்சிஜன் வசதி போன்ற மிக அவசரமான பிரச்சனைகளின் சூழ்நிலை குறித்த விழிப்புணர்வை உருவாக்குவதன் மூலம் நெருக்கடியைத் தவிர்க்க இந்த மையம் உதவும்.
- கொரோனா நோயாளிகளுக்கான மருத்துவமனை படுக்கைகள் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் இந்த கட்டளை மையம் தமிழ்நாடு மருத்துவமனைகளில் இருக்கும் காலிப் படுக்கைகள் எண்ணிக்கையை தமிழ்நாடு அரசு மருத்துவப் படுக்கைகள் மேலாண்மைத் தளம் வழியாகக் கண்காணிக்கும். இதன்வழியாக நோயாளிகளின் தேவையை உடனுக்குடன் பூர்த்தி செய்யமுடியும்.
- படுக்கை வசதிகளை அதிகரிக்க இந்த மையம் தொழிற்துறை, பொதுப்பணித்துறை மற்றும் அரசு கொரோனா கேர் மையங்களுடன் இணைந்து செயல்படும்.
- நோயாளிகளின் அபாய நிலையின் அடிப்படையில்தான் அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார்களா என்பதை இந்த மையம் உறுதிசெய்யும்.
5. ஒருங்கிணைந்த கட்டளை மையம், சுகாதாரத் துறை மற்றும் ஜி.சி.சி. உடன் ஒருங்கிணைந்து சென்னை மற்றும் அதைச் சுற்றியுள்ள அரசு மற்றும் தனியார் சுகாதார மருத்துவமனைகளையும் கள ஆய்வு குழுக்கள் வழியாகக் கண்காணிக்கும்.
6. தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளுக்கு ஆக்சிஜன் விநியோகம் தொடர்ச்சியாகக் கிடைப்பதையும், மருத்துவப் படுக்கைகளை அதிகரிப்பதையும் இந்த மையம் உடனிருந்து உறுதி செய்யும். இது மருந்துக் கட்டுப்பாட்டாளர் மற்றும் மருத்துவ சேவைகள் கழகத்தின் துணையுடன் நடக்கும்.
7. கொரோனா பேரிடர் குறித்த மாநில ரீதியிலான தரவுகளை பகுப்பாய்வு மற்றும் மதிப்பீடு செய்து அதுகுறித்து சரியான நேரத்தில் சரியான தகவல்களை அரசாங்கத்துக்கு தெரிவிக்கும்.
- 108, 104 மற்றும் 102 ஆகிய அரசின் அவசர எண்களின் மறுமொழித் திறனைக் கண்காணிக்கும். மேலும் 104 எண்ணின் சமூகவலைதள பக்கத்தையும் இந்த மையம் மேலாண்மை செய்யும்.
- கொரோனா காலத்தில் மேம்பட்ட மருத்துவச் சேவைகளுக்காக முதலமைச்சர் விரிவான சுகாதார காப்பீட்டு திட்டம், மருத்துவ ஸ்தாபன சட்டம் மற்றும் பொது சுகாதார சட்டம் ஆகிய இணைச் சேவைகளை ஒருங்கிணைத்து இந்த மையம் செயல்படும்.
சமூக ஊடகக் கண்காணிப்புக் குழு, பதிலளிப்பு மற்றும் பரிசோதனைக் குழு, தனியார் மருத்துவமனைகளுக்கான படுக்கைகள் மேலாண்மைக் குழு, அரசு மருத்துவமனைகளுக்கான படுக்கைகள் மேலாண்மைக் குழு, பட்டியலிடப்படாத மருத்துவமனைகளுடன் ஒருங்கிணைந்து செயல்படும் குழு, சொல்லப்பட்டபடியான சேவைத்தர உத்தரவாதத்தை உறுதி செய்யும் குழு, கள ஆய்வுக்குழு மற்றும் பொது சுகாதார கள ஆய்வுக்குழு ஆகியன இந்த மையத்தின் கீழ் குழுக்களாக இயங்கும்.