"ஒரு மாமியாரும் மருமகளும் இப்படித்தான் இருக்கனும்" , "ஓ இவங்கள பாக்கவே எவ்வளவு க்யூட்டா இருக்கு" , " இவங்க அம்மாவும் பொண்ணுமா?" இப்படியான கமெண்ட்டுகளுக்கு சொந்தக்கார்கள்தான் நடிகை சமீரா ரெட்டியும் அவரது மாமியார் மஞ்ரி வர்தேயும்.
இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இவர்கள் செய்யும் சேட்டைகளை ரசிப்பதற்காகவே மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் உண்டு. ஒவ்வொரு பெண்ணிற்கும் இருக்கும் ட்ரீம் மாமியார் மற்றும் மருமகள் காம்போதான் இவர்கள் என்றால் பொருத்தமாக இருக்கும். இன்ஸ்டாக்ராம் பக்கத்தில் இருவருமே செம ஆக்டிவ், இவர்கள் இருவரின் உறவு எந்த அளவிற்கு ஆழமானது என்பது குறித்து நடிகை சமீரா ஒரு நேர்காணலில் தெரிவித்துள்ளார்.
அன்னையர் தினத்தை முன்னிட்டு எடுக்கப்பட்ட நேர்காணலில் பேசிய அவர், மாமியார் மஞ்ரி வர்தே குறித்த கேள்விக்கு பதில் அளித்தார். அதில் " நாங்க ரெண்டுபேருமே ரொம்ப வலிமையான பெண்கள். நாங்க எங்க பேருக்கு இடையில எல்லாத்தையும் ஏத்துக்கிறது கிடையாது, ஆனால் ஒருவரை ஒருவர் மதிக்கிறோம். எங்களோட அன்பை மேலும் பலப்படுத்த தொடர்ந்து முயற்சிக்கிறோம். எங்க அன்பு ஒருபோதும் குறையாது, நாங்க ஒருவரை ஒருவர் அதிகமாக நேசிக்கிறோம். எங்க பக்கத்துல எந்த ஒரு நெகட்டிவையும் வர விட மாட்டோம் அப்படிங்குறதுல நாங்க ஸ்ராங்கா இருக்கோம்" என உணர்வுப்பூர்வமாக தெரிவித்துள்ளார்.
மேலும் "எனது மாமியார் எப்போதும் துடிப்பாக இருக்கக்கூடியவர், எல்லாம் நன்மைகே என்பதை நம்புவாங்க, ரொம்ப அமைதி மற்றும் நிதானமானவங்க , மிகச்சிறந்த ஓவியரும் கூட" என்றும் பெருமைபட பேசியுள்ளார்.
அம்மா குறித்த கேள்விக்கு பதில் அளித்த அவர் "எங்க அம்மா எந்த தோல்வியையும் ஏத்துக்க மாட்டாங்க, வெற்றியை அடைவதற்காக என்ன இடையூறு வந்தாலும் அதை தாண்டி போராடனும்னு சொல்லிக்கொடுப்பாங்க. அவங்களுக்கு இந்த வயசுல இருக்க எண்ணங்களும் குணங்களும் எனக்கு 50 சதவீதம் இருந்தாலே போதுமானது" என தெரிவித்திருக்கிறார்.
இந்நிலையில் நடிகை சமீரா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அம்மாவிற்கு வாழ்த்து தெரிவித்து ஒரு பதிவினை இட்டுள்ளார். அதில் அம்மாவை பார்த்து ஒருவருடம் ஆகிவிட்டதாகவும், பாதுகாப்பாக இருக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். மேலும் அவர் உறுதுணையாக இருப்பதற்கு நன்றி தெரிவித்து, "நான் உங்கள ரொம்ப மிஸ் பண்ணுறேன், விரைவில் வந்து பாக்குறேன் என பதிவிட்டு " ஹாப்பி மதர்ஸ் டே" என குறிப்பிட்டிருந்தார். இதற்கு கீழே கமெண்ட் செய்துள்ள சமீராவின் மாமியார் "நாங்க ரெண்டுபேரும் எங்க பொண்ணுங்கள மிஸ் பண்ணுறோம்" என குறிப்பிட்டுருக்கிறார்.
சமீரா அவ்வபோது உடல் மற்றும் அழகு குறித்து வரும் விமர்சனங்களை நேர்மறையாக எதிர்க்கொள்ளக்கூடியவர். இவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.