இருபது ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் தமிழ்நாடு சட்டப்பேரவைக்குள் நுழைகிறது தேசிய கட்சியான பாரதிய ஜனதா. 2021 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்ட 20 இடங்களில் நான்கில் வெற்றி. இந்த இருபது ஆண்டுக் கனவை நனவாக்கிய மாவட்டச் செயலாளர்களுக்கு இன்னோவா கார் பரிசளித்து கொடுத்த வாக்கைக் காப்பாற்றியிருக்கிறார் கட்சித் தலைவர் எல்.முருகன்.
தமிழ்நாட்டு அரசியல்வாதிகளுக்கு மக்களுடனான பிணைப்பை விட டொயோட்டாக்களுடனான பந்தம் வலுவானது 2016-ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த அதிமுக அரசு தனது 32 அமைச்சர்களுக்கும் இன்னோவா கிரிஸ்டா காரைப் பரிசாக வழங்கியது. ஒரு காரின் விலை இருப்பத்தாறு லட்சம். அரசுக்கு ஆன மொத்தச் செலவு எட்டு கோடி.
ஜெயலலிதாவிடமிருந்து இன்னோவா காரைப் பரிசாகப் பெற்றதால் இங்கே தமிழ்நாட்டில் ஒரு தலைவர் இன்னோவா என்கிற அடைமொழியுடனே அழைக்கப்பட்ட வரலாறும் இருக்கிறது. 2012-ஆம் ஆண்டில் தேர்தல் பரப்புரைகளுக்காக கட்சி உறுப்பினர் நாஞ்சில் சம்பத்துக்கு அ.தி.மு.க. தலைவர் ஜெயலலிதா ‘இன்னோவா’ கார் வழங்கப்போக நாளடைவில் அவருக்கு ‘இன்னோவா’ சம்பத் என்கிற பெயரே நிலைத்துப்போனது.
ஜெயலலிதாவின் மரணத்துக்குப் பிறகு சசிகலாவின் முகாமிலிருந்து வந்த அழுத்தத்தால் நாஞ்சில் சம்பத் அந்தக் காரைத் திருப்பி அளித்தது வேறு கதை. இருந்தும் ‘இன்னோவா’ சம்பத் என்கிற அடைமொழி பிடிக்காததால்தான் தான் காரைத் திருப்பியளித்ததாகச் சொன்னார் நாஞ்சிலார். உறுப்பினர்களுக்கே இன்னோவா என்றால் தலைவர்களுக்குக் கேட்கவா வேண்டும்? துப்பாக்கி குண்டுகள் துளைக்காத மிட்ஷுபிஷி பஜேரோ, மாண்டேரோ எஸ்.யூ.வி, டொயட்டோ லேண்ட் க்ரூஸர் ப்ராடோ என இரும்புப்பெண்மணி என்கிற அடையாளத்துக்கு பொருத்தமாகவே தன் கார்களையும் தேர்ந்தெடுத்தார் மறைந்த ஜெ. ஜெயலலிதா.
அரசியல்வாதிகள் என்றாலே செடான் லட்சியம் இன்னோவா நிச்சயம் என்பது இங்கே எழுதப்படாத விதி.
டொயோட்டாவின் இன்னோவாவை விட விலையுயர்ந்தது அதன் ஆல்பார்ட் ரகம். விமானங்களில் முதல் வகுப்புகளைவிட சொகுசானது எனக் கூறப்பட்ட இந்த ஆல்பார்ட் ரகங்கள் மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் கோபாலபுரம் கார் கொட்டகையில் தென்படும். தள்ளாத வயதிலும் அவரைப் பரப்புரை மேடைகளுக்கு இந்த ஆல்பார்ட்தான் அழைத்துச் சென்றது.
இந்திய கம்யூனிஸ்ட் 28 லட்சம் ரூபாயில் வாங்கிய இன்னோவா கார் இன்றளவும் விமர்சனங்களை எதிர்கொண்டு வருகிறது. ஒரு புறாவுக்கு இத்தனை போரா என நீங்கள் புருவம் உயர்த்தலாம். இந்த டொயோட்டாக்கள் அரசியல்வாதிகளிடம் வந்து சேர்ந்த கதை சுவாரசியமானது. அம்பாசிடர் வைத்திருந்தால் பெரும் அரசியல்வாதி என்கிற 60-களின் அடையாளத்தை மாற்றியது, 1980-களில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட மாருதி ரகங்கள். முதல்கார் சென்று சேர்ந்ததோ இந்தியப் பிரதமர் இந்திராகாந்தியின் ஷெட்டுக்குத்தான்.
பிறகு 90-களில் இந்தியாவில் வந்திறங்கிய டொயோட்டா…குவாலிஸ், காமரி, இன்னோவா என அடுத்தடுத்த தயாரிப்புகளை ஆட்சியாளர்களுக்கு அன்பளிப்பாக அளிக்கத் தொடங்கியது. 2004-ஆம் ஆண்டில் பிரதமர் பொறுப்பேற்ற மன்மோகன் சிங் ஒருபடி மேலே போய் அம்பாசிடரை ஓரங்கட்டிவிட்டு டொயோட்டா செடானை பயன்படுத்த தொடங்கி, பிரதமர் அலுவலகத்து காராகவே அது நிலைத்துவிட்டது.
அரசியல்வாதிகள் என்றாலே செடான் லட்சியம் இன்னோவா நிச்சயம் என்பது இங்கே எழுதப்படாத விதி. அவை ஆடம்பரமல்ல அரசியல்வாதிகளின் அத்தியாவசியம்.