கர்ப்பிணி பெண்ணின் 5 மாத மருந்து கொடுக்கும் நிகழ்வில் உணவருந்திய ஒருவர் உயிரிழந்த விவகாரத்தில் உணவுபாதுகாப்பு துறை அதிகாரிகள் மாவட்ட ஆட்சியரிடம் அறிக்கை தாக்கல் செய்துள்ளனர். 


திருவாரூர் மாவட்டம் திருவாசல் மெயின் ரோடு பகுதியைச் சேர்ந்த விக்னேஷ் என்பவரின் மனைவி மாரியம்மாளின் ஐந்து மாதம் கர்ப்பமாக உள்ளார்.இந்த நிலையில் கடந்த ஐந்தாம் தேதி அவரது வீட்டில் ஐந்துக்கு மருந்து கொடுக்கும் நிகழ்வு நடைபெற்றுள்ளது. இதில் உறவினர்கள் நண்பர்கள் என 50க்கும் மேற்பட்டோர் உணவருந்தி உள்ளனர். இந்த நிகழ்ச்சியில் தயிர் சாதம், புளி சாதம், எலுமிச்சை சாதம், தக்காளி சாதம் சர்க்கரை பொங்கல் ஆகிய ஐந்து வகை சாதங்களுடன் சிக்கன் பிரியாணியும் பரிமாறப்பட்டுள்ளது. இந்த ஐந்து வகை சாதங்கள் மாரியம்மாளின் தாயார் வீட்டிலிருந்து தயார் செய்து எடுத்து வரப்பட்டது. சிக்கன் பிரியாணி புளிவலத்தில் உள்ள அல்நூர் கேட்டரிங் சர்வீஸ் மற்றும் திருவாரூர் வாழவாய்க்கால் பகுதியில் உள்ள பிஸ்மில்லாஹ் ஹோட்டல் ஆகிய கடைகளில் வாங்கப்பட்டுள்ளது. இதில் அல்நூர் கேட்டரிங் சர்வீசில் 40 பிரியாணியும் பிஸ்மில்லாஹ் ஹோட்டலில் எட்டு பிரியாணியும் வாங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 




இந்த நிலையில் இந்த நிகழ்ச்சியில் உணவு அருந்திய 20க்கும் மேற்பட்டோருக்கு வாந்தி பேதி மயக்கம் போன்ற உடல் உபாதைகள் ஏற்பட்டு கடந்த ஆறாம் தேதி 9 நபர்களும் ஏழாம் தேதி பத்து நபர்களும் என மொத்தம் 19 பேர் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் வேளுக்குடியை சேர்ந்த 24 வயதான செல்வ முருகன் என்பவர் நேற்று அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கர்ப்பிணி பெண்ணான மாரியம்மாள் திருவாரூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் தற்போது மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட பிரியாணி கடைகளில் ஆய்வு நடத்தி உரிய அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என திருவாரூர் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டிருந்தார். 




அதன் அடிப்படையில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அறிக்கையை மாவட்ட ஆட்சியரிடம் சமர்ப்பித்துள்ளனர். இதில் கர்ப்பிணி பெண்ணிற்கான இந்த சுப நிகழ்ச்சி ஐந்தாம் தேதி நடைபெற்றுள்ளதால் உணவு மாதிரிகளை சேகரிக்க முடியவில்லை என்றும் மேலும் பிரியாணி வாங்கப்பட்டதாக கூறப்படும் இரண்டு கடைகளும் பூட்டப்பட்டுள்ளதாகவும் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் டாக்டர் புஷ்பராஜ் அறிக்கை தாக்கல் செய்துள்ளார். குறிப்பாக ஆறாம் தேதி சிகிச்சைக்கு வந்த செல்வமுருகன் (24)  என்ற இளைஞர் ஒரு நாள் தாமதமாக சிகிச்சைக்கு வந்த நிலையில், அவருக்கு ஏற்கனவே பாதிப்புகள் அதிகரித்து இருந்ததால் சிகிச்சை அளித்தும் பலன் இன்றி  உயிரிழந்துள்ளார். ஆனால், அவர் இறப்புக்கு உரிய சிகிச்சை அளிக்கப்படவில்லை  என்று சிலர் தகவல்களை பரப்புகின்றனர். அதனை நாங்கள் முற்றிலும் மறுக்கின்றோம். அந்த இளைஞர் சிகிச்சைக்கு வந்தபோதே ரத்த அழுத்தம் அதிக அளவு இருந்தது. அவருக்கு தேவையான  சிகிச்சைகளை, அதற்குரிய மருத்துவர்கள் இருந்து வழங்கினார்கள். இருப்பினும் அவரது உடல்நிலை மோசமாக பாதித்திருந்ததால் அவரது உடல் சிகிச்சையை ஏற்க வில்லை. எனவே அந்த இளைஞருக்கு உரிய சிகிச்சைகள் அழைக்கப்படவில்லை என்கின்ற தகவல் வதந்தி என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.