இந்தியாவின் மூத்த அரசியல் தலைவரும், உத்தரபிரதேசத்தின் முன்னாள் முதலமைச்சருமான முலாயம்சிங் யாதவ் இன்று காலை குருகிராமில் உள்ள மருத்துவமனையில் காலமானார். அவரது மறைவுக்கு இந்திய பிரதமர் மோடி புகழஞ்சலி தெரிவித்துள்ளார்.


இதுதொடர்பாக, பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது, “ முலாயம்சிங் யாதவ் தனித்துவமான ஆளுமை. அவர் மக்களின் பிரச்சினைகளை உணரும் எளிமையான தலைவர். அவர் மக்களுக்காக விடாமுயற்சியுடன் சேவை செய்தார். அவர் தனது வாழ்க்கை முழுவதும் ஜனநாயகத்திற்காக அர்ப்பணித்தார்.










முலாயம்சிங் யாதவ் உத்தரபிரதேசத்திலும், தேசிய அரசியலிலும் தன்னை தனித்துவம் மிக்கவராக காட்டினார். எமர்ஜென்சி காலத்தில் ஜனநாயகத்திற்காக துருப்புச்சீட்டாக செயல்பட்டார். பாதுகாப்பு அமைச்சராக அவர் பொறுப்பு வகித்தபோது வலிமையான இந்தியாவிற்காக பாடுபட்டார். பாராளுமன்றத்தில் அவரது நுண்ணறிவு தேசிய நலனை மேம்படுத்துவதில் ஆர்வமாக இருந்தது.” என்று பதிவிட்டுள்ளார்.








மேலும், முதலைமைச்சர்கள் மாநாட்டின்போது முலாயம்சிங் யாதவ், ஜெயலலிதா ஆகியோருடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தையும் பகிர்ந்துள்ள பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில், “ நாங்கள் அந்தந்த மாநிலங்களின் முதலமைச்சராக இருந்தபோது முலாயம்சிங் யாதவுடன் நெருக்கமான தொடர்பில் இருந்தோம். அவருடைய கருத்துக்களை கேட்க நான் எப்போதும் ஆவலுடன் இருந்தேன். அவரது மறைவு எனக்கு வேதனை அளிக்கிறது. அவரது குடும்பத்தினருக்கும், லட்சக்கணக்கான தொண்டர்களுக்கும் ஆழ்ந்த இரங்கல். ஓம் சாந்தி” இவ்வாறு பிரதமர் மோடி பதிவிட்டுள்ளார்.