தமிழக வெற்றிக் கழகம்


தமிழக வெற்றிக் கழகம் கட்சியை கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கிய நடிகர் விஜய், ஒப்பந்தமாகியுள்ள படங்களில் நடித்து முடித்த பிறகு 2026ம் ஆண்டு முதல் தமிழக சட்டப்பேரவை தேர்தலில் களம் காண போகிறார் என்றும் அவரின் அறிக்கையின் மூலம் தெரிவித்து இருந்தார். அதனைத் தொடர்ந்து சென்னை பனையூரில் உள்ள அவர்களின் கட்சி அலுவலகத்தில் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. அதில் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் உறுப்பினர் சேர்க்கை மற்றும் உட்கட்சி கட்டமைப்பு விரிவாக்கம் குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

  


 உறுப்பினர் சேர்க்கை


இதனைத் தொடர்ந்து உறுப்பினர் சேர்க்கை மேற்கொள்வதற்கு தனி செயலியை விஜய் அறிமுகப்படுத்தினார். அனைத்து மாவட்ட நிர்வாகிகளும் தனித்தனியாக பொறுப்பு கொடுக்கப்பட்டு, உறுப்பினர் சேர்க்கையை விரிவுபடுத்த நடிகர் விஜய் பல்வேறு திட்டங்களை நிர்வாகிகளுக்கு கூறியிருந்தார்.  அதேபோன்று இரண்டு கோடி உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் என இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது.


 மக்களவைத் தேர்தல் அறிவிப்பு


இதனைத் தொடர்ந்து தேர்தல் முடிந்த நிலையில் தற்பொழுது, கட்சி நிர்வாகிகள் பல்வேறு நல திட்ட பணிகளில் கவனம் செலுத்த துவங்கியுள்ளனர். தமிழ்நாடு முழுவதும் தமிழக வெற்றி கழகம் சார்பில், இலவச சட்ட ஆலோசனை மையத்தை கொண்டு வர நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் தொகுதி தோறும், ஏழை மாணவர்கள் பயன்பெறும் வகையில், பயிலகம் மற்றும் நூலகத்தை உருவாக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.


தற்போது தமிழகத்தில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் மற்றும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகின. இதில் ஏராளமான மாணவர்கள் பல்வேறு பாடங்களில் அதிக மதிப்பெண் பெற்றுள்ளனர். மாணவர்களை அழைத்து நலத்திட்ட உதவிகளை செய்யவுள்ளதாகவும் அனைத்து மாணவர்களும் தயாராக இருங்கள் என  தமிழக வெற்றிக் கழகம் கட்சி தலைவர் நடிகர் விஜய் தகவலை கூறியுள்ளதாக கூறப்படுகிறது 


கோடை காலம்


கோடை காலத்தை முன்னிட்டு பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் பல்வேறு தொண்டு நிறுவனம் சார்பில் பல்வேறு இடங்களில் இலவச நீர் மற்றும் மோர் பந்தல் அமைப்பது வழக்கம். இது பல்வேறு முக்கிய கட்சிகளின் முக்கிய  பணியாக கருதப்படுகிறது. அதேபோன்று தமிழக வெற்றி கழக நிர்வாகிகளும் தற்போது நீர் மோர் பந்தல் வழங்கும் நிகழ்ச்சிகளை நடத்து துவங்கியுள்ளனர்.


 




 


உலக பட்டினி தினத்தை முன்னிட்டு பட்டினி இல்லா உலகம்


உலக பட்டினி தினத்தை முன்னிட்டு பட்டினி இல்லா உலகம் வேண்டும் என்பதை வலியுறுத்தி, தமிழக வெற்றிக் கழகப் பொதுச்செயலாளர் ஆனந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் உள்ள 234 சட்டமன்றத் தொகுதிகளிலும், மே 28-ம் தேதி பொதுமக்களுக்கு இலவச உணவு வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்று தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகளுக்கு அறிவித்துள்ளார். அதன்படி, தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளிலும், அண்டை மாநிலங்களிலும் தமிழக வெற்றி கழகம் சார்பில் இலவச மதிய உணவு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.





ஐம்பது ஆயிரம் பேருக்கு அன்னதானம் 


இந்த நிலையில் திருவண்ணாமலை மாவட்டம் திருவண்ணாமலை, செங்கம் ,வந்தவாசி ,செய்யார் ,ஆரணி ,போளூர் , உள்ளிட்ட பகுதிகளில்  திருவண்ணாமலை மாவட்ட தலைவர் பாரதி தாசன் தலைமையில்  அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை சுமார் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு மதிய உணவுகள் வழங்கப்பட்டது. இதில் தமிழக வெற்றி கழகத்தின் மாவட்ட, நகர, ஒன்றிய, பேரூராட்சி நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் என பலர் கலந்து கொண்டனர்.