திருவண்ணாமலை மாவட்டத்தில் மொத்தம் 13 யூனியங்களில் உள்ள 860 கிராம பஞ்சாயத்துகளில் கடந்த இரண்டு ஆண்டுகளில் அனைவரும் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் வீடுகள் ஒதுக்கீடு செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பஞ்சாயத்திலும் குடிசை வீடு, ஓட்டு வீடு மற்றும் ஒழுங்கு நிலையில் உள்ள மெத்தை வீடு என அனைத்து வீடுகளும் கிராம நிர்வாக அலுவலர்கள் , பஞ்சாயத்து தலைவர்கள், செயலாளர்கள் , மகளிர் சுய உதவிக் குழுக்களால் கணக்கீடு செய்யப்பட்டு ஆன்லைனில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இதில் திருவண்ணாமலை, கலசப்பாக்கம், புதுப்பாளையம், துரிஞ்சாபுரம் ஆகிய யூனியன்களில் உள்ள 129 பஞ்சாயத்துகளில் பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இருப்பினும் பயனாளிகள் முழுமையாக தேர்வு செய்யப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதற்கு துறை சார்ந்த அதிகாரிகளோ அல்லது பஞ்சாயத்து தலைவர்களோ கணக்கீடு செய்யப்பட்ட பஞ்சாயத்து செயலாளர் என யாரும் பொறுப்பேற்றுக் கொள்ளவில்லை, இருந்தாலும் யார் யார் பெயர்கள் சேர்க்கப்பட்டுள்ளது, விடுபட்டுள்ளது என்பது வீடு வழங்கும் போது மட்டும் தான் தெரியும்.


இந்த நிலையில் தமிழக அரசு சார்பில் அனைத்து யூனியன் அலுவலகங்களுக்கும் அவசர சுற்று அறிக்கை ஒன்று அனுப்பப்பட்டுள்ளது. அதில் கூறியதாவது: கருணாநிதியின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் வீடு வழங்க தேர்வு செய்யப்பட்ட பயனாளிகள் பட்டியலை அங்கீகரித்து ஒப்புதல் பெறுதல், இத்திட்டத்தில் பயனாளிகள் தகுதி மற்றும் தகுதியின்மை ஊராட்சி அளவில் பயனாளிகள் தேர்வு குழு அமைத்தல், வீடுகள் கட்டும் அமைப்பு பணிகள் கண்காணித்தல் மற்றும் தொகையை விடுவித்தல் போன்ற வழிகாட்டு நெறிமுறைகள் வழங்கப்பட்டுள்ளது. எனவே சென்னை ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிய இயக்குனரின் செயல் திட்டத்தின் படி மேற்படி பொருள் தொடர்பாக நாளை 30-ஆம் தேதி காலை 11 மணியளவில் அனைத்து பஞ்சாயத்துகளிலும் கிராம சபை கூட்டம் நடத்த வேண்டும். இது குறித்து நெறிமுறைகளை முழுமையாக பின்பற்றி சிறப்பு கிராம சபைக் கூட்டங்களை பயனாளிகள்  முன்னிலையில் நடத்தி ஒப்புதல் பெறப்பட்ட பயனாளிகளின் பட்டியலின் நகலினை அன்று மாலை 4 மணிக்குள் சம்பந்தப்பட்ட பிடியோ  அலுவலகத்தில் ஒப்படைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது என  இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளது. எனவே கிராம பஞ்சாயத்துகளில் வசிப்பவர்கள் வீடு இல்லாதவர்கள் மற்றும் வீடு இருந்தாலும் இடிந்து விழும் நிலையில் உள்ளவர்கள் என அனைவரும் கிராம சபையில் பங்கேற்று தங்கள் பெயர்களை பதிவு செய்யுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கிராம சபையில் பங்கேற்று பெயர்களை பயனாளிகளாக சேர்க்க விட்டால் அதன் பின்னர் யாராலும் அவர்களுக்கு வீடு வழங்க முடியாது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.