திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த ஒரு கிராமத்தை சேர்ந்த 15 வயது மாணவி வந்தவாசியில் உள்ள ஒரு பள்ளியில் பத்தாம் வகுப்பு பயின்று வருகிறார். இவருடைய பாட்டி வீடு அருகில் ஒரு கிராமத்தில் இருக்கிறது. மாணவி பாட்டி வீட்டுக்கு சென்று வருவது வழக்கம், அப்போது அதே கிராமத்தைச் சேர்ந்த உறவினரான தனியார் நிறுவனத்தில் வேலை செய்யும் அருண்குமார் (22 வயது) சிறுமியிடம் கடந்த ஒரு ஆண்டாக நண்பர்களாக பேசி பழகி வந்துள்ளார். இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியுள்ளது. இந்த நிலையில் கடந்த மே மாதம் விடுமுறை நாளில் தனது பாட்டி வீட்டிற்கு மாணவி சென்றுள்ளார். அப்போது பாட்டிக்கு சொந்தமான மாடு ஒன்றை ஓட்டிக்கொண்டு ஏறிப் பகுதிக்கு சென்றுள்ளார்.
வாலிபர் ஆசைவார்த்தை கூறி மாணவி பாலியல் வன்கொடுமை
அப்போது அந்த வாலிபரும் அங்கு வந்துள்ளார். அப்போது அந்த வாலிபர் மாணவியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி கட்டாயப்படுத்தி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த இரண்டு மாதங்களாக மாணவியின் உடலில் மாற்றம் தெரிந்ததால், அவரது தாய் செய்யாற்றில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பரிசோதனை செய்துள்ளார். அதில் மாணவி கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. அதனையடுத்து மாணவியை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும்படி மருத்துவர்கள் அறிவுரை வழங்கினர். ஆனால் மாணவியின் தாய் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லாமல் வீட்டுக்கு அழைத்து வந்துள்ளார்.
வாலிபர் மீது போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு
இது குறித்து துணை சுகாதார நிலைய செவிலியருக்கு தகவல் கிடைத்தது. அவர் உடனடியாக மாணவியை அழைத்துச் சென்று திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கடந்த 22-ஆம் தேதி சேர்த்து உள்ளார். திருவண்ணாமலை அரசு மருத்துவமனை நிர்வாகம் மாணவி 2 மாதம் கர்ப்பமாக இருப்பதாக வந்தவாசி அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். மாணவியின் தாய் கொடுத்த புகாரின் பேரில் துணை ஆய்வாளர் சாந்தி இதுகுறித்து விசாரணை நடத்தினர். அதில் மாணவியிடம் ஆசைவார்த்தை கூறி அருண்குமார் பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பம் ஆக்கியது தெரியவந்தது. இதனையடுத்து போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து தலைமறைவான வாலிபரை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.