திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த தெள்ளூர் கிராமத்தில் வசிக்கும் சின்னராஜ் மற்றும்  குமாரி தம்பதியின் மகள்  ஜெயந்தி. இவருக்கும்  ராம்பிரகாஷ் என்பவருக்கும் சில வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. ஜெயந்தி கர்ப்பமாகி பிரசவத்துக்காக ஆரணி அரசு மருத்துவமனையில் கடந்த ஆண்டு 2023 மே மாதம் 23-ஆம் தேதி சேர்க்கப்பட்டார். அங்கு ஜெயந்தியை  மருத்துவர்கள் பரிசோதித்து பார்த்தனர். அப்போது வயிற்றில் குழந்தை அசைவு இன்றி உள்ளது. குழந்தை இறந்து விட்டதாக கூறியுள்ளனர். ஆனால் வயிற்றில் அசைவு தெரிவதாக உறவினர்கள் கூறி அறுவை சிகிச்சை செய்யுமாறு மருத்துவர்களிடம் கேட்டுக் கொண்டனர். பின்னர் ஜெயந்திக்கு மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்ததில் அவருக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. அத்துடன் ஜெயந்தி உடல்நிலை மோசமாகிவிட்டதால் அவரை மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவர்கள் அனுப்பி வைத்தனர்.


தவறான சிகிச்சையால் கோமாவுக்கு சென்ற தாய்  


தொடர்ந்து ஜெயந்தியை மருத்துவர்கள் பரிசோதித்தனர். அப்போது ஆரணி அரசு மருத்துவமனையில் தவறான சிகிச்சை அளிக்கப்பட்டதால் கோமா  நிலைக்கு அவர் சென்று விட்டதாக கூறினர். அதன் பின்னர் அடுக்கம்பாறை மருத்துவமனையில் ஜெயந்திக்கு இரண்டு மாதங்கள் சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் அவருடைய உடல் நிலையில் எந்தவித முன்னேற்றமும் ஏற்படவில்லை, இதனால்  சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு ஜெயந்தி அனுப்பப்பட்டார். அங்கு மருத்துவர்கள் குழுவினர்  சிகிச்சை அளித்ததில் ஜெயந்தியின் உடலில் அசைவு ஏற்பட்டது. ஆனால் அவர் முழுமையாக குணமடையவில்லை, இதனால் ஜெயந்தியை வீட்டுக்கு அழைத்துச் செல்லுமாறு உறவினரிடம் மருத்துவர்கள் கூறினர். ஆனாலும் ஜெயந்தியை வீட்டுக்கு அழைத்துச் செல்லாமல் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் உறவினர்கள் சேர்த்துள்ளனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது, இதற்கிடையில் முதல்வரின் தனிப்பிரிவு மற்றும் வேலூர் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர்களுக்கு ஜெயந்தி பெற்றோர் சின்ன ராஜ்குமாரி புகார் அனுப்பினார். 


ஆரணி மருத்துவமனையில் வேலூர் மாவட்ட சுகாதாரப் பணிகள் இணை இயக்குனர் விசாரணை 


அதில் ஆரணி அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் அளித்த தவறான சிகிச்சையில் கோமா நிலைக்கு எங்கள் மகள் ஜெயந்தி சென்று விட்டார். எனவே இதுகுறித்து விசாரணை நடத்த வேண்டும் என அவர்கள் கோரிக்கை வைத்தனர். அதன் அடிப்படையில்  ஆரணி அரசு மருத்துவமனைக்கு வேலூர் மாவட்ட சுகாதாரப் பணிகள் இணை இயக்குனர் பாலச்சந்தர் தலைமையில் அதிகாரிகள்  இன்று  ஆரணி வந்தனர். மருத்துவமனையில்  ஊழியர்கள் யாரும் வெளியில் செல்லக்கூடாது என்று கூறிவிட்டு விசாரணையை அதிகாரிகள் தொடங்கினர். மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர்கள் ஒவ்வொருவராக அழைத்து 2023-ஆம் ஆண்டு மே மாதம் 25-ஆம் தேதி பிரசவத்திற்காக ஜெயந்தி என்ற கர்ப்பிணி பெண்ணை சேர்த்த போது பணியில் இருந்தவர்கள் யார் அவருக்கு பிரசவம் பார்த்தது யார்? அருகில் இருந்த செவிலியர்களை யார் அவருக்கு என்ன சிகிச்சை அளிக்கப்பட்டது போன்ற கேள்விகள் கேட்டு விசாரித்தனர். இதனால் ஆரணி அரசு மருத்துவமனையில் பரபரப்பு நிலவியது.


இதுகுறித்து செய்தியாளர்களிடம்  சின்னராஜ் கூறியதாவது;


பிரசவத்தைக்காக மகள் ஜெயந்தியை திருவண்ணாமலை மருத்துவமனைக்கு அழைத்து வந்த போது அவரே நடந்து சென்றார். அவருக்கு மருத்துவர்கள் தவறான சிகிச்சை அளித்துள்ளனர் , பரிசோதனை முடிந்தவுடன் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது ஜெயந்தி தலையில் பின் பக்கம் மற்றும் கை கால்கள் உட்பட பல இடங்களில் காயங்கள் இருந்தன. அத்துடன் அவருக்கு மூன்று பற்களை அகற்றி விட்டனர். 13 மாதங்கள் ஆகியும் கோமா நிலையில் ஜெயந்தி இருக்கிறார். தனியார் மருத்துவமனையில்  தொடர்ந்து சிகிச்சை அளிக்க எங்களால் முடியவில்லை.  இதுவரை 7 லட்சம் செலவு செய்து மகளின் உடலில் எந்த ஒரு முன்னேற்றமும் இல்லை. எனவே முதல்வர் தலையிட்டு பாதிக்கப்பட்ட எங்களுக்கு நியாயம் நிவாரண உதவி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறினார்.