ஆரணி அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் இருசக்கர வாகனத்தில் பயணம் செய்த மூன்று இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதுகுறித்து காவல்துறையினர் சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பைக் விபத்தில் 3 இளைஞர்கள் பலி
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அருகே அரியப்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர்கள் சரண்ராஜ் மற்றும் ராஜேஷ். இவர்களது நண்பர் முள்ளிப்பட்டு ஹவுசிங் போர்டு பகுதியைச் சேர்ந்த மணி. இவர்கள் மூவரும் சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தனர். இந்த சூழலில்,புரட்டாசி மாத முதல் சனிக்கிழமை என்பதால் இவர்கள் மூவரும் விடுமுறைக்கு வீட்டுக்கு வந்தனர். பின்னர் ஆரணியில் உள்ள பெருமாள் கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்துள்ளனர். அதன் பிறகு நண்பனைச் சந்திப்பதற்காக சரண்ராஜ் இருசக்கர வாகனத்தில் சென்றார். தன்னுடன் ராஜேஷையும் அழைத்துச் சென்றுள்ளனர். பிறகு மூன்று பேரும் ஒரே பைக்கில் சேவூர் பைபாஸ் சாலையிலுள்ள டீக்கடைக்கு வந்துள்ளனர். இரவு 11 மணிக்குக் கடைப் பகுதியிலிருந்து கிளம்பியுள்ளனர். நண்பன் சரண்ராஜை அவரது வீட்டில் கொண்டு சென்று விடுவதற்காக இருசக்கர வாகனத்தை வேகமாக ஓட்டியுள்ளனர்.
விபத்து ஏற்படுத்திய வாகனம் லாரி
இதில் சரண்ராஜ், ராஜேஷ் இருவரும் முள்ளிப்பட்டியில் உள்ள மணி என்பவரை வீட்டில் விடுவதற்காக இரு சக்கர வாகனத்தில் அழைத்துச் சென்றனர். அப்போது ஆரணி தேசிய நெடுஞ்சாலையில் சென்றுக்கொண்டிருந்தபோது அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று இவர்களது இருசக்கர வாகனத்தில் மோதியது. இந்த விபத்தில் அவர்கள் தூக்கி வீசப்பட்டு சாலையின் நடுவே விழுந்ததில் தலையில் அடிப்பட்டு மூவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். நீண்ட நேரத்திற்கு பிறகு அவ்வழியாக வாகனத்தில் சென்றவர்கள் விபத்து குறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஆரணி கிராமிய காவல்துறையினர் உயிரிழந்த இளைஞர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆரணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், வழக்குப் பதிவு செய்து விபத்து ஏற்படுத்திய வாகனத்தைக் கண்டுபிடிக்க சி.சி.டி.வி காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் விபத்து ஏற்படுத்திய வாகனம் லாரி எனத் தெரியவந்திருக்கிறது. இந்தச் சம்பவம், அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.