திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் கார்த்திகை தீப திருவிழா பூர்வாங்க பணிகள் செய்திட பந்த கால் முகூர்த்த நடும் விழா வேத மந்திரங்கள் முழங்க நடப்பட்டது.
திருவண்ணாமலை (Karthikai deepam festival Panthakkal Vizha)
பஞ்சபூத ஸ்தலங்களில் 'அக்னி' ஸ்தலமாக விளங்கும் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் நடைபெறும் திருக்கார்த்திகை தீபத் திருவிழா உலக பிரசித்தி பெற்றது. காவல் தெய்வமானதுர்க்கை அம்மன் உற்சவத்துடன் வரும் நவம்பர் 14-ம் தேதி தொடங்கி, 17 நாட்கள் நடைபெறும். இவ்விழாவுக்கு தமிழகம் மட்டுமின்றி வெளிநாடு, வெளி மாநிலம் இருந்து பல லட்சம் பக்தர்கள் வருகை தருவார்கள்.
கார்த்திகை தீப திருவிழா கொடியேற்றம் எப்போது
அண்ணாமலையார் சன்னதி முன்பு உள்ள தங்க கொடிமரத்தில் வரும் டிசம்பர் 4-ம் தேதி கொடியேற்றம் தொடங்கி 10 நாள் அனுதினமும் காலை மற்றும் இரவு பஞ்சமூர்த்திகள் உற்சவம் நடைபெறும். அதில் 7-ம் நாளில் 'மகா தேரோட்டத்தில் பஞ்சமூர்த்திகள் விநாயகர், வள்ளி, தெய்வானை சமேத முருகர், உண்ணாமுலை அம்மன் சமேத அண்ணாமலையார், பராசக்தி அம்மன் மற்றும் சண்டிகேஸ்வரர் ஆகியோர் சிறப்பு அலங்காரத்தில் தனித்தனி மகா தேர்களில் எழுந்தருளி மாட வீதியில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி அளிப்பார். ஒரே நாளில் 5 மாகாதேர்கள் பவனி என்பது கூடுதல் சிறப்பாகும். ஒவ்வொரு மகாதேரும் நிலைக்கு வந்த பிறகு அடுத்த தேரின் புறப்பாடு நடைப்பெற்றும் என்பதால் காலையில் தொடங்கும் மகாதேரோட்டம் இரவு வரை நடைபெறும். கார்த்திகை தீப திருவிழாவின் முக்கிய நிகழ்வாக திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் வரும் டிசம்பர் 13ம் தேதி அதிகாலை 4.30 பரணி தீபமும், அன்று மாலை 6 மணிக்கு கோவிலின் பின்புறம் உள்ள 2668 அடி உயரம் கொண்ட மலை உச்சியில் மகாதீபம் ஏற்றப்படும்.
தீப திருவிழா பூர்வாங்க பணிகளுக்காக பந்தகால் முகூர்த்தம்
தொடர்ந்து, 11 நாட்களுக்கு மகா தீப தரிசனத்தை பக்தர்கள் காணலாம். இதற்காக, 3,500 கிலோ நெய் மற்றும் 1,000 மீட்டர் காடா துணி பயன்படுத்தப்படும். மகா தீபத்தை பருவதராஜகுல வம்சத்தினர் ஏற்றிவைப்பது வழக்கம். இதையடுத்து, திருவண்ணாமலை ஐயங்குளத்தில் 3 நாட்களுக்கு தீர்த்தவாரி நடைபெறும். அக்னி பிழம்பாக காட்சி தரும் அண்ணாமலையாரை குளிர்விக்க தீர்த்தவாரி நடைபெறுவதாக புராணங்கள் கூறுகின்றன. திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலின் திருக்கார்த்திகை தீபத் திருவிழா பூர்வாங்க பணிகள் மேற்கொள்ள அதிகாலையிலே கோவிலின் நடை திறக்கப்பட்டு சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகமானது நடைபெற்று பின்னர் சம்பந்த விநாயகர் சன்னதியில் பந்தகாலுக்கு பால், சந்தனம், மஞ்சள், தயிர் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை கொண்டு அபிஷேகம் செய்து கோயில் பிரகாரங்களை சுற்றி வந்து ராஜகோபுரம் எதிரே வேத மந்திரங்கள் முழங்க 6.37 மணிக்கு பந்தக்கால் நடப்பட்டு பந்தகாலிற்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.