ஃபெஞ்சல் புயலின் எதிரொலியாக திருவண்ணாமலை மாவட்டத்தில் நவம்பர் 30, டிசம்பர் 1 ஆகிய நாட்களில் கனமழை பெய்தது. கனமழை காரணமாக திருவண்ணாமலை கிரிவல பாதையில் உள்ள அண்ணாமலையார் மலையில் நேற்று முன்தினம் ( டிசம்பர் 01 ) பாறை சரிந்து மண் சரிவு ஏற்பட்டது. மாலை 4:30 மணி அளவில் இந்த மண்சரிவு நடைபெற்றது.
மண் சரிவு ஏற்பட்டது எப்படி ?
அடிவாரத்தில் வசித்து வந்த மக்கள் சுதாரிப்பதற்குள் சில அசம்பாவிதங்கள் அரங்கேறி விட்டன. இதில், வ.உ.சி நகர் பகுதியில் உள்ள 11வது தெருவின் குடியிருப்புப் பகுதியில் மலையிலிருந்து உருண்டு வந்த சுமார் 50 டன் எடை கொண்ட பாறை விழுந்ததில், இரண்டு வீடுகள் பலத்த சேதம் அடைந்தது. மண் சரிவில் சிக்கிய 3 வீடுகளில் ராஜ்குமார் என்பவரின் வீடு முழுவதுமாக மண்ணுக்குள் புதைந்து போனது. இதுகுறித்து சத்தம் கேட்டவுடன் அருகில், இருந்த வீட்டில் இருப்பவர்கள் உடனடியாக வெளியேறியதால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
மண் சரிவால் மண்ணில் புதைந்துள்ள வீட்டுக்குள் ராஜ்குமார், அவரது மனைவி மீனா, அவர்களது குழந்தைகள் கௌதம், இனியா, அருகில் உள்ள வீடுகளைச் சேர்ந்த குழந்தைகள் 3 பேர் என மொத்தம் 7 பேர் சிக்கியதை மாவட்ட நிர்வாகம் உறுதி செய்தது.
அடுத்தடுத்து நடந்த மண் சரிவு
சம்பவம் நடைபெற்றது நகர் பகுதி என்பதால் உடனடியாக மீட்பு பணியில் தொடங்கப்பட்டது. மண் சரிவு ஏற்பட்ட இடத்தில், மோப்ப நாய்கள் மற்றும் தேவையான உபகரணங்களுடன் தீயணைப்பு வீரர்கள் மற்றும் காவல்துறையினர் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். ஞாயிற்றுக்கிழமை இரவு மழை பெய்ய தொடங்கியதால் நிலைமை மோசமாக தொடங்கியது. இதன் காரணமாக மீட்பு பணி மேற்கொள்ள முடியாத சூழல் ஏற்பட்டது.
மறுபுறம் தேசிய பேரிடர் மீட்புப் படையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. திண்டிவனத்தில் இருந்து துணை கமாண்டன்ட் ஸ்ரீதர் தலைமையில் 30 பேர் கொண்ட தேசிய பேரிடர் மீட்புப் படை வீரர்கள் திருவண்ணாமலை வந்தடைந்தனர். இதனைத் தொடர்ந்து திங்கட்கிழமை காலை, தேசிய பேரிடர் மீட்பு படையினர், தீயணைப்பு துறையினர் மற்றும் மாநில பேரிடர் மீட்பு துறையினர் இணைந்து மீட்பு பணியை தொடங்கினர்.
இதுவரை மொத்தம் ஐந்து உடல்கள் மீட்கப்பட்டுள்ளது. அதன் பிறகு பாறை வந்ததால் மீட்பு பணியில் மீண்டும் தடங்கள் ஏற்பட்டது. அந்தப் பாறையை அப்புறம் படுத்தினால், மீண்டும் மண் சரிய வாய்ப்பு இருப்பதால் நேற்று இரவு மீட்பு பணியில் மீண்டும் சிக்கல் ஏற்பட்டது. இரவில் மீண்டும் மழை பெய்யத் தொடங்கியதால் தற்காலிகமாக மீட்பு பணியும் நிறுத்தப்பட்டது. இன்று காலை மீட்பு பணி மீண்டும் தொடங்கி நடைபெற்று வருகிறது. இரண்டு சிறுமிகளின் உடலை தேடும் பணி தீவிர படுத்தப்பட்டுள்ளது.
வல்லுநர்கள் குழு ஆய்வு
இந்த நிலையில் சம்பவம் நடைபெற்ற இடத்தில், முன்னாள் ஐஐடி பேராசிரியர் தலைமையிலான குழு ஆய்வு மேற்கொண்டது. சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக அவர்கள் அந்த பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர். இந்தக் குழுவில் பேராசிரியர்கள் மோகன், நரசிம்மராவ், பூமிநாதன் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர். மண்ணரிப்பு எப்படி ஏற்பட்டது, நிலச்சரிவு எப்படி ஏற்பட்டது என்பது குறித்து ஆய்வு மேற்கொண்டது மட்டுமில்லாமல், வருங்காலங்களில் இந்த பகுதியில் நிலச்சரிவு எப்படி ஏற்படும், அதை தடுப்பது எப்படி என்பது குறித்தும் ஆய்வறிக்கை தாக்கல் செய்யப்படுவது உள்ளதாக தகவல் தெரிந்தவனர்.
இது குறித்து பேராசிரியரும், சுற்றுச்சூழல் மற்றும் நீர்வளத்துறை வல்லுநருமான மோகன் நம்மிடம் கூறுகையில், இந்தப் பகுதியில் பாதுகாப்பு என்பது சற்று குறைவாகதான் இருந்து உள்ளது. இன்னும் இரண்டு நாளில் இது குறித்து ஆய்வு அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என தெரிவித்தார். மேலும் கூறுகையில், இது போன்று வராமல் இருப்பதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதை குறித்தும் ஆய்வு சமர்ப்பிக்கப்படும் என தெரிவித்தார்.
வெளியான பரபரப்பு தகவல்கள்
நமக்கு கிடைத்த பிரத்யேக தகவலின் அடிப்படையில், மண் வீடுகள் இருந்ததால் பாதிப்பு அதிகமாக ஏற்பட்டதாகவும் அதுவே கான்கிரீட் வீடுகளாக இருந்திருந்தால் பாதிப்பு குறைவாக இருந்திருக்கும், வீட்டில் இருப்பவர்கள் தப்பித்து வெளியே வருவதற்கு வாய்ப்பு கிடைத்திருக்கும் என அறிக்கையில் சமர்ப்பிக்கப்பட போவதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த பகுதியில் வீடுகளை கட்ட வேண்டும் என்றால், முன் அனுமதி பெற வேண்டும் உள்ளிட்ட முக்கிய விவரங்கள் அந்த அறிக்கையில் இடம்பெறும் என தகவல் வெளியாகி உள்ளது.
மண் சரிவு நடந்தது ஏன் ?
மண்சரிவு நடந்த இடங்களில் ஏற்கனவே பல ஆண்டுகளாகவே, மழை காலத்தில் சிறிய ஓடை போன்று, மலையிலிருந்து வெள்ளம் வருவது வழக்கமாக உள்ளது. அவ்வாறு நாளடைவில் அந்த பகுதியில், வெள்ளம் வரவர மண் அரிப்பு ஏற்பட்டுள்ளது. இது போக குடியிருப்பு பகுதிகளும், ஆபத்தான முறையில் மலைக்கு அருகே அமைக்கப்பட்டுள்ளது.
அடிக்கடி ஓடை வழியாக வெள்ளம் வெளியேறியதால், மண் கழிவுகளும் அதிகமாக சேர்ந்துள்ளன. இதனால் மண் தனது பிடிப்பு தன்மையை படிப்படியாக இழந்து வந்துள்ளது. இந்தநிலையில் அளவு மழை ஒரே நேரத்தில் பெய்ததால், மண்ணரிப்பு வேகமாக ஏற்பட்டு, 50 டன் எடையுள்ள பாறை சரிந்துள்ளது. காரணமாகவே இந்த மண் அரிப்பு சம்பவம் ஏற்பட்டுள்ளது. அதீத மழை குறிப்பிட்ட நேரத்தில் பெய்ததாலே, இந்த அளவிற்கு மண்ணரிப்பு ஏற்பட்டதாக வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.