ஃபெஞ்சல் புயலின் எதிரொலியாக திருவண்ணாமலை மாவட்டத்தில் நவம்பர் 30, டிசம்பர் 1 ஆகிய நாட்களில் கனமழை பெய்தது. கனமழை காரணமாக திருவண்ணாமலை கிரிவல பாதையில் உள்ள அண்ணாமலையார் மலையில் நேற்று முன்தினம் ( டிசம்பர் 01 ) பாறை சரிந்து மண் சரிவு ஏற்பட்டது. மாலை 4:30 மணி அளவில் இந்த மண்சரிவு நடைபெற்றது.
7 பேர் மரணம்:
அடிவாரத்தில் வசித்து வந்த மக்கள் சுதாரிப்பதற்குள் சில அசம்பாவிதங்கள் அரங்கேறி விட்டன. இதில், வ.உ.சி நகர் பகுதியில் உள்ள 11வது தெருவின் குடியிருப்புப் பகுதியில் மலையிலிருந்து உருண்டு வந்த சுமார் 50 டன் எடை கொண்ட பாறை விழுந்ததில், இரண்டு வீடுகள் பலத்த சேதம் அடைந்தது. மண் சரிவில் சிக்கிய 3 வீடுகளில் ராஜ்குமார் என்பவரின் வீடு முழுவதுமாக மண்ணுக்குள் புதைந்து போனது. இது குறித்து சத்தம் கேட்டவுடன் அருகில், இருந்த வீட்டில் இருப்பவர்கள் உடனடியாக வெளியேறியதால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
மண் சரிவால் மண்ணில் புதைந்துள்ள வீட்டுக்குள் ராஜ்குமார், அவரது மனைவி மீனா, அவர்களது குழந்தைகள் கௌதம், இனியா, அருகில் உள்ள வீடுகளைச் சேர்ந்த குழந்தைகள் 3 பேர் என மொத்தம் 7 பேர் சிக்கியதை மாவட்ட நிர்வாகம் உறுதி செய்தது.
அடுத்தடுத்து நடந்த மண் சரிவு
சம்பவம் நடைபெற்றது நகர் பகுதி என்பதால் உடனடியாக மீட்பு பணியில் தொடங்கப்பட்டது. மண் சரிவு ஏற்பட்ட இடத்தில், மோப்ப நாய்கள் மற்றும் தேவையான உபகரணங்களுடன் தீயணைப்பு வீரர்கள் மற்றும் காவல்துறையினர் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். ஞாயிற்றுக்கிழமை இரவு மழை பெய்ய தொடங்கியதால் நிலைமை மோசமாக தொடங்கியது. இதன் காரணமாக மீட்பு பணி மேற்கொள்ள முடியாத சூழல் ஏற்பட்டது.
மண் சரிவு ஏற்பட்ட அருகில் இருந்த வீடுகளில் இருந்தவர்களும் உடனடியாக பாதுகாப்பான இடத்திற்கு வெளியேற்றப்பட்டனர். இந்தநிலையில் நேற்று, அடுத்தடுத்து இரண்டு இடங்களில் மீண்டும் மண் சரிவு ஏற்பட்டது பதற்றத்தை ஏற்படுத்தியது. குடியிருப்பு பகுதிகள் இல்லாத இடத்தில் மண் சரிவு ஏற்பட்டதால் எந்தவித அசம்பாவிதமும் நடைபெறவில்லை.
மறுபுறம் தேசிய பேரிடர் மீட்புப் படையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.திண்டிவனத்தில் இருந்து துணை கமாண்டன்ட் ஸ்ரீதர் தலைமையில் 30 பேர் கொண்ட தேசிய பேரிடர் மீட்புப் படை வீரர்கள் திருவண்ணாமலை வந்தடைந்தனர். இதனைத் தொடர்ந்து திங்கட்கிழமை காலை , தேசிய பேரிடர் மீட்பு படையினர், தீயணைப்பு துறையினர் மற்றும் மாநில பேரிடர் மீட்பு துறையினர் இணைந்து மீட்பு பணியை தொடங்கினர்.
மீட்பு பணி தாமதம் ஏன் ?
சுற்றி குடியிருப்பு பகுதிகள் இருந்ததால் இடிபாடுகளில் சிக்கியவர்கள் இருந்த இடத்திற்கு, ஜேசிபி உள்ளிட்ட வாகனங்களைக் கொண்டு செல்வதில் பெரிய சிக்கல் ஏற்பட்டது. ஜேசிபி-யை கொண்டு செல்வது அந்த பகுதியில் இருந்த அரசு கட்டிடத்தை இடித்து, அதன் வழியாக கொண்டு சம்பவம் நடந்த இடத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.
மீட்பு வாகனம் சம்பவம் நடைபெற்ற இடத்திற்கு கொண்டு செல்லப்பட்ட பிறகு மீட்பு பணிகள் வேகம் எடுத்தன. நேற்று மாலை முதல் முதலாக சிறுவன் கௌதம் உடல் மீட்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து அடுத்தடுத்து 4 உடல்கள் மீட்கப்பட்டது. இதுவரை மொத்தம் ஐந்து உடல்கள் மீட்கப்பட்டுள்ளது. அதன் பிறகு பாறை வந்ததால் மீட்பு பணியில் மீண்டும் தடங்கள் ஏற்பட்டது. அந்தப் பாறையை அப்புறம் படுத்தினால், மீண்டும் மண் சரிய வாய்ப்பு இருப்பதால் நேற்று இரவு மீட்பு பணியில் மீண்டும் சிக்கல் ஏற்பட்டது. இரவில் மீண்டும் மழை பெய்யத் தொடங்கியதால் தற்காலிகமாக மீட்பு பணியும் நிறுத்தப்பட்டது. இன்று காலை மீட்பு பணி மீண்டும் தொடங்கும் என அறிவிக்கப்பட்டது.
உதயநிதி ஸ்டாலின் ஆய்வு
மண்சரிவு ஏற்பட்ட இடத்தில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்தார். இச்சம்பவத்தில் இறந்தோர் குடும்பத்தாருக்கு தலா ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க நம் முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இழப்பீட்டினை இன்று ( டிசம்பர் 03 ) மாலைக்குள் வழங்கிட வேண்டும் என மாவட்ட ஆட்சியரை அறிவுறுத்தியுள்ளோம். இந்தச் சம்பவத்தில் உயிரிழந்தோருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிப்பதோடு, உற்றார் உறவினர்களுக்கு ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறோம். என்று கூறியுள்ளார்.