திருவண்ணாமலையில், நேற்றைய முன்தினம் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி, இறந்த நிலையில் 7 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலையில் எதனால் திடீர் மண் சரிவு? ஆய்வு செய்த ஐஐடி-யைச் சேர்ந்த நிபுணர் சொல்வது என்ன? என்பது குறித்து பார்ப்போம்.
ஃபெஞ்சல் புயல் தாக்கம்:
திருவண்ணாமலை தீப மலையில், நேற்றைய முன் தினம் ( டிசம்பர் 1 ) நிலச்சரிவு ஏற்பட்டது. இதற்கு முக்கிய காரணம், வங்க கடலில் உருவாகிய ஃபெஞ்சல் புயலின் தாக்கம் என்றே சொல்லலாம். ஃபெஞ்சல் புயலானது, காரைக்கால் - மாமல்லபுரம் இடையே மரக்காணத்திற்கு அருகே கரையை கடந்தது. புதுச்சேரியில் நுழையும் போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்தது.
இதையடுத்து, விழுப்புரத்தில் நகர்ந்து மேலும் வலு குறைந்து, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக திருவண்ணாமலை மாவட்டத்திற்குள் நுழைந்தது. ஃபெஞ்சலை பொறுத்தவரை , நகரும் வேகமானது மிகவும் குறைவாக இருந்ததால், அதிகனமழையை பொழிந்ததாக கூறப்படுகிறது.
திருவண்ணாமலை நிலச்சரிவு
இந்நிலையில், கனமழையால் திருவண்ணாமலையில் பொழிந்த அது கனமழையால், திருவண்ணாமலை தீப மலையில், ( டிசம்பர் 1 ) பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது. நிலச்சரிவால், வ.உ.சி நகரில் பெரும் பாதிப்பு ஏற்பட்டது. அப்போது, பெரும் சத்தத்தை கேட்ட மக்கள் வீட்டை விட்டு வெளியேறி தப்பித்தனர். அப்போது ஒரு வீட்டில் 5 குழந்தைகள் மற்றும் தம்பதி இருவர் என் 7 பேர் சிக்கி கொண்டனர். சிக்கியவர்களை மீட்க 2 நாட்களாக மீட்பு பணி நடைபெற்று வரும் நிலையில், நேற்று 5 பேர் இறந்த நிலையில் உடல்கள் மீட்கப்பட்டன. மேலும் 2 பேரின் உடல்கள் இறந்த நிலையில் மீட்கப்பட்டன.
நிலச்சரிவுக்கு காரணம் என்ன?
இந்நிலையில், சம்பவ இடத்திற்கு ஐஐடி நிபுணர் குழுவானது , சம்பவ இடத்திற்குச் சென்று ஆய்வு மேற்கொண்டது. அப்போது, ஐஐடி வல்லுநர் மோகன் தெரிவித்ததாவது “ நிலச்சரிவுக்கு காரணம் அதிக மழை; எதிர்பார்க்காத மழை; இதனால் அதிவேகத்துடன் மழை நீரானது மேலிருந்து வந்திருக்கிறது. இதன் காரணமாக , அங்கிருக்கும் மணல் உள்ளிட்டவைகளை அரித்து வந்திருக்கிறது. இதன் வேகத்தால் பாறைகளை கூட தள்ளி வந்திருக்கிறது” என தெரிவித்தார்.
மேலும் இந்த இடங்களில் வீடுகள் கட்டலாமா என்பது குறித்து ஆய்வு செய்துதான் சொல்ல முடியும். மேலும் 2 நாட்களில், திருவண்ணாமலை நிலச்சரிவு குறித்த ஆய்வறிக்கை சமர்பிக்கப்படும் எனவும் தெரிவித்தார்.
விழிப்புணர்வு தேவை:
இந்நிலையில், சமீப காலங்களில் நிலச்சரிவால் பொதுமக்கள் உயிரிழப்புக்கு ஆளாகி வருவது பெரும் கவலையை ஏற்படுத்தி வருகிறது. மேலும், இதுபோன்ற நிலச்சரிவு அபாய இடங்களில், மக்கள் குடியேற்றங்களை தடுப்பதற்கான நடவடிக்கை வேண்டும். மேலும் நிலச்சரிவு குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்பது சமூக ஆர்வலர்களின் கோரிக்கைகளான உள்ளன.