திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் வன்னியர் சங்கம் சார்பில் இட ஒதுக்கீடு போராட்டத்தில் உயிர் நீத்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது


வன்னியர் இட ஒதுக்கீடு போராட்டம்


தமிழ்நாட்டில் மட்டுமில்லாமல் இந்திய அளவில் நடந்த மிகப்பெரிய இட ஒதுக்கீடு போராட்டம், 1987 இல் நடத்தப்பட்ட வன்னியர் சங்கத்தின் இட ஒதுக்கீடு போராட்டம் தான்.‌ வடதமிழ்நாட்டில் பெரும்பான்மை சமுதாயங்களில் ஒன்றாக உள்ள வன்னியர் சமுதாயத்திற்கு, கல்வி மற்றும் வேலை வாய்ப்பு இட ஒதுக்கிட வேண்டும் என பல ஆண்டுகளாக கோரிக்கையை முன்வைத்து வந்தனர். 




 


குறிப்பாக வன்னியர்களுக்கு 20% இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என வன்னியர் சமுதாயத்தினர், பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். 1987 ஆம் ஆண்டு செப்டம்பர் 17ஆம் தேதி பெரியார் பிறந்த நாளில் முன்னிட்டு ஒரு வாரம், தொடர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டது வன்னியர் சங்கம். வன்னியர்களுக்கு தனி இட ஒதுக்கீடு வேண்டும், சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து போராட்டத்தில் ஈடுபட்டது. மிகவும் வீரியமாக நடைபெற்ற இந்த போராட்டம், ஒரு வார காலம் தமிழ்நாட்டை முடக்கி போட்டது என கூறலாம். 


21 பேர் சுட்டுக்கொலை


பல ஆண்டுகளாக இட ஒதுக்கீடு மறுக்கப்பட்ட வன்னிய சமுதாயத்தினர், வீரியத்துடன் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டனர். இட ஒதுக்கீடு போராடும் மக்களிடம் பேச்சுவார்த்தை ஈடுபட்டால், அன்றைய எம்ஜிஆர் தலைமையிலான அதிமுக அரசு போராட்டக்காரர்களை ஒடுக்க முடிவெடுத்தது.




 


காவல்துறையினர் நடத்திய துப்பாக்கி வேட்டையில், போராட்டத்தில் ஈடுபட்ட 21 அப்பாவி வன்னியர் சங்க நிர்வாகிகள் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர். பல ஆயிரக்கணக்கான வன்னியர் சங்க நிர்வாகிகள், வன்னிய சமுதாய இளைஞர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட பிறகு போராட்டம் ஓய்ந்தது. இந்தப் போராட்டத்திற்குப் பிறகு தமிழ்நாட்டில் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியல் உருவாக்கப்பட்டு 108 சமுதாயங்கள் உள்ளடக்கிய இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது. 


வீரவணக்க நாள்


காவல்துறை துப்பாக்கிச் சூட்டில் கொலை செய்யப்பட்ட 21 நபர்களின் நினைவு நாளை, வன்னியர் சங்கம் ' வீர வணக்க நாளாக ' அனுசரித்து வருகிறது. அன்றைய தினம் தமிழ்நாடு முழுவதும் வன்னியர் சங்க நிர்வாகிகள் உயிரிழந்த, இட ஒதுக்கீடு போராட்டத்தில் உயிர் நீர்த்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு நடைபெற்று வருகிறது.


 




 


வந்தவாசியில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி


அந்த வகையில் திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் வன்னியர் சங்கம் சார்பில் இட ஒதுக்கீடு போராட்டத்தில், உயிர் நீத்த தியாகிகளுக்கு வீரவணக்க நாள் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. வந்தவாசி 5 கண் பாலத்தில் இருந்து வன்னியர் சங்கம் ஊர்வலம் தொடங்கியது. ஊர்வலத்தில் வீர வணக்கம் நாள் ஜோதியை கையில் ஏந்தியபடி ஊர்வலம் தொடங்கியது. ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்கள் , மெழுகுவர்த்தியை கையில் ஏந்தியவாறு பங்கேற்றனர்.




 


ஐந்து கண் பாலத்தில் தொடங்கிய இந்த ஊர்வலம், தேரடி, பழைய பேருந்து நிலையம் வழியாக குளத்து மேடு பகுதியை அடைந்தது. தர்மராஜா கோயில் வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த இட ஒதுக்கீடு தியாகிகளின் புகைப்படத்திற்கு, மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. ஊர்வலத்தில் பாட்டாளி மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் கணேஷ் குமார், வன்னியர் சங்க மாவட்ட செயலாளர் மச்சேந்திரன், மாநில மாணவர் அணி செயலாளர் முரளி சங்கர், நகரச் செயலாளர் து. வரதன் உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்