திருவண்ணாமலை மாவட்டத்தில் வண்டல் மண் எடுக்க விருப்பமுள்ள விவசாயிகள் இணையதளம் வாயிலாக விண்ணப்பித்து எடுத்துக் கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் தெ.பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளார்.


இதுதொடர்பாக ஆட்சியர் வெளியிட்ட அறிவிப்பில், தமிழக அரசால் பொதுப்பணித்துறை மற்றும் ஊரக வளர்ச்சிதுறை கட்டுப்பாட்டிலுள்ள ஏரி குளங்களிலிருந்த விவசாயிகள் மண்பாண்டம் செய்வோர் மற்றும் பொதுமக்கள் வண்டல் மண், களிமண் ஆகிய கனிமங்களை இணைய வழியில் விண்ணப்பம் செய்து அந்தந்த வட்டாட்சியர்களின் அனுமதி பெற்று இலவசமாக எடுத்துச் செல்லும் வகையில் தமிழ்நாடு சிறுகனிம சலுகை விதிகள் 1959 விதி எண் 12 (2)-ல் சில மாற்றங்கள் செய்து அரசு ஆணை எண் 14 இயற்கை வளங்கள் (எம்.எம்.சி.1) துறை நாள் 12.06.2024 வெளியிடப்பட்டது.


அதனடிப்படையில் திருவண்ணாமலை மாவட்டத்தில் பொதுப்பணித்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள 265 ஏரிகளும் ஊரக வளர்ச்சி துறையின் கட்டுப்பாட்டில் உள்ள 498 ஏரிகள் மற்றும்  குளங்கள் என மொத்தம் 763 நீர்நிலைகள் கண்டறியப்பட்டு மாவட்ட அரசிதழ் எண் 07 நாள் 19.06.2024-ல் வெளியிடப்பட்டு இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.


எனவே விவசாய நிலத்தை மேம்படுத்த மண்பாண்டம் செய்ய மற்றும் பொது பயன்பாட்டிற்கு வண்டல் மண், களிமண் எடுக்க விரும்பும் விவசாயிகள் மண்பாண்டம் செய்வோர் மற்றும் பொதுமக்கள் அருகில் உள்ள இ-சேவை மையத்தில் https:/www.tnesevai.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பம் செய்து அரசிதழில் வெளியிடப்பட்டுள்ள தங்கள் வட்டத்திற்குட்பட்ட ஏரி, குளங்களிலிருந்து இலவசமாக எடுத்துச் செல்ல அனுமதி பெற்றுக்கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.