திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அடுத்த சுமங்கலி கிராமத்தில் கடந்த 21-ம் தேதி மாரியம்மன் கோயில் திருவிழா நடைபெற்றது. இந்த திருவிழாவில் கிராம மக்கள் அனைவரும் தங்களுடைய குடும்பத்தினருடன் கலந்து கொண்டனர். கோவில் திருவிழா என்றாலே மது அருந்திவிட்டு திருவிழா நடைபெறும் இடத்தில அமர்க்களத்தில் ஈடுபடுவார்கள். இந்த நிலையில் அதே கிராமத்தில் வசிக்கும் 11 வயது சிறுவனை 4 இளைஞர்கள் தனியாக அழைத்துச் சென்றுள்ளனர். திருவிழா நடைபெறும் இடம் அருகே உள்ள ஆஞ்சநேயர் கோயிலின் பின்புறத்தில் சிறுவனை அழைத்து சென்று சிறுவனின் வாயில் வலுக்கட்டாயமாக மதுவை ஊற்றியுள்ளனர். அப்போது சிறுவன் மதுவை ஊற்ற வேண்டாம் என்று கெஞ்சிக் கேட்டும் அவர்கள் விடவில்லை.
சிறுவனுக்கு மது ஊற்றிய 4 இளைஞர்கள்
மேலும், இளைஞர்களின் பிடியில் சிக்கி இருந்த சிறுவன் தப்ப முயன்றுள்ளான். இதனால் ஆத்திரமடைந்த 4 இளைஞர்களும் சிறுவனை நய்யப்புடைத்ததாகவும், மிரட்டியும், தகாத வார்த்தைகளால் திட்டியும், மதுபானம் குடிக்க வைத்துள்ளனர். இதனால் பயந்த சிறுவன் கண்ணீர்விட்டு கதறி அழுதுள்ளார். தொடர்ச்சியாக சிறுவனின் வாயில் மதுவை தொடர்ச்சியாக ஊற்றியதில் சிறுவனுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. பிறகு அங்கு இருந்து சிறுவனை விட்டு சென்றனர். பின்னர், அங்கு இருந்து வீட்டுக்கு சென்ற சிறுவன் போதையில் தள்ளாடி உள்ளான். இந்த சம்பவத்தை 4 இளைஞர்களும் தனது தொலைபேசியில் வீடியோ பதிவு செய்து சமூக வலைதளத்தில் பதிவேற்றம் செய்துள்ளனர். இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலானது. இதற்கு பல்வேறு தரப்பினர் மற்றும் சமூக ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்தனர்.
சிறுவனுக்கு மது ஊற்றிய 4 இளைஞசர்கள் கைது
மேலும், 11 வயது சிறுவனை கட்டாயப்படுத்தி மது குடிக்க வைத்த 4 பேர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர். கோயில் திருவிழா நடைபெறும் நாட்களில் மதுபானக்கடைகளை மூட வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இது தொடர்பாக, பாதிக்கப்பட்ட சிறுவனின் தந்தை கொடுத்த புகாரின் அடிப்படையில் மோரணம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணைக்கு பின்னர், சுமங்கலி கிராமம் அம்மன் கோயில் தெருவில் தெருவைச் சேர்ந்த சக்திவேல் மகன் செந்தில் வயது (26), முருகன் மகன் அஜித்குமார் வயது (25), தாங்கல் ஏரி தெருவைச் சேர்ந்த பழனி மகன் நவீன்குமார் வயது (24) மற்றும் 17 வயது சிறுவன் ஆகிய நான்கு நபர்களையும் காவல்துறையினர் கைது செய்து, செய்யாறு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். பின்னர், 3 பேரும் வேலூர் மத்திய சிறையிலும், 17 வயது சிறுவனை கடலூர் சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் சேர்க்கப்பட்டனர்.இந்த சம்பவம் அப்பகுதி பெற்றோர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.